Sunday, April 19, 2015

அத்தியாயம் 17 - ச்ரத்தாத்ரய விபாக யோகம்

 
 




நம்பிக்கையின் பிரிவுகள்
1
கிருஷ்ணகிருஷ்ண மாதவா சொல்லு-என்றான் அர்ச்சுனன் 
சாத்திரத்தின் கொள்கையை ஒழுகிடாமல் தன்மனக்
கற்பனைக்கு ஏற்பவே வழிபடும்நிலை எது
அவன் குணம் தான் என்னது
Sathva,Rajas,Thamas:17:2 to 2,3
உடலைக்-கொண்ட ஆத்துமா கொள்ளும்-இயற்கைக் கேற்பவே
மனிதன்கொள்ளும் நம்பிக்கை மூன்றுவிதமாய் ஆகுது
பலவிதமாம் இயற்கைகுணம் தனக்குக்கீழே இருக்குமோர்
இருப்பிற்கேற்ப நம்பிக்கை தன்னைவிருத்தி செய்கிறான்  
4-6
சத்வகுணர் தேவரை ரஜசகுணர் யக்ஷரை
தமசகுணர் ப்ரேதபூத அரைகுறையாம் ஆவியை
பூஜைசெய்து வாழ்கிறார் அதனில் மகிழ்வு கொள்கிறார்
சாத்திரத்தின் பாற்படா கடுந்தவமும் விரதமும்
தற்குறியாய் காமத்தின் ஆளுகையால் செய்கிறார்
இவர்கள்-ரஜசர் ஆகிறார். பரமபுருஷன் உடலுறை
நாயகனாய் ஆனதால் உடல்வருத்தல் உண்மையில்
இறைவருத்தல் ஆகுது அவர்அசுரர் அறிந்திடு  
7
மனிதன்ஒவ்வொ ருவனும் உண்ணும்உணவு இயற்கையின்
குணத்திற்கேப்ப அமையுது முவ்விதமாய் அமையுது
இவ்விதமாய் அமைவது யாகம்-தானம் தவத்திலும்
கூடக் காணலகுது வரைமுறையாய் அமையுது
8-10
சாத்துவீக உணவுகள் ஆயுள்தன்னைப் பெருக்குது
தூய்மை-கொண்டு சேர்க்குது சுகம்சுகா தாரம்பலம்
திருப்திதன்னை அளிக்குது இவ்வகையாம் உணவுகள்
இனிமைகூடி ரசமுமாகி உடலைஉரப்ப டுத்துது
கசப்பு-புளிப்பு உப்புடன் காரம்சேர்ந்த உணவுகள்
ரஜோகுணத்தின் பாலது உலர்ந்திருக்கு முணவுமற்றும்
எரியும்உணவு ரஜசமாம் வலியும்-நோயும் சேர்க்குமாம்
மூன்றுமணி நேரம்முன்பு சமைத்தஉணவும் பழையதும்
ஊசிப்போன சீரழிந்த தூய்மையற்ற உணவுமே
தாமசம் பாற்பட்டது தமசமக்கள் விழைவது
17:11
கடன்எனாது கடமையாய் முறைகெடாமல் நெறியுமாய்
பலன்படாத யாகயக்ஞம் சத்வம்சார்ந்த தாகுமாம்
12
உலக-வாழ்வில்  பலன்-பெற வேண்டும்என்றொரு நோக்கமோ
அன்றிமற்றும் பிறிதொரு லாபம்-கருதி வீண்வழி
தற்பெருமை தன்னிலே செய்யும் யாகமானது
ரஜோகுணத்தைச் சார்ந்தது என்றுநீயும் உணர்ந்திடு
13
சாத்திரத்தின் விதிமுறை தன்னின்-உண்மை உணர்ந்திடா
திருந்துநல்ப்ர சாதமாம் உணவைப்பகிர்ந்தி டாமல்நல்
முறையில்வேத மந்திரம் தனைச்சிரத்தை சந்தமாய்
ஒதிடாமல் வேதியர் தனக்குஉரிய தட்சிணை
தனைத்தராமல் நம்பிக்கை கொளாதயாகம் தமசமாம்
14
ஆதிபூர்ண ஆண்டவன் வேதம்ஓதும் அந்தணன்
அன்னைதந்தை குருவையும் வணங்கித்தூய்மை கொள்வது
எளிமைகொண்டு வாழ்வது சிற்றின்பம் துறப்பது
அஹிம்சைகைகொண் டிருப்பது  என்பஉடல்சார் தவங்களாம் 
15
வாய்மைகொண்டு நன்மைசெய் மென்மைகொண்டு பேசிவை
வேதம்தன்னை ஒதிவை இவைகளாகும் நாதவம்*
நாதவம்*= வாக்கு தவம்
16
சாந்தம்எளிமை கம்பீரம் மனதின்கட்டுப் பாட்டுடன்
அதனின்தூய்மை என்பவை மனதின்தவங்கள் ஆகுமே
17
உலகவாழ்வின் லாபமும் சுயநலத்தின் லோபமும்
அற்றுபரம புருஷனை திருப்திசெய்யப் புரிந்திடும்
இவைகள்யாவும் சத்துவ குணத்தைச்சார்ந்த அறிந்திடு 
18
மதிப்புமரி யாதைவணக்கம் தன்னைப்பெறச் செய்யும்போலி
பகட்டுத்தவமும் விரதமும் தமோகுணமே ஆகுமே
19
கொடூரச்சுய வருத்தலும் பிறரின்துன்பம் அழிவினை
நோக்கிச்செய்யும் தவங்களும் பிரிதுமாக இங்ஙனம்
கொள்ளும் விரதபூஜையும் விரயம்அன்றோ அருச்சுனா
நல்லஅல்ல இவைகளும் அதமத்தமசம்  அல்லவோ  
20
ஞாலம்கருதி அன்றிப்பெரும் ஞானம்ஒன்றே கருதியே  
உரியகாலம் இடம்தனில் உரியமனிதர் தனக்குமே
செய்வதெந்தன் கடமையே என்றுகொள்ளும்  குணமது
உத்தமமாய் ஆகுது சத்வம்அதே அறிந்திடு
21
பலன்கருதிக் கொடுக்குமோர் விருப்பமின்றி இருக்குமோர்
தானம்ரஜசம் ஆகுமாம் அதற்குக்குறைவு ஞானமாம்
22
இடமும்காலம் தன்னையும் கருதிடாமல் உரியவர்
இடம்தனில்சே ராமலும் கவனமின்றி லட்சியம்
திடம்இலாமல் செய்திடும் தானம்வீணே கீழ்ப்படும்
தமசம்என்று அதனைநீ அறிந்திடுவாய் அருச்சுனா
23
படைப்புதோன்றி இயங்கிய ஆதிகாலம் தொட்டுமே
ஓம்தத்சத் என்றமூ  வெழுத்துசேர்ந்து பரமமாம்
பூர்ணஉண்மை தன்னையே குறிப்பிடுதல் ஆகவே
வேதகோஷம் தன்னிலும்ன யாகயஞ்யம் தன்னிலும்
பரமபுருஷன் தன்னையே த்ருப்திசெய்தல் வேண்டியே
உச்சரித்தல் வழக்கமாம் பரமன்நினைவை ஊட்டுமாம்  
24
இங்கனமாய் சாதுக்கள் ஓமின்பிரணவ நாதத்தை
சொல்லித்தொடங்கி யாகத்தை தானம்தவங்கள் தன்னையே
அவனைஅடையச் செய்தர் சிறந்தமேன்மை எய்தினர்
25
தத்திவாழும் வாழ்வினை சத்திலாத சித்தினை
வித்திலாமல் செய்திட "தத்"தின் நாதம் தன்னுடன்
தானம்தவம் யாவையும் நன்குசெய்த லேமுறை
பிறகுசென்று போகுமே மாயமென்னும் ஓர்சிறை
 
26-27
பக்தியாகம் தன்னின்நோக்கம் பூர்ணஉண்மை ஒன்றுமே
சுத்த”சத்”தின் சொல்லினால் இதனை உணரலாகுமே
பூர்ணஇயற்கை தனக்கு-ச்ரத்தை கொண்டுசெய்யும் யாகமும்
தானம்தவம் யாவையும் ஆதிபகவன் தன்னையே
த்ருப்திசெய்து உய்யவே  கர்மயோக மும்இதே     
28
பரமபுருஷன் ஒருவனின் மீதுகொண்ட நம்பிக்கை
அற்றுமே  புரிந்திடும் யாகயக்ஞம் தானமும்
பரந்தயோகத் தவங்களும் சிறந்ததல்ல நிரந்தரம்
அதனில்இல்லை அருச்சுனா அவைகள்-அசத் என்றுமே
அழைக்கப்படும் பயன்படா  இம்மைமறுமை இரண்டிலே

 
 


அத்தியாயம் 16 - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்



 

தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
1-5
அச்சமின்மை நிறைந்ததூய்மை ஆன்மஞானம் பெருக்கஆசை
தானம்தவம் யாகம்செய்தல் வேதம்கற்றல் வாய்மைஎளிமை
அஹிம்ஸை பூண்டு கோபம்விடுதல் துறவுசாந்தி
குற்றம்காணல் விட்டுத்தள்ளல் கருணையும்பே ராசைதள்ளல்
இதம்நிதானம் கொண்டு உண்மை பாவம்தன்னிலுற் சாகம்கொள்ளல்
வலிமைமன் னிக்கும்தன்மை தூய்மைகொண்டுபொ றாமைதள்ளல்
பற்றுவிடு பட்டதன்மை கொண்டுஏக்க மின்றிவாழல்
யாவும்சாது சாதகன் இயல்பதாக ஆகுமே
பெருமைஅகந்தை வீணபிமா னம்கொடூரம் கோபம்மற்றும்
அஞ்ஞானம் இவைகள்யாவும் அசுரகுணங்கள் அருச்சுனா
தெய்வசத்வ குணங்கள்சிறந்த தன்மைதன்னை கொண்டவை
விடுதலைகொ டுப்பவை இருண்டஅசுர குணங்களோ
கொடும்தளை படுப்பவை இதனைஅறிநீ பாண்டவா
சிறந்தசத்வ குணத்தினைக் கொண்டநல்ல ருச்சுனா

6-10
இந்தஉலகில் உறைந்திடும் உயிர்கள்இரண்டு வகையின
ஒன்றுதெய்வத் தன்மைய மீதமசுர மாவன
அசுரகுணத்தின் தன்மையை விளக்கமாக உனக்குநான்
கூறிடவே விழைகிறேன் கவனமாகக் கேட்டிடு
செய்வதென்ன செய்திட விடுப்பதென்ன என்பதை
அறிந்திடாத பிறவியாம் புரிந்திடாத மடமையாம்
தூய்மையான நடத்தையோ உண்மையறிவின் தன்மையோ
எய்திடாத பிறவியாம் கொடியசெயலின் கருவியாம்
உலகம் பொய்மையானது அதனைப் படைப்பதாவது
ஜகத்தை ஆள்வதாரது கடவுள்வெறும் பேரது
உலகைஆசை படைக்குது அதனைக்கட்டி ஆளுது
என்றுசொல்லித் திரிவது அசுரம்என்றே அறிந்திடு
அறிவிலாத ஒருவராய் தவறில்செய்த முடிவினால்
தவறித்திரிந்து வாழ்கிறார் அசுரர்தம்மை இழக்கிறார்
உலகில்வாழும் பிறர்க்குபொல் லாமைசெய்து அழிக்கிறார்
பலதும்செய்யத் துடிக்கிறார் பலத்தைக்காட்டி நடிக்கிறார்
நிறைவுறாத காமம்வீண் பெருமைப்பொய்யில் கெளரவம்
இவற்றில்-தஞ்சம் புகுந்தவர் மயக்கம்தன்னில் விழுந்தவர்
தூய்மையற்ற செயல்களில் ஈடுபட்டு-நிரந்தரம் அற்றபேரின்பின்சென்று
வாய்மைதன்னை தூஷித்து வாழ்வர்சிறியர் அசுரரே
 
 10
அசுரத்தன்மை உடையவர் அடங்கிடாத ஆசையும்
வீண்பெருமை இழிந்தபொய் கெளரத்தின் மடியிலே
புகழடைந்து வாழ்கிறார் மயக்கம்கொண்டு உழல்கிறார்
தூய்மையற்ற செய்கையால் மாயக்கவர்ச்சி கொள்கிறார்
11-12
வாழ்வுதன்னின் முடிவது வரையில்புலனின் திருப்தியில்
ஈடுபாடு மனிதனின் தேவைஎன்று நினைக்கிறார்
அவர்கவலை அளவிலா திருக்குமென்று அறிந்திடு
காமம்கோபம் இவைகளின் பிடியில்சிக்கி புலன்வழி
சென்றுஅதனின் நுகர்வினில் நியாயமற்ற வழிகளில்
செல்வம்தன்னைச் சேர்க்கிறார் புல்லுணர்வில் மாய்கிறார்
13-15
அசுரகுணத்தில் இருப்பவன் நினைப்பதென்ப தாவது
சிறந்தசெல்வன் நானடா மேலும்செல்வம் எனக்காடா 
வந்திடுமெந்நாளிலும் செல்வம்குவிப் பேனடா
எதிரிஎன்று வருபவர் எவருமிங்கு யாரடா
நான்கடவுள் தானடா நான்பலவான் பாரடா
உலகின்சுகங்கள் அனைத்தின்-உரிமை எனக்குமட்டும் தானடா
செல்வம்சூழ இருக்கும்என்னைப் போலஒருவன் யாரடா
எந்தயாகம் செய்யணும் என்னதானம் கொடுக்கணும்
செய்துபலனை அடையுவேன் சொல்லுசொல்லு மடையனே
என்றுகூறி மமதையின் மயக்கம் கொண்டு ஆடுவான்
16-20
கவலைசூழ்ந்த ஒருவனாய் குழப்பமுற்ற அதமனாய்
மாயைசூழ்ந்து புலனிடம் பற்றுகொண்டு நரகுற
கீழிறங்கி இழிகிறான் பாழ்கிணற்றில் விழுகிறான்
அசுரன்என்ற கீழ்நிலை தன்னில்-நீண்டு வாழ்கிறான்
 திமிர்பிடித்து சுயநலம் தன்னில்ஆழ்ந்து செல்வம்பின்
பொலிகௌர  வம்தனில் மயங்கிநல்ல நெறிமுறை
தன்னிலின்று விலகியே தன்மதியும் கலங்கியே
பெயர்பெறவே யாகமும் யக்ஞங்களும் செய்கிறார்
பொய்பெருமை சுயநலம் காமம்கோபம் கொடும்பலம்
கொண்டு-மயங்கி தன்னுறை மற்றும்-மற்ற பேருறை
இறைவிரையை இழிக்கிறார் பொல்லழுக்கைக் கொள்கிறார்
உண்மைமதம் என்னவென்று மறந்துமதம் கொள்கிறார்
மனிதரிலே கடையராம் அழுக்கின்ஆறு குறும்பினைக்
கொண்டஅசுரர் மாயமாம் கடலில்அசுரர் இனமென
மூழ்கிமூழ்கித் தாழ்கிறார் வாழ்ந்துவாழ்ந்து மாய்கிறார்
இவ்விதமாய் இச்சிறார் என்னால்தள்ளப் படுகிறார்
அசுரத்தனம் கொண்டுவாழ் உயிரினத்தில் சுழற்சியாய்
பிறவிகொண்டு வாழ்கிறார் என்றுமென்னை அடையவே
எண்ணமின்றி வாழ்கிறார் உலகவாழ்வில் கிரமமாய்
கீழிறங்கித் தாழ்கிறார் கடைநிலையில் மூழ்கிறார்
21-24
நரகம்தன்னின் வாயிலாம் காமம்கோபம் ஆசையாம்
இவைகள்மூன்றும் மனிதனை அழிவு-நோக்கிச் செலுத்துமாம்
இதனைஅறிந்து அறிவுளோர் இதனைத்துறக்க வேண்டுமாம்
இதனிலிருந்து தப்பிப்பின் தன்னைஉணர்ந்து அறிந்திட
ஏதுவான செயல்களைச் பிறஉயிர்துயர் துடைத்தலைச்
செய்துஉயர்தல் சாதகன் செய்யநன்மை ஆகுமாம் 

சாத்திரத்தின் நெறிகளை சரிப்படஉ ணர்ந்திடா
திருந்தவை தனைப்புறக் கணித்துபின் தனிச்சையாய்
சரியிலாச செயல்படும் ஒருவன்பக்கு வத்தையோ
பரமபதத்தின் சுகத்தையோ பரமன்அடியின் இலக்கையோ
அடைதல்இல்லை இல்லையே அவனின்வாழ்வு தொல்லையே
சாத்திரத்தின் விதிமுறை அறிந்து ஒருவன் உணரணும்
கடமைஎது செயவொணாத மடமைஎது என்பதை
அறிந்துஅவனும் கொள்ளணும் உணர்ந்தபிறகு கிரமமாய்
செயல்புரிந்து உழைக்கணும் மயக்கம்தீர்ந்து உயரணும்

 

அத்தியாயம் 18 - மோக்ஷ சந்யாச யோகம்






 
முடிவு: துறவின் பக்குவம்
1-5
ஆண்டவனே நீ எனக்குச் சொல்லு
அந்தத் துறவுதன்னின் நோக்கம்என்ன வென்று
வாழ்வில் துறவு என்பதென்ன வென்று
நான் அறியவேண்டும் புரிந்திடவே சொல்லு
கடவுள்பதில் கூறினார் பளிங்கெனவே விளக்கினார்
செயலின்பலனைத் துறப்பதே துறவுஎன்று ஆகுது
பலன்கருதும் செயல்களைத் துறக்கநீயும் பழகணும்
பிறர் நலன்கருதும் யாகம்தானம்  தவம்எனும்விரை
செயல்களை நீ த்யாகமாகச் செய்யணும்
என்றுமுனிவர் கூறுவர் இதனைமனதில் ஆரணும்
மனிதர்களில் சிறந்தவா வீரப்புலி ஆனவா
சாத்திரத்தில் மூவகைத் துறவுஉண்டு அறிந்திடு
யாகம்தானம் தவத்தினை துறத்தல் துறவுஅன்றடா
இவைகள்மகாத் மாவையும் தூய்மையாக்கும் செம்மையாய்
 
6-10
பலன்படாமல் கடமையாய் இவைகள்தன்னைப் புரியணும்
மனம்கெடாமல் இதனைநீ என்முடிவாய் அறியணும் 
நியமமான கடமையை துறத்தல்என்றும் ஆகாது
மயக்கமாக அதைத்துறந்தால் சத்வமாக ஆகாது
இவைதுறத்தல் கீழ்ப்படுத்தும் தமசமாகும் கேடாகும் 
தொல்லைஎன்று கடமையை பயத்தைக்கொண்டு அதனையே
துறக்கும்குணம் ரஜசமாம் இவைகள்என்றும் துறவெனும்
உயர்நிலைக்கு மனிதனை உயர்த்திடாது அருச்சுனா
செயல்புரியும் கடமையைக் கருதிப்பலனில் பொருதிடா
திருந்துதன் மனத்தினில் பற்றிலாது கடமையை
செய்திருத்தல் மட்டுமே சுத்தமான சத்வமே
சத்வகுணத்தில் நிலைத்தவர் அமங்கலத்தில் அகப்படார்
அதனிலசூ யையும்படார் மங்கலம் எனப்படும்
செயல்பலன் தன்னையும் பற்றிடாத பாங்கினார்
இவண்இவர் இருத்தலால் இவர்மனம் தனில்ஒரு
ஐயம்என்ப தில்லையே இவர்கள்மனது  வெள்ளையே  
 
11
உடல்எடுத்த மானிடன் செயல்துறத்தல் எங்கனம்
அதைத்துறக்க முற்படின் அவைதுரத்தும் அக்கணம்
எனினும்செயலின் பலனையே துறப்பதென்ப தோர்வழி
இருக்குதிங்கு ஓர்பழி சேர்த்திடாது என்மொழி
12
பலன்துறக்கா மானிடன் தனைத் துரத்தும்விளைவுகள்
விரும்பிடாத விளைவுகள் *விரும்பத்தக்க நுழைவுகள்
மற்றுமிவ்வி ரண்டுமே கலந்ததான கலவைகள்
தொடர்ந்திருக்கு மேயானால் துறவுநிலை செயல்களில்
இந்தவிளைவு இல்லையே இன்பதுன்பம் தொல்லையே

*விரும்பத்தக்க நுழைவுகள்=விரும்பகூடிய விளைவுகள் , அனால் பின்னர் துன்பத்தில் படுத்தும் நுழைவாயில்கள்
13-14
அனைத்துச் செயலின் முழுமையைக் கொடுக்கும்-மூலம்
ஐந்துமாய் சாங்கியத்தில்இருக்குது அவைகள்தன்னை அறிந்திடு
இடம்-புலன்கள் செய்பவன் முயற்சிமற்றும் ஆண்டவன்
என்பதவை புரிந்துகொள் சிந்தனையில் கொண்டுநில் 
15
உடல்மனது சொல்லினால் செய்யும்செயல்கள் யாவுமே
ஐந்துகார ணங்களால் வருவஎன்று அறிந்திடு
16
இதைமறந்து செயல்களைப் புரிந்ததுநான் என்பவன்
பேதைஎன்று அறிந்திடு உண்மைதன்னை அறியவே
முடிந்திடாத ஒருவனாய் அவனைநீயும் கருதிடு
17
எவனொருவன் பொய்படும் அகங்காரம் எனப்படும்
தனையறிதல் தடுத்திடும் கீழ்மையிலா ஒருவனோ
எவன்அறிவு சிக்குறா திருந்துஒளி வீசுதோ
அம்மனிதன் பூவிலே கொலைசெயினும் பெரியனே
அவைகளின் தளைதனில் அடங்கிடாத ஒருவனே   
 
18
அறிவுமற்றும் அறிபவன் அறிவுதன்னின் இலட்சியம்
இவைகள்செயலைத் தூண்டிடும் மூன்றுவகைக் காரணம்
புலன்கள்செயல் செய்பவன் இன்னமூன்றும் செயல்களின்
அடித்தளமாய் அறிந்திடு ப்ருதாபுத்ர பார்த்தனே
19
ஜடஇயல்பின் முக்குணம் தனக்குஏற்ப செயல்களும்
அறிவுசெயல் செய்பவன் மூன்றும்மூன்று விதங்களாய்
மாறித்தோன்றும் இதனைநான் விவரிப்பேன்நீ கேட்டிடு
20
எந்தஅறிவு வேற்றுமை தனிலும்ஒருமை காணுதோ
அந்தஅறிவு சத்துவம் என்றவிந்த தத்துவம்
தன்னைமனதில் கொண்டிடு உண்மைஅறிவைக் கொண்டிரு  
21
உடலில்வாழும் உயிரினை பிரிந்துப்பலதாய்க் காண்பது
ரஜசம்என்றே ஆகுது சத்வம்இல்லை அறிந்திடு
22
உண்மைதன்னின் அறிவிலா மனதுகொண்ட சத்திலா
நினைப்பினாலே அதனையே அனைத்துமாக எண்ணியே
செயல்படும் பயன்படாத் தன்மைததமசம் ஆகுது
23
விருப்புவெறுப்பு இன்றியே பற்றுசற்று மின்றியே
கடமைசெய்து விளைபலன் துறந்துஆற்றும் செயல்களே
சத்வகுணச் செயல்களை ஆகிநன்மை சேர்க்குது
24
தனதுஆசை தன்னைப்பூர்த்தி  செய்யுகின்ற சிறியபுத்தி
மனதுகொண்ட தானின்-உணர்வில் பெரியமுயற்சி ஆகும்செயலில்
சத்வம்எங்கு அர்ச்சுனா  ராஜசம்அதே பல்குணா
25
நாளைநடக்கும் விளைவையோ தளைப்படுத்து வதனையோ
கருதிடாமல் மயக்கமாய் துஷ்டஅறி யாமையால்
பிறர்க்குத்தீமை விளைப்பதாய் அசாத்யமாக செய்வதாய்
அமைந்தசெயல்கள் தமசமே தமசம்மிகவும் அதமமே
26
அனைத்து ஜடப்பற்றுகள் பொய்யின்கங் காரங்கள்
விடுப்புபெற்றுற் சாகமும் நிச்யமான திடமையும்
உடையவனாய் வெற்றியை மற்றும்துவளும் தோல்வியைக்
கண்டிடாமல் செயல்படும் ஒருவன்சாது சத்வனாம்  
27
உழைப்பின்பலனில் பற்றுடன் அதைச்சுகிக்கும் துடிப்புடன்
தூய்மையின்றி கேடழுக் காறுபேரா சையுடன்
இன்பதுன்ப விளைவினால் நிலைகுலைந் திடும்அவன்
ரஜோகுணத்தன் அர்ச்சுனா அவன்பெரும் சமர்த்தனா ?
28
சாத்திரத்தின் விதிமுறை தனைத்துறந்து அதன்படி
நடந்திடாத அசடனாய் உடன்படாத முரடனாய்
இழிந்தபிடி வாதனாய் ஏய்க்கும்ஏசும் சமர்த்தனாய்
கடுகடுத்த முகத்தினன் ஆயிருக்கும் சோம்பேறி
காலம்தாழ்த்தும் அறிவிலி தமோகுணத்தின் பிரதிநிதி
29
முக்குணத்தின் வழிப்படி மூன்றறிவும் உறுதியும்
அமைவதென்ப தெப்படி என்றுசொல்வேன் கேளுநீ         
30
செய்வதென்ப தென்னது செயத்தகாத தென்னது
பயப்படும் அதுஎது பயப்படத் தகாதஒன்று
என்னஎன்ன என்னது பிணைப்பது எதுவிடுப்பு
அளிப்பதென்ப தென்னது என்றறிய வைப்பது
விவேகம் என்றேஆகுது அவ்விவேக மானது
உத்தமத்தில் இருப்பது சத்துவத்தில் நிலைத்தது
31
அறநெறியின் பட்டது புறநெறியின் பட்டது
ஆற்றவேண்டும் செயலது ஆற்றவொண்ணா தென்னது
எனப்பகுத் தறிந்திடுமோர் திறன்இலாத நிலைஅது
ரஜோகுணம் ஆகுது சத்வத்திற்குக் கீழது
32
புலையறத்தை அறமென அறத்தைப்புலை அறமென
மயக்கம்அறி யாமைஇருள் இவைகள்தரும்  விளைவினால்
முடிவுகட்டி சரியிலாத வழியில்முயற்சி செய்வது
தாமசத்தில் இருக்குது மாயமவரை இறுக்குது
33
உடைபடாத வொன்றுமாய் யோகம்தன்னின்  பயிற்சிஒன்றால்
திடம்கெடாத வண்ணம்என்றும்  காத்திருக்கும் நன்றுமாய்
இவண்மனம் புலன்களும் அடக்குகின்ற திறமுமாய்
எவண்உள எனப்புக சத்வம்ஆகும் உதயமாய்        
34
அறம்பொருள் செயல்பலன் சிறப்பினில் விருப்பினை
புலன்நுகர் பலன்தரும் செயல்களில் விழைவினை
நலன்எனப் படும்விதம் மனத்துடை அயர்வினை
பலர்கொள அவர்ரஜோ குணத்துளர் எனநினை
35
கனவுபயம் கவலையும் கடுகடுப்பு மயக்கமும்
இதைக் கடக்கும்திறன் இன்மையும் தாமசமாய்ஆகுது
 
Bhajan,Seva,Dhyanam 18:36-37
சிறையில்பட்ட ஆத்துமா விரைவில்விடுத லைபெற
பஜனைத்யானம் சேவையாம் மூன்றுசுகமும் தேவையாம்
இதனைப்பற்றி இருப்பதால் துயரம்அனைத்தும் விடியுமாம்
முதலில் விஷம்போ லாயினும் முடிவில்அமுத மாயிடும்
ஆன்மஉணர்வு என்கிற விழிப்பளிக்கும் சுகம்தரும்
நிலைமைசத்வம் என்பதாம் அதனில்-சத்யம் இருக்குதாம்
38
புலன்தொடர்பில் வரும்சுகம் முதலில்அமுதம் ஆகுது
பழகபழகப் புரியுது விஷத்தின்விஷய மாய்அது
ரஜோகுணத்தி னாலது இப்படியாம் ஆவது
39
ஆன்மஉணர்வைக் கண்டிடா திருந்துமுழுதும் மயக்கமாய்
இருக்கும்தூக்கம் சோம்பலும் மயக்கம்தன்னில் வரும்சுகம்  
சொல்லஎன்ன இருக்குது தமசமென்ற இருளது
40
நிலவுலகம் மற்றும்மேல் உயர்உலகம் தன்னிலோ
மனிதர்மற்றும் தேவர்கள் இடையில்உள்ள குணங்களோ
சத்வரஜஸ தமசமென்ற மூன்றுக்குள்தான்  இருக்குது
இவற்றின்பிடியில் இருந்துவிடு பட்டவர்கள் வேரிலர்
41
இயற்கைதந்த குணநலன் தனக்குஇயைந்த தன்செயல்
தன்மைக்கேற்ப அந்தணர் ஆள்வோர்வணிகர் உழைப்பவர்
என்றுபகுத்த வரையறைப் படியவரும் இருக்கிறார்
42
அமைதிதவம் அடக்கமும் தூய்மைபொறுமை நேர்மையும்
விவேகமறிவு ஆதிக்கம் என்றதன்மை யின்படி
செயல்படணும் அந்தணர் என்பதுதான் நெறிமுறை
43
தீரம்வலிமை உறுதிவளமை போரில்வீரம் மற்றும்ஈகை
தலைமைதாங்கும் அந்தக்கடமை அரசர்க்குரிய நெறிமுறை
44
பயிர்வளர்த்தல் கால்நடை தனைவளர்த்தல் வாணிபம்
இவைபுரிதல் வணிகரின் வகுத்தளித்த கடமையாம்
உழைப்புதரும் நாலவர் பிறர்நலனைக் கருதியே
அதைத்தருதல் நெறிமுறை என்றுஆகும் வரைமுறை
45
தன்கடமைத் தன்மையை செய்திருத்தல் ஒருவனைப்
பக்குவமாய் ஆக்குது நிச்சயமாய் ஆகுது
அவன்செயலை அவனவன் எப்படித்தான் செய்வது
எனஉரைப்பேன் பாண்டவா கேட்டிடுவாய் அருச்சுனா
46
அனைத்துயிரின் மூலமும் எங்கும்நிறை பிரமும்
ஆனஇறைவன் ஒருவனைப் போற்றிடும்வழி  பாட்டினால்
தனதுகடமை ஆற்றினால் பக்குவத்தை எய்தலாம்
47
பிறிதொருவன் கடமையை திறம்படநீ செய்தலின் 
பிழைபடினும் உன்கடன் தனைப்புரிதல் உசிதமாம்
இயற்கைசார்ந்த கடமைகள் பாபமில்லை பார்த்தனே
அதனைச்செய்தல் என்பது ஷேமம்கொண்டு சேர்க்குமே
48
நெருப்புசூழ் புகையென செயலில்சூழ் பிழைவரும்
எனினும்இயற்கை நெறிப்படி விதித்ததொழிலே உருப்படி
49
துறவுதன்னின் பலன்களை புலனடக்கம் பற்றின்மை
ஜடசுகத்தின் துறவினால் அடைந்திதுல் ஆகுது
துறவுதன்னின் உயர்நிலை இப்படித்தான் இருக்குது
50
சுருக்கிக்கூறும் என்னிடம் பரமபிரம்ம பக்குவ
நிலையைஅடையும் வழியினை கற்றுக்கொள்வாய் பல்குணா
51-53
அறிவுகொண்டு தூய்மைகண்டு உறுதிகொண்டு அடக்கம்கண்டு
புலன்நுகர்வை விலக்கிக்கொண்டு விருப்பினின்று விடுப்புகண்டு
தனியிடத்தில் வாழ்கிறான் உணவுசிறிது உண்கிறான்
உடலும்நாவும் கட்டிவைத்து உயர்ந்ததியானம் ஆழ்கிறான்
பற்றுவிட்டு பொய்மையான கர்வம்வலிமை பெருமைவிட்டு
காமம்கோபம் ஜடப்பொருளை ஏற்கும்தன்மை தனையும்விட்டு
இருக்கும்மஹான் ஆனவன் ஆன்மஉணர்வின் உயர்நிலை
தனக்குஉயர்ந்து செல்கிறான் தானிலாதான் ஆகிறான்
54
இந்நிலையே உயர்நிலை பரமன்கூடும் இறைநிலை
இந்நிலையில் துயரிலை கவலைஇலை விருப்பிலை
எந்நிலையில் ஆயினும்பிற உயிரில்கொள்வான் சமநிலை
இந்தநிலை தூய்மையான பக்தித்தொண்டின் உயர்நிலை 
55
பக்திகொண்ட சேவையே கடவுள்காட்டும் பாதையே
முக்திவாசல் கதவினை காட்டும் அன்புசேவையே
56
இவ்விதமாய் ஆனவன் என்நிழலில் இருப்பவன்
பல்செயலைப் புரியினும் தீதிலாமல் சிறப்பவன்
என்கருணை அருளினால் நித்தியத்தின் தலத்தினை  
அவனும்வந்து அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்
Karma Yoga: 18-57
செயல்புரி செயல்புரி பயந்திடாமே செயல்புரி
செயல்புரி செயல்புரி பயன்தேடாமே செயல்புரி
செயல்புரி செயல்புரி எனைப்பணிந்து செயல்புரி
செயல்புரி செயல்புரி எனதுகாப்பில் செயல்புரி
செயல்புரி செயல்புரி பக்திதொண்டில் செயல்புரி
செயல்புரி செயல்புரி பிறகுநீயு..மேஹரி
58
என்னுணர்வில் மெய்யனாய் இருக்கநீயு மருச்சுனா
எனதுகருணை அருளினால் கட்டுவிண்டு மீளுவாய்
உனதுஉணர்வில் பொய்யனாய் இருக்கநீயு மருச்சுனா
இழந்துஉன்னை வாடுவாய் இழிந்துதானே போகுவாய்
59
எனதுஆணை மீறினால் செயல்துறந்த கேடினால்
தவறிநீயும் வாடுவாய் பதறிப்பதறி மயங்குவாய்
உனதுஇயற்கைக் கடமையாம் போரிடுதல் என்பதை
அறிந்துநீயும் நிற்கணும் எதிர்த்தபேரை வெல்லணும்
60
குந்தித்தாயின் மைந்தனே மயக்கம்கொண்ட மன்னனே
மதிமயங்கி நிற்கிறாய் எனதுஆணை மறுக்கிறாய்
எனினும்உனது இயற்படி நடந்திடாமல் மீறிநீ
செல்வதென்ப தெப்படி செயல்படுவாய்யென் எண்ணப்படி
61
ஆதிபூர்ண ஆண்டவன் அனைத்துயிரின் காவலன்
அனைத்துயிர் இயக்கத்தை அவரல்லவா செய்கிறார்
62
முழுமையாக அருச்சுனா சரணடைநீ அவரையே
அவர்கருணை ஒன்றினால் தெய்வஅமைதி கொள்ளுவாய்
பரமநித்யத் தலமெனும் பரமபதமும் எய்துவாய்
63
அனைத்துஞானம் யாவினும் ரஹசியமாம் இதனைநான்    
உனக்குவிளக்கி இருக்கிறேன் சிந்தித்திதை செயல்படு
உன்விருப்பம் எதுவென சித்தித்ததை செயல்படு
64
நண்பன்எனக்கு நீயடா ஞானம்உனக்குத் தானடா
நமக்குள்என்ன ரஹஸியமோ என்றுஎண்ணித் தானடா
உனக்குத்தந்தேன் நானடா உனதுநன்மை கேளடா
65
எப்பொழுதும் முப்பொழுதும் எனைநினைத்து பக்திசெய்
எனதுபக்த னாகிஉன் வணக்கம்தனை கணமும்சொல்
எனதுமனது நினதுஎன்று நண்பாஉறுதி சொல்கிறேன் 
66
மதம்தனைக் கடந்திடு சரண்புகு உடன்புகு
பவம்தனை அகற்றுவேன் பயம்தனை கடந்திடு
67
தவம்விடுத்த மானிடர் பக்தியற்ற ஓர்பதர்
பவம்விலக்கு மன்புச்சேவை புரிந்திடாத மானவர்
அழுக்கினாறு ஓடிப்புரை யோடிப்போன மானிடர்
தனக்கிதை விளக்குதல் என்பதாகா தாகாதே
Palashruthi: 18:68-71
பக்தரிடம் பரமமாம் இவ்விரஹ சியம்தனை
விளக்கும் மனிதன் தனக்குமே அவனின்பக்தி
உறுதியை உத்ரவாதம்செய்கிறேன் அவன்முடிவின் இறுதியில்
எனைஅடைவான் நிச்சயம் அவன்கடப்பான் எமபயம்

69
அவனைவிடப் ப்ரியசுதன் எனக்குவேறு எவருளர்?
70
இப்புனிதஉரை யாடலைக் கற்பவன்தன தறிவினால்
எனைப்பணி வழிபாட்டினை செய்யுகிறான்  என்றுநான்
அறிவிவிக்கவே செய்கிறேன் தெரிவிக்கவே செய்கிறேன்   
71
பொல்லழுக்கா றிலாமலும் நல்நம்பிக்கை விடாமலும்
எவனொருவன் இதனையே கேட்டுமகிழ் கொள்வனோ
அவன்பவபய விளைவினைக் கடந்துநல்லோர் உலகினை
அடைந்துபயன் பெறுகிறான் விரைந்துநலன் பெறுகிறான்
72
கவனமான மனத்துடன் அருச்சுனாகேட் டாயாநீ
உனதுமயக்கம் அறியாமை அனைத்தும்நீங்கித் தெளிவினை
அடைந்தனையா கௌந்தேயா எழுந்திருப்பாய் என்நண்பா 
73
எனதுஅன்பு கிருட்டினா நிலைபிறழா ஒருத்தனாய்
உனதுஅருட் கருணையால் மீண்டும்நினைவு பெற்றுளேன்
இப்பொழுது நான்பெரும் உறுதிகொண்ட மானிடன்
எனதுஐயம் யாவையும் களைந்ததான நெஞ்சினன் 
உனதுஆணை யின்படி செயல்புரியத் தயார்நிலை 
உள்ளஉந்தன் அருச்சுனன் வில்லின்வீர விஜயனாம்
74
இங்கனம் மஹாத்துமா இருவர்உரையைக் கேட்டுநான்
ரோமக்கூச்சல் கொள்கிறேன் விநோதமாக நினைக்கிறேன்
75
வியாசமுனி கருணையால் யோகங்களின் இறைவனாம்
கிருஷ்ணர் மற்றும்அர்சுசுனன் உடன்நடந்த ரஹசிய
உரையைக்-கேட்கும் பாக்கியம் கொண்டு-நானும் மகிழ்கிறேன்
76
கிருஷ்ணஅர்ஜுனர் இருவரின் இடையில்நடந்த இவ்வுரை
யாடல்தன்னை மீண்டும்மீண்டும் எண்ணிப்பார்த்து மன்னனே
கணமும்நான்ம கிழ்கிறேன் உணர்ச்சியில்தி ளைக்கிறேன் 
 
77
இறைவன்கிருஷ்ணன் உருவத்தை அதிவினோத உருவத்தை
நினைத்துநானும் பார்க்கிறேன் வியப்புமிகக் கொள்கிறேன்
மீண்டும்மீண்டும் மனதில்நான் இன்பம்தன்னைக் காண்கிறேன்
78
யோகிகளின் இறைவன்கிருஷ்ணன் எங்குஇருக் கின்றாரோ
உன்னதவில் வீரன்பார்த்தன் எங்கெலாம் உளானோஅங்கு
செல்வம்வெற்றி வலிமையும் ஞாயம்கூடி இருக்குமே
நிச்சயம்இது நிச்சயம் என்பதென்அபிப் ராயமாம்
என்றுகூறி சஞ்சயன் கீதைதன்னை முடிக்கிறான் 
 
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

 

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்




  
புருஷோத்தம யோகம்

1-5
மேலும்கண்ணன் கூறினார் ஐயம்விலக விளக்கினார்
வேதம்தன்னை விரிந்தஓர் பெரியஆல விருட்சமாய்
அறியும்ஒருவன் வேதத்தை அறியும்-ஒருவன் ஆகிறான்
அந்தஆல மரம்தனில் இலைகள்வேதப் பதங்களாம்
வேர்கள்வானை நோக்குமாம் கிளைகள்கீழே நோக்குமாம்
மாயஉலகின் முக்குணம் இதனைவளர்க்கும் உரமுமாம்
சிறியகிளைகள் புலன்களாம் வேர்கள்-செயலின் பலன்களில்
பிணைத்ததான அமைப்புமாம்  விரிந்துபரந்த வளர்ச்சியால்
மேலும்கீழும் நிறையுமாம் மாயஉலகைப் பிணைக்குமாம்
இம்மரத்தின் உண்மையை உலகமாயை கொண்டுநீ
அறிதல்அரிது அரிதுமாம் முடிந்திடாத விஷயமாம்
எங்குஇதனின் தொடக்கமாம் எங்குமுடியும் அதுவுமாம்
எதனில்தங்கித் தொடங்குமாம் என்பதெல்லாம் புதிருமாம்
பற்றிலாத பற்றுமாம் முடிந்திடாத முழுதுமாம்
சாற்றுமொரு சத்தமின்றி சார்ந்திருக்க ஏதுவாகும்
முழுமைகொண்ட இறைவன்பாதம் சரண்புகவே விளங்குமாம்  
 
போலிகெளர வம்தனை மயக்கம்போலி உறவினை
துறந்துசத்ய நித்திய தோற்றம்தன்னைப் புரிந்துமே
ஜடஉலகின் ஆசையை தோன்றும்இன்ப துன்பினை
துறந்து பரமபுருஷனை அடையும்வழியை அறிந்தவன்    
பரமபதத்தை அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்

6-10
எனதுபரம பதம்எனும் தலத்தை-அடைதல் அரியது
சூரியனால் சந்திரனால் ஒளிர்படாமல் ஸ்வயம்ப்ரகாசம்
ஆனஅதனை  முயன்றுமே சென்றடைந்த ஞானியர்
உலகில்-மீண்டும் பிறந்திடார் மாயப்பிடியில் அகப்படார்
இந்தமாய உலகிலே வந்தஎவரும் என்திரு அம்சமேதான்-ஆனவர்
எனினும் மாயக்கட்டினால் புலனில்வீழ்ந்த தாயினர்

காற்றுமணத்தை சுமக்குது அங்குமெங்கும் பரப்புது
மாற்றமில்லா ஆத்துமமும் அதுபோல்தானே இருக்குது
உடலை விட்டு வேறுடல் உணர்வைக் கொண்டு செல்லுது
ஜடமுமான உலகில்உயிர் வழியாய்த் தானாகுது
மனதைச்சுற்றி அமைதலாக புலனைஅடைந்து வாழுது
ஆன்மம்உடலை நீங்கலோ வேறுடலைக் கொள்ளலோ
மனஉணர்வில் சிக்கிய மாந்தருக்குப் புரிவது
அரிதுமிகவும் அரியது அறிவதென்ப தரியது
துரியநிலையில் ஞானம்கண்ட ஞானியர்க்கே உரியது

11
ஆன்மஉணர்வில் நிலைத்துநல் முயற்சிகொள்ளும் சாதகன்
நன்கு-கண்டு தெளிகிறான் நடப்பதனைப் புரிகிறான்
ஆன்மஉணர்வு அற்றவர் உலகப்பற்று உற்றவர்
என்னமுயன்றும் அறிகிலர் உண்மைதன்னை உணர்ந்திலர்
12-13
உலகம்-முழுதும் இருள்தனை விலக்கும்-ஆத வன்ஒளி
சந்திரனும் நெருப்புமே கொண்டு-திகழும் நல்லொளி
என்னிடமே தோன்றுது என்னால்-தானே ஒளிருது
அண்ட-கிரகம் யாவிலும் நானே-நுழைந்து இருக்கிறேன்
கொண்டஎனது சக்தியால் அவற்றைச்சுழல வைக்கிறேன்
சந்திரனாய்த் தோன்றி-நான் உலகத்தாவ ரம்தனில்
உயிர்கொடுத்துக் காக்கிறேன் வாழ்வுரஸமு மாகிறேன்
 
14
வாழும்உயிர்ஒவ்..வொன்றிலும் செரிக்கச்செய்யும் நெருப்பு-நான்
இழுக்கும்-விடும் ஸ்வாசம்-நான் இவைகள்-கொண்டு உயிரின்-உடலில்
உண்டஉணவு அனைத்தையும் செரிக்கச்செய்யும் சக்திநான்
 
15
அனைவரது இதயத்திலும் இருக்கும் சக்தி ஆனவன்
என்னிலிருந்து-ஞாபக சக்தி-மற்றும்-மறதியும் வருவவென்று அறிவநீ  
வேதகோஷம் நானேவேத அந்தம்-செய்த சத்யம்நான்
வேதம் தன்னை முற்றுணர்ந்த வேதம் தன்னிின் மூலம்நான்
  
16-20
உயிரில்இரண்டு வகைகளாம் ஒன்றுஇழியும் அழியுமாம்
மற்றும்ஒன்று நிற்குமாம் ஜடஉலகைப் பற்றிவாழும்
உயிர்கள்இழியும் அழியுமாம் ஆன்மநெறியைப் பூண்டுஆன்ம
உலகில் வாழ்வர் நிற்பரே இழிவிலாமல் சிறப்பரே
இந்தஇரண்டு வகையினர் தன்னைக்கடந்து இருப்பவர்
இந்தஇரண்டு உலகிலும் நுழைந்துஅதனைக் காப்பவர்
இறைவன்என்றே ஆனவர் சிறந்தபுருஷன் ஆம்அவர்
எவரும்அவரைப் படைத்திடாமல் தாமேஇருக்கும் படியவர்
மனிதஇனத்தை உயிரைக்கடந்து மண்கடந்து விண்கடந்து
எதுவும்கடந்து சிறந்ததால் உன்னதமாய் ஆனதால்
  யாவுமான தாதலால் வேதம்மற்றும் உலகம்என்னை
சிறந்தபுருஷ உத்தம..னாகப்-போற்றி ஏத்துது
எவன்எனினும் ஐயமின்றி என்னைக்கடவுள் ஆகவே
தெரிந்துகொள்ள லாயின்அவன் யாதும்அறிந்த அறிஞனாய்
ஞானம்முதிர்ந்த ஒருவனாய் முழுமையான இறையின்தொண்டில்
ஈடுபாடு கொள்கிறான் அன்புசேவை செய்கிறான் 
பாவமற்ற பாரதா வேகமுற்ற ஓர்ரதா
வேதம்தன்னின் ரகசியம் ஆனஇதனை உனக்குநான்
வெளிப்படவே கூறினேன் ஒளிபெறவே சாற்றினேன்
இதனைஅறிந்த எவனுமே பக்குவத்தைஅடைகிறான் ஞானியாகஆகிறான்

--------------

 

அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்




  

ஜட இயற்கையின் முக்குணங்கள்
1,2
பகவான்-க்ருஷ்ணர்  கூறினார் ஞானங்களில் சிறந்தது
உன்னதமாய் இருப்பது என்றவிஷயம் தன்னைநான்
உனக்குச்சொல்வேன் பார்த்தனே இதனைஅறிந்த முனிவர்கள்
பக்குவத்தை அடைந்தனர் உயர்ந்தநிலை பெற்றனர்
இதனில்நிலை பெறுவதால் எனதுதெய்வ இயற்கையை
அடைதல்-முடியும் அறிந்திடு இங்கணமாய் நிலைத்திடல்
பிறப்புமற்றும் இறப்புமே இல்லைஎன்றே உணர்ந்திடு
3
ஜடத்தின்சத்து மொத்தமும் ப்ரம்மம்என்றே அழைப்பது
அதுவேபிறப்பின் மூலமாய் ஆகுதென்று அறிந்திடு
ப்ரபஞ்சம்-படைக்கும் வகையில்-நான் அதனை-என்னில் கர்ப்பமாய்க்
கொண்டுஆக்கல் செய்கிறேன் கண்டுகொள்நீ அருச்சுனா
4
இந்தஜட இயற்கையில் அனைத்துஉயிர் இனங்களும்
பிறக்கலாகும் அறிந்திடு நானேவித்து உணர்ந்திடு
 
5
ஆசையான தொற்றுநோய் சத்வரஜச தமஸமாம்
ஜடஇயற்கை முக்குணத் தொடர்பில்-உயிரை அடையுது
அதுவரையில் சுதந்திரம்  கொண்டபிறவி யானது
குணத்தின்கட்டுப் பாட்டினுள் வந்துதளையில் சிக்குது
6
பாவமற்ற பார்த்தனே சத்வகுணம் தூயது
ஆதலினால் ஒளிதரும் தன்மையதாய் உள்ளது
இருண்டபாப விளைவுகள் தன்னிலிருந்து விடுதலை
அளிக்கும்சக்தி உடையது இந்தகுணத்தில் நிலைத்தவர்
ஞானம்வளர்த்தர் ஆயினும் இன்பப்பலனைக் கருத்தினில்
கொண்டமட்டும் கட்டினில் பட்டிருக்க லாகுவர்  
7
ரஜோகுணம் என்பது எல்லையற்ற ஆவல்கள்
பாலின்பட்ட குணமது இதனில்பட்ட மானிடன்
விருப்பங்களின் ஆவலால் ஜடப்புலனின் அடிமையாய்
புலன்பலன் தனைநினைத்து செயல்புரிந்து உழல்கிறான்
8
தமோகுணம் ஆனது உயிரின்மயக்க நிலைக்குமே
காரணமாய் ஆகுது இருண்டநிலைமை தானது
இதனில்பட்ட ஜீவனோ சொம்பல்கொண்டு இருக்குது
உறக்கம்தன்னில் இருக்கும்அதுஓர் பித்தம்கொண்டே கிடக்குது 
9
சத்வம்இன்பம் விழைதலும் ராஜசம்  பலனில்நாட்டமும்
தாமஸம்-பித்த உறக்கமும் கொண்டிருக்க லாகுது
10
சிலசமயம் ரஜஸமோ சத்வகுணத்தை வெல்லுது
சிலசமயம் சத்வமோ ஓங்கிரஜஸை வெல்லுது
சிலசமயம் தமஸமோ மற்றிரண்டை வெல்லுது
11-13
சத்வகுணத்தில் ஆனந்தம் துய்க்கஉடலின் கதவுகள்
யாவும்ஞானம் தன்னினால் ஒளிர்ந்திருக்க வேண்டுமாம்
ராஜசம்மிஞ்சத் தோன்றுது பற்றுஆசை ஏக்கமாம்
கடினஉழைப்பில் நாட்டமும் பலனைநோக்கி எழுவதாம்
தாமஸம்ஓங்கத் தோன்றுது பித்தம்மயக்கம் இருளுமாம்
14-15
சத்வகுணத்தில் மரிப்பவன் தூய்மையான உயரிய
உலகம்தன்னை அடைகிறான் இன்பம்தன்னைத் துய்க்கிறான்
ரஜஸில்-மரணம் எய்தினால் *ரஜஸரிடையே பிறக்கிறான்
தமஸகுணத்தில் மரிப்பவன் மிருகமாகப் பிறக்கிறான்   
*ரஜோ குணம் உடைய பலன் கருதி செயல் புரிபவரிடையே
14-16
சத்வம்தூய்மை யாக்குமாம் ரஜஸின்செயல்கள் துக்கமாம்
தமஸோஅறி யாமையில் சென்றுநம்மைச் செலுத்துமாம்
14-17
சத்வகுணம் உண்மைஞானம் விருத்திசெய்ய உதவுமாம்
இன்னும்வேண்டும் என்றபே ராசைரஜஸில் விளையுமாம்
கடைநிலையின் பட்டதாம் தமோகுணம் கெட்டதாம்
அதனில்அறி வின்மையும் மயக்கம்-பித்தம் தோன்றுமாம்
14-18
சத்வகுண வான்கள்-வானின் உயர்உலகை அடைவராம்
ரஜஸின்பால் பட்டவரோ புவியில்உழலும் மனிதராம்
தமஸில்மயங்கிக் கிடப்பவர் தன்னைமறந்து வாழ்பவர்
கீழுலகாம் நரகினைச் சென்றுவாழும் தரத்தவர்

14-19
இந்தமூன்று இயற்கையின் குணத்தைமீறி செயல்களும்
இல்லைஎன்னும் உண்மையும் இறைவனான பரமனோ
இதனைக்கடந்த ஒருவனே என்றஉண்மை தன்னையும்
உணரும்போது அருச்சுனா எந்தன்ஆன்ம தத்துவம்
தன்னைநீயும் உணருவாய் *தூய்மையான உணர்வுமாய்       
*Pure consciousness (Supra Conciousness)
14-20
உடலைஅடைந்த ஒருவன்இந்த முக்குணத்தைக் கடந்திடில்
பிறப்புஇறப்பு மூப்பெனும் துன்பப்பிடியைக் கடந்துநல்
சிறப்புவாய்ந்த அமுதமாம் முக்திதன்னின் சுவையினை
சுவைக்கலாகல் ஆகுது *புலப்படாத நிலையது
*ஜீவன் முக்தரான சித்தரின் நிலை சாதாரண அறிவுக்குப் புலப்படாது
14-21
இதனைக்கேட்ட அருச்சுனன் கேள்வியொன்றை எழுப்பினான்
குணத்தின்உயர்ந்த கோமகன் தன்னைஅறிவ தெப்படி
அந்தசீலன் நடத்தையும் இருப்பதென்ப தெவ்விதம்
எங்கனமோ இயற்கையை அவன்கடந்து நிற்பது ?
14-22-25
மனம்புகுந்த மாயவன் மதம்கடந்த மாதவன்
உலகில்-உண்மை வடிவினில் தோன்றுகின்ற அன்பினன்
பேசலுற்ற லாயினன் ஐயம்களையு மாசானாய்
ப்ர காசமான-ஏற்றமும் பற்றுமயக்கம் இவைகளும்
தோன்றும்போது வெறுப்பவை மறையஏக்கம் தன்னையோ 
அடைந்திடாத ஒருவனும் இயற்கைதன்னின் விளைவினைக்
கடந்துகவனம் அற்றவன் போன்றுஉள்ள ஒருவனும்
உறுதிகொண்ட ஒருவனும் குணங்கள்செயல்கள் புரிபவை
என்றுகொண்ட ஒருவனும் இன்பதுன்பம் இரண்டையும்
கல்லும் பொன்னும் மண்ணையும் சமதையாகக் கண்டுமே
அறிவுசார்ந்த ஒருவனாய் புகழ்ச்சிஇகழ்ச்சி இரண்டையும்
ஒன்றுமாகக் கொண்டுமே மானஅவ மானத்தால்
மாற்றமற்ற மனிதனாய் நண்பர்பகைவர் தன்னையே
ஒன்றுமாய் நடத்தியே நன்றுநாள் கடத்தியே
பலனைநோக்கி இருந்திடா திருக்கும்மாநி டன்தனை
இயற்கைகுணம் வென்றவன் அதனைக்கடந்து உயர்ந்தவன்
என்றுஉணரு பார்த்தனே  நன்றுஉணரு நண்பனே  
 
14-26
குறைபடாத பக்தியின் தொண்டில்நின்ற ஒருவனாய்
கறைபடாத உயர்வினால் நிலைத்துநின்ற ஒருவனாய்
வாழும்மனிதன் விரைவினில் இயற்கை-குணத்தின் பிடியினை
மாயத்தொடர்பைக் கடக்கிறான் பிரம்மநிலையை அடைகிறான்
14-27
இறுதியான முக்தியின் பரமசுகத்தின் மூலம்நான்
மரணம்-மற்றோர் அழிவுமே அற்றதான நித்திய
அருவப்ரம்மத் தன்மையின் அடிப்படையின் அடிப்படை
ஆனஇறைவன் எனப்படும் பரமமான புருஷன்நான்

 

அத்தியாயம் 13 - க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ய விபாக யோகம்





இயற்கையும்,அனுபவிப்பவனும்,உணர்வும்
1,2
அறியும்ஆவல் கொண்டுமே பார்த்தன்மேலும் கூறினான்
இயற்கை தன்னைத் துய்ப்பவன் களம்-களத்தை அறிபவன்
ஞானம்மற்றும் அதனின்-முடிவு பற்றிஅறிய விழைகிறேன்
“மனித-உடல் களமடா அதனை-அறிந்த எவனுமே
களத்தை-அறிந்த ஒருவனாம்” என்றுகண்ணன் கூறினான்
3
அனைத்து-உடலின் உள்ளிலும் அறியும்-ஒருவன் நானடா
உடலின்-உரிமை யாளனை மற்றும்உடலை நன்குற
புரிந்துகொள்வ தென்பது ஞானம்-என்றே ஆகுது
அறிந்துகொள்நீ பாரதா குந்திமைந்த சோதரா 
4
செயல்நடக்கும் செயற்களம் அதனில்தோன்றும் அமர்க்களம்
அதனைஅறியும் பிறவியும் அவனின்-உயர்ந்த க்யாதியும்
என்னவென்று சுருக்கமாய் சொல்லுவேன்கேள் பாரதா
5
இவைகள்பற்றி அறிவினை சிறந்தமுனி புங்கவர்
வேதநூல்கள் மூலமாய் விவரம்செய்து உள்ளனர்
*மூலம்மற்றும் விளைவினை ஆய்வுசெய்து உள்ளனர்
*காரணம்
6-7
ஐந்துபெரும் மூலங்கள் அஹங் காரம்அறிவுஐம்புலன்
விஷயம்-மற்றும் தோன்றிடாத் தன்மையான விஷயமும்
*பத்துபுலன் மனதுடன் விருப்புவெறுப்பு இன்பமும்
துன்பம்மற்றும் நம்பிக்கை மொத்தஉயிர் அறிகுறி
இவைகள்-எல்லாம் செயற்களம் மற்றும்-அதனின் விளைவுமே         

*கண்,காது,நாசி,தோல்,நாக்கு,வாய்,கை,கால்,பிறப்புறுப்பு,மலத்வாரம்  

6-8-12
அடக்கம்-கர்வ மின்மையும் அஹிம்சை-பொறுமை எளிமையும்
ஆன்ம-குருவின் அணுக்கமும் தூய்மை-புலனில் துறவுடன்
பொய்-அஹங்கார மின்மையும் பிறப்பு-இறப்பு மூப்புடன்
பிணியின்-தன்மை உணரலும் மனைவி-மைந்தர் இல்லமும்
பிறரைச் சார்ந்த நினைவையும் துறந்து-இன்ப துன்பத்தை
சமதையாக எண்ணியே என்னில்பக்தி பூண்டுமே
தனிமைதன்னை நாடியே ஆன்மஉணர்வை ஏற்றுமே
பரமதத்வ ஆய்வுடன் இருத்தல்-ஞானம் என்கிறேன்
இவற்றின்-எதிரி ஞானமற்ற அக்ஞானமே அறிந்திடு
13
எதைஅறிதல் உசிதமோ எதனில்-நித்யம் இருக்குமோ
அதனைச்-சொல்வேன் பார்த்தனே கேளுதர்ம அனுஜனே
எனக்குப்-பணிந்து இருப்பது துவக்கம்என்ப..தற்றது
ப்ரம்மம்-என்றும் ஆன்மம்-என்றும் ஜடத்தைக்கடந்து நிற்பது 
14
எதிலும்நிறைந்து இருப்பவர் கரமும்-தாளும்  கண்ணும்-முகமும்
எங்குமாக இருப்பவர் எதையும் பார்க்கும் திறத்தவர்
எதையும்-கடந்த ஓசையாய்   எதையும்கேட்டு இருக்கிறார்
அவரை-ப்ரம்மம் என்கிறார் பரமஆன்மம் ஆகிறார்
15
புலனின்-மூல காரணர் புலனிலாத பூரணர்
உயிரைக்-காத்து நிற்பவர் எதையும்-துறந்து கடப்பவர்
மாய ஜடத்தில் பிறந்த-உலகின் குணங்கள்-தனக்கு
தூயஇறைவ..னாகிறார் பாயும்மனதி..லாதராய்
16
கிடந்தசைந்..திருப்பவர் அனைத்தினுள்ளு..மேயவர்
ஜடப்புலனின் வலிமையினால் காணவொண்ணா அறியவொண்ணா
ஒருத்தராக இருப்பவர் இறைவன்-என்னும் பெயரவர்
தொலைவில்-அவர் இருப்பினும் அருகிருக்கும் அருளவர்
17
பிரிந்திருக்கு மாறுதோற்றம் கொண்டிருப்ப ராயினும்
பிரிவுஎன்று ஒன்றிலாது சேர்ந்திடுக்கு மாண்டவர்
உயிர்கள்தன்னைப் படைத்துக்காத்து முடிவிலதனை முடித்துவைக்கும்
முடிவிலாத முடிவவர் புரிந்துகொள்ள அரியவர்
18
ஜொலித்திருக்கும் ஒளியவர் அதற்கும்மூல மேயவர்
இருண்டஜடத்தைக் கடந்தவர் எளிதில்தோன்றா படியவர்
ஞானமாக இருக்குமவரே ஞானக்கருவும் ஆகிறார்
ஞானஇலக்கு மாகஅவர் இதயமமர்ந் திருக்கிறார்

19
இவ்வாறாகச் சுருக்கமாய் களமும்மற்றும் ஞானமும்
அறியத்தக்க விஷயமும் என்னால் சொல்லப்பட்டன
இவற்றின்உண்மை தன்னைநீ உணருநன்கு அருச்சுனா
எனதுபக்தர் மட்டுமே என்னைஅடைவர் அறிந்திடு 
20
ஜடஇயற்கை மற்றும்அதனில் வாழும்உயிர்கள் யாவையும்
ஆதியற்ற தானவாம் இதனைநன்கு புரிந்திட வேண்டும்வேண்டும்வேண்டுமாம்
வாழும்உயிரின் மாற்றங்கள் ஜடப்பொருளின் தன்மைகள்
ஆனயாவும் இயற்கையின் உற்பத்தியால் விளைந்ததே
21
ஜடச்செயல்கள் விளைவுகள் ஆனவற்றின் காரணம்
இயற்கைஎன்றே ஆகுது எனினும்உலகில் பல்வித
இன்பதுன்பம் யாவுக்கும் வாழுகின்ற உயிர்களே
காரணமாய் ஆகுது வேறெதுவும் அல்லது
22
உலகஉயிர்கள் யாவும்முக் குணங்கள்தன்னைக் கொண்டுமே
வாழ்ந்திருக்க லாவன வழிநடந்து செல்வன
இயற்கைதன்னின் தொடர்பினால் இப்படியாய் ஆயின
இவழியில் அவைகளும் இன்பதுன்பம் அடைவன       
23
உடலின்உள்ளு றைபவர் தெய்வத்தன்மை உடையவர்
அவர்தான்இறைவன் என்பவர் அவரேஒவ்வொரு உயிரினுக்கும்
பரமஉரிமை கொண்டவர் அவற்றைக்கணமும் திறமையாய்க்
கண்காணிக்கும் தலையவர் பரமனென்னும் பெயரவர் 

24
ஜடஇயற்கை அதன்குணம் உயிர்வாழி அதன்குணம்
இடைவிளவு யாவையும் அறியும்ஒருவன் சீக்கிரம்
முக்தி அடைதல் நிச்சயம் அந்தஞானம் வந்தவன்
எந்தநிலையின் ஆயினும் மீண்டும்பிறப்பு அற்றவன்
25
பரமதத்வ இறைவனை அறியவெகு அரியதான
அறிவின்அறிவு இறைவனை அடையமார்க்கம் பலவுமாம்
ஞானம்கொண்டு ஞானம்கண்டு அவனைக்கண்டு அடையலாம்
அவனைக்காண பலனைவிட்டு அன்புசேவை செய்யலாம்
26
ஆன்மமார்க்கம் தன்னில்ஞானம் அற்றிருந்தும் ஒருசிலர்
ஞானியான ஒருகுரு இறைவன்ஆன சத்குரு
சொன்னவார்த்தை கேட்டுபக்தி சேவைதன்னை செய்யுவர்
தனதுசிரத்தை ஒன்றினாலே சிரத்தில்ஒளியைக் காணுவர்
27,28
ஆடும்பொருளும் ஆடிடா ஜடமுமான விஷயமும்
களமும்-களத்தை அறிந்தவன் சேர்ந்தகலவை ஆகுமே 
அனைத்து-உயிரின் ஜீவனைத் தொடரும்-பரமன் ஒன்றென
கண்டுமற்றும் ஆத்துமம் அழிவதில்லை என்றுமே
உணர்கின்ற ஒருவனே ஞானிஎன்று ஆகிரான்
பிறரிலிருந்து தனிக்கும்-அவனே காண்பவனும் ஆகிறான்
29,30
உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினுள்ளும் பரமனைக்
காணும்ஒருவன் சீக்கிரம் இலக்கைஅடைதல் நிச்சயம்
பஞ்சபூதம் ஆனதான உடலேசெயலைச் செய்யுது
துஞ்சுகின்ற ஆன்மம் வெறும் சாட்சியாய்த்தான் நிற்குது
என்றஉண்மை காணும்ஞானி மட்டும் காணல் செய்கிறான்
31
ஜடஉடலின் பன்மையைக் கடந்துயாவும் ஒருமையே
என்றநிலைமை வந்திட பரஉணர்வு வந்திடும்
அந்தஉணர்வு வந்ததும் பரந்தப்ரபஞ்சம் தன்னிலே
இங்கனமாய் நிலையுடன் பிறவும்இருக்கக் காண்கிறான்  
32
நித்தியத்தின் உணர்வினைக் கண்டஒருவன் ஆத்துமா
தெய்வம்-என்றே ஒளிருது நித்தியமாய் அருளுது
ஜடஇயற்கை தன்னையே கடந்திருக்கும் படியது
ஜடத்தின்தொடர்பு இருப்பினும் அதனைக்கடந்து நிற்குது
33
எங்கும்நிறைந் திருப்பினுமா காயமெதிலும் கலந்திடா
திருக்கும்-அதனைப் போலவே உடலில்உறை ஆன்மமும்
உடலினின்று பிரிந்துநல் சாட்சியாக நிற்குது
அதனைக்கலந்து திரிந்திடா திருந்துதனித்து ஒளிருது
34
ஒரேஒரு சூரியன் ஜகம்முழுதும் ஜொலிக்கிறான்
ஒன்றெனினும் ஆத்துமா உடல்முழுதும் ஜொலிக்கிறான்
35
உடலின்அதனின் தலைவனின் தன்மைஅறிந்து உணர்பவன்
பிறவித்தளையைக் கடப்பது எளிதெனவே காண்கிறான்
பரமன்அடி என்றுகூறும் பரமபதத்தை இலக்கென
கொண்டுஅவனும் அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்

---------------