Sunday, April 19, 2015

அத்தியாயம் 17 - ச்ரத்தாத்ரய விபாக யோகம்

 
 




நம்பிக்கையின் பிரிவுகள்
1
கிருஷ்ணகிருஷ்ண மாதவா சொல்லு-என்றான் அர்ச்சுனன் 
சாத்திரத்தின் கொள்கையை ஒழுகிடாமல் தன்மனக்
கற்பனைக்கு ஏற்பவே வழிபடும்நிலை எது
அவன் குணம் தான் என்னது
Sathva,Rajas,Thamas:17:2 to 2,3
உடலைக்-கொண்ட ஆத்துமா கொள்ளும்-இயற்கைக் கேற்பவே
மனிதன்கொள்ளும் நம்பிக்கை மூன்றுவிதமாய் ஆகுது
பலவிதமாம் இயற்கைகுணம் தனக்குக்கீழே இருக்குமோர்
இருப்பிற்கேற்ப நம்பிக்கை தன்னைவிருத்தி செய்கிறான்  
4-6
சத்வகுணர் தேவரை ரஜசகுணர் யக்ஷரை
தமசகுணர் ப்ரேதபூத அரைகுறையாம் ஆவியை
பூஜைசெய்து வாழ்கிறார் அதனில் மகிழ்வு கொள்கிறார்
சாத்திரத்தின் பாற்படா கடுந்தவமும் விரதமும்
தற்குறியாய் காமத்தின் ஆளுகையால் செய்கிறார்
இவர்கள்-ரஜசர் ஆகிறார். பரமபுருஷன் உடலுறை
நாயகனாய் ஆனதால் உடல்வருத்தல் உண்மையில்
இறைவருத்தல் ஆகுது அவர்அசுரர் அறிந்திடு  
7
மனிதன்ஒவ்வொ ருவனும் உண்ணும்உணவு இயற்கையின்
குணத்திற்கேப்ப அமையுது முவ்விதமாய் அமையுது
இவ்விதமாய் அமைவது யாகம்-தானம் தவத்திலும்
கூடக் காணலகுது வரைமுறையாய் அமையுது
8-10
சாத்துவீக உணவுகள் ஆயுள்தன்னைப் பெருக்குது
தூய்மை-கொண்டு சேர்க்குது சுகம்சுகா தாரம்பலம்
திருப்திதன்னை அளிக்குது இவ்வகையாம் உணவுகள்
இனிமைகூடி ரசமுமாகி உடலைஉரப்ப டுத்துது
கசப்பு-புளிப்பு உப்புடன் காரம்சேர்ந்த உணவுகள்
ரஜோகுணத்தின் பாலது உலர்ந்திருக்கு முணவுமற்றும்
எரியும்உணவு ரஜசமாம் வலியும்-நோயும் சேர்க்குமாம்
மூன்றுமணி நேரம்முன்பு சமைத்தஉணவும் பழையதும்
ஊசிப்போன சீரழிந்த தூய்மையற்ற உணவுமே
தாமசம் பாற்பட்டது தமசமக்கள் விழைவது
17:11
கடன்எனாது கடமையாய் முறைகெடாமல் நெறியுமாய்
பலன்படாத யாகயக்ஞம் சத்வம்சார்ந்த தாகுமாம்
12
உலக-வாழ்வில்  பலன்-பெற வேண்டும்என்றொரு நோக்கமோ
அன்றிமற்றும் பிறிதொரு லாபம்-கருதி வீண்வழி
தற்பெருமை தன்னிலே செய்யும் யாகமானது
ரஜோகுணத்தைச் சார்ந்தது என்றுநீயும் உணர்ந்திடு
13
சாத்திரத்தின் விதிமுறை தன்னின்-உண்மை உணர்ந்திடா
திருந்துநல்ப்ர சாதமாம் உணவைப்பகிர்ந்தி டாமல்நல்
முறையில்வேத மந்திரம் தனைச்சிரத்தை சந்தமாய்
ஒதிடாமல் வேதியர் தனக்குஉரிய தட்சிணை
தனைத்தராமல் நம்பிக்கை கொளாதயாகம் தமசமாம்
14
ஆதிபூர்ண ஆண்டவன் வேதம்ஓதும் அந்தணன்
அன்னைதந்தை குருவையும் வணங்கித்தூய்மை கொள்வது
எளிமைகொண்டு வாழ்வது சிற்றின்பம் துறப்பது
அஹிம்சைகைகொண் டிருப்பது  என்பஉடல்சார் தவங்களாம் 
15
வாய்மைகொண்டு நன்மைசெய் மென்மைகொண்டு பேசிவை
வேதம்தன்னை ஒதிவை இவைகளாகும் நாதவம்*
நாதவம்*= வாக்கு தவம்
16
சாந்தம்எளிமை கம்பீரம் மனதின்கட்டுப் பாட்டுடன்
அதனின்தூய்மை என்பவை மனதின்தவங்கள் ஆகுமே
17
உலகவாழ்வின் லாபமும் சுயநலத்தின் லோபமும்
அற்றுபரம புருஷனை திருப்திசெய்யப் புரிந்திடும்
இவைகள்யாவும் சத்துவ குணத்தைச்சார்ந்த அறிந்திடு 
18
மதிப்புமரி யாதைவணக்கம் தன்னைப்பெறச் செய்யும்போலி
பகட்டுத்தவமும் விரதமும் தமோகுணமே ஆகுமே
19
கொடூரச்சுய வருத்தலும் பிறரின்துன்பம் அழிவினை
நோக்கிச்செய்யும் தவங்களும் பிரிதுமாக இங்ஙனம்
கொள்ளும் விரதபூஜையும் விரயம்அன்றோ அருச்சுனா
நல்லஅல்ல இவைகளும் அதமத்தமசம்  அல்லவோ  
20
ஞாலம்கருதி அன்றிப்பெரும் ஞானம்ஒன்றே கருதியே  
உரியகாலம் இடம்தனில் உரியமனிதர் தனக்குமே
செய்வதெந்தன் கடமையே என்றுகொள்ளும்  குணமது
உத்தமமாய் ஆகுது சத்வம்அதே அறிந்திடு
21
பலன்கருதிக் கொடுக்குமோர் விருப்பமின்றி இருக்குமோர்
தானம்ரஜசம் ஆகுமாம் அதற்குக்குறைவு ஞானமாம்
22
இடமும்காலம் தன்னையும் கருதிடாமல் உரியவர்
இடம்தனில்சே ராமலும் கவனமின்றி லட்சியம்
திடம்இலாமல் செய்திடும் தானம்வீணே கீழ்ப்படும்
தமசம்என்று அதனைநீ அறிந்திடுவாய் அருச்சுனா
23
படைப்புதோன்றி இயங்கிய ஆதிகாலம் தொட்டுமே
ஓம்தத்சத் என்றமூ  வெழுத்துசேர்ந்து பரமமாம்
பூர்ணஉண்மை தன்னையே குறிப்பிடுதல் ஆகவே
வேதகோஷம் தன்னிலும்ன யாகயஞ்யம் தன்னிலும்
பரமபுருஷன் தன்னையே த்ருப்திசெய்தல் வேண்டியே
உச்சரித்தல் வழக்கமாம் பரமன்நினைவை ஊட்டுமாம்  
24
இங்கனமாய் சாதுக்கள் ஓமின்பிரணவ நாதத்தை
சொல்லித்தொடங்கி யாகத்தை தானம்தவங்கள் தன்னையே
அவனைஅடையச் செய்தர் சிறந்தமேன்மை எய்தினர்
25
தத்திவாழும் வாழ்வினை சத்திலாத சித்தினை
வித்திலாமல் செய்திட "தத்"தின் நாதம் தன்னுடன்
தானம்தவம் யாவையும் நன்குசெய்த லேமுறை
பிறகுசென்று போகுமே மாயமென்னும் ஓர்சிறை
 
26-27
பக்தியாகம் தன்னின்நோக்கம் பூர்ணஉண்மை ஒன்றுமே
சுத்த”சத்”தின் சொல்லினால் இதனை உணரலாகுமே
பூர்ணஇயற்கை தனக்கு-ச்ரத்தை கொண்டுசெய்யும் யாகமும்
தானம்தவம் யாவையும் ஆதிபகவன் தன்னையே
த்ருப்திசெய்து உய்யவே  கர்மயோக மும்இதே     
28
பரமபுருஷன் ஒருவனின் மீதுகொண்ட நம்பிக்கை
அற்றுமே  புரிந்திடும் யாகயக்ஞம் தானமும்
பரந்தயோகத் தவங்களும் சிறந்ததல்ல நிரந்தரம்
அதனில்இல்லை அருச்சுனா அவைகள்-அசத் என்றுமே
அழைக்கப்படும் பயன்படா  இம்மைமறுமை இரண்டிலே

 
 


No comments:

Post a Comment