Sunday, April 19, 2015

அத்தியாயம் 16 - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்



 

தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
1-5
அச்சமின்மை நிறைந்ததூய்மை ஆன்மஞானம் பெருக்கஆசை
தானம்தவம் யாகம்செய்தல் வேதம்கற்றல் வாய்மைஎளிமை
அஹிம்ஸை பூண்டு கோபம்விடுதல் துறவுசாந்தி
குற்றம்காணல் விட்டுத்தள்ளல் கருணையும்பே ராசைதள்ளல்
இதம்நிதானம் கொண்டு உண்மை பாவம்தன்னிலுற் சாகம்கொள்ளல்
வலிமைமன் னிக்கும்தன்மை தூய்மைகொண்டுபொ றாமைதள்ளல்
பற்றுவிடு பட்டதன்மை கொண்டுஏக்க மின்றிவாழல்
யாவும்சாது சாதகன் இயல்பதாக ஆகுமே
பெருமைஅகந்தை வீணபிமா னம்கொடூரம் கோபம்மற்றும்
அஞ்ஞானம் இவைகள்யாவும் அசுரகுணங்கள் அருச்சுனா
தெய்வசத்வ குணங்கள்சிறந்த தன்மைதன்னை கொண்டவை
விடுதலைகொ டுப்பவை இருண்டஅசுர குணங்களோ
கொடும்தளை படுப்பவை இதனைஅறிநீ பாண்டவா
சிறந்தசத்வ குணத்தினைக் கொண்டநல்ல ருச்சுனா

6-10
இந்தஉலகில் உறைந்திடும் உயிர்கள்இரண்டு வகையின
ஒன்றுதெய்வத் தன்மைய மீதமசுர மாவன
அசுரகுணத்தின் தன்மையை விளக்கமாக உனக்குநான்
கூறிடவே விழைகிறேன் கவனமாகக் கேட்டிடு
செய்வதென்ன செய்திட விடுப்பதென்ன என்பதை
அறிந்திடாத பிறவியாம் புரிந்திடாத மடமையாம்
தூய்மையான நடத்தையோ உண்மையறிவின் தன்மையோ
எய்திடாத பிறவியாம் கொடியசெயலின் கருவியாம்
உலகம் பொய்மையானது அதனைப் படைப்பதாவது
ஜகத்தை ஆள்வதாரது கடவுள்வெறும் பேரது
உலகைஆசை படைக்குது அதனைக்கட்டி ஆளுது
என்றுசொல்லித் திரிவது அசுரம்என்றே அறிந்திடு
அறிவிலாத ஒருவராய் தவறில்செய்த முடிவினால்
தவறித்திரிந்து வாழ்கிறார் அசுரர்தம்மை இழக்கிறார்
உலகில்வாழும் பிறர்க்குபொல் லாமைசெய்து அழிக்கிறார்
பலதும்செய்யத் துடிக்கிறார் பலத்தைக்காட்டி நடிக்கிறார்
நிறைவுறாத காமம்வீண் பெருமைப்பொய்யில் கெளரவம்
இவற்றில்-தஞ்சம் புகுந்தவர் மயக்கம்தன்னில் விழுந்தவர்
தூய்மையற்ற செயல்களில் ஈடுபட்டு-நிரந்தரம் அற்றபேரின்பின்சென்று
வாய்மைதன்னை தூஷித்து வாழ்வர்சிறியர் அசுரரே
 
 10
அசுரத்தன்மை உடையவர் அடங்கிடாத ஆசையும்
வீண்பெருமை இழிந்தபொய் கெளரத்தின் மடியிலே
புகழடைந்து வாழ்கிறார் மயக்கம்கொண்டு உழல்கிறார்
தூய்மையற்ற செய்கையால் மாயக்கவர்ச்சி கொள்கிறார்
11-12
வாழ்வுதன்னின் முடிவது வரையில்புலனின் திருப்தியில்
ஈடுபாடு மனிதனின் தேவைஎன்று நினைக்கிறார்
அவர்கவலை அளவிலா திருக்குமென்று அறிந்திடு
காமம்கோபம் இவைகளின் பிடியில்சிக்கி புலன்வழி
சென்றுஅதனின் நுகர்வினில் நியாயமற்ற வழிகளில்
செல்வம்தன்னைச் சேர்க்கிறார் புல்லுணர்வில் மாய்கிறார்
13-15
அசுரகுணத்தில் இருப்பவன் நினைப்பதென்ப தாவது
சிறந்தசெல்வன் நானடா மேலும்செல்வம் எனக்காடா 
வந்திடுமெந்நாளிலும் செல்வம்குவிப் பேனடா
எதிரிஎன்று வருபவர் எவருமிங்கு யாரடா
நான்கடவுள் தானடா நான்பலவான் பாரடா
உலகின்சுகங்கள் அனைத்தின்-உரிமை எனக்குமட்டும் தானடா
செல்வம்சூழ இருக்கும்என்னைப் போலஒருவன் யாரடா
எந்தயாகம் செய்யணும் என்னதானம் கொடுக்கணும்
செய்துபலனை அடையுவேன் சொல்லுசொல்லு மடையனே
என்றுகூறி மமதையின் மயக்கம் கொண்டு ஆடுவான்
16-20
கவலைசூழ்ந்த ஒருவனாய் குழப்பமுற்ற அதமனாய்
மாயைசூழ்ந்து புலனிடம் பற்றுகொண்டு நரகுற
கீழிறங்கி இழிகிறான் பாழ்கிணற்றில் விழுகிறான்
அசுரன்என்ற கீழ்நிலை தன்னில்-நீண்டு வாழ்கிறான்
 திமிர்பிடித்து சுயநலம் தன்னில்ஆழ்ந்து செல்வம்பின்
பொலிகௌர  வம்தனில் மயங்கிநல்ல நெறிமுறை
தன்னிலின்று விலகியே தன்மதியும் கலங்கியே
பெயர்பெறவே யாகமும் யக்ஞங்களும் செய்கிறார்
பொய்பெருமை சுயநலம் காமம்கோபம் கொடும்பலம்
கொண்டு-மயங்கி தன்னுறை மற்றும்-மற்ற பேருறை
இறைவிரையை இழிக்கிறார் பொல்லழுக்கைக் கொள்கிறார்
உண்மைமதம் என்னவென்று மறந்துமதம் கொள்கிறார்
மனிதரிலே கடையராம் அழுக்கின்ஆறு குறும்பினைக்
கொண்டஅசுரர் மாயமாம் கடலில்அசுரர் இனமென
மூழ்கிமூழ்கித் தாழ்கிறார் வாழ்ந்துவாழ்ந்து மாய்கிறார்
இவ்விதமாய் இச்சிறார் என்னால்தள்ளப் படுகிறார்
அசுரத்தனம் கொண்டுவாழ் உயிரினத்தில் சுழற்சியாய்
பிறவிகொண்டு வாழ்கிறார் என்றுமென்னை அடையவே
எண்ணமின்றி வாழ்கிறார் உலகவாழ்வில் கிரமமாய்
கீழிறங்கித் தாழ்கிறார் கடைநிலையில் மூழ்கிறார்
21-24
நரகம்தன்னின் வாயிலாம் காமம்கோபம் ஆசையாம்
இவைகள்மூன்றும் மனிதனை அழிவு-நோக்கிச் செலுத்துமாம்
இதனைஅறிந்து அறிவுளோர் இதனைத்துறக்க வேண்டுமாம்
இதனிலிருந்து தப்பிப்பின் தன்னைஉணர்ந்து அறிந்திட
ஏதுவான செயல்களைச் பிறஉயிர்துயர் துடைத்தலைச்
செய்துஉயர்தல் சாதகன் செய்யநன்மை ஆகுமாம் 

சாத்திரத்தின் நெறிகளை சரிப்படஉ ணர்ந்திடா
திருந்தவை தனைப்புறக் கணித்துபின் தனிச்சையாய்
சரியிலாச செயல்படும் ஒருவன்பக்கு வத்தையோ
பரமபதத்தின் சுகத்தையோ பரமன்அடியின் இலக்கையோ
அடைதல்இல்லை இல்லையே அவனின்வாழ்வு தொல்லையே
சாத்திரத்தின் விதிமுறை அறிந்து ஒருவன் உணரணும்
கடமைஎது செயவொணாத மடமைஎது என்பதை
அறிந்துஅவனும் கொள்ளணும் உணர்ந்தபிறகு கிரமமாய்
செயல்புரிந்து உழைக்கணும் மயக்கம்தீர்ந்து உயரணும்

 

No comments:

Post a Comment