Sunday, April 19, 2015

அத்தியாயம் 18 - மோக்ஷ சந்யாச யோகம்






 
முடிவு: துறவின் பக்குவம்
1-5
ஆண்டவனே நீ எனக்குச் சொல்லு
அந்தத் துறவுதன்னின் நோக்கம்என்ன வென்று
வாழ்வில் துறவு என்பதென்ன வென்று
நான் அறியவேண்டும் புரிந்திடவே சொல்லு
கடவுள்பதில் கூறினார் பளிங்கெனவே விளக்கினார்
செயலின்பலனைத் துறப்பதே துறவுஎன்று ஆகுது
பலன்கருதும் செயல்களைத் துறக்கநீயும் பழகணும்
பிறர் நலன்கருதும் யாகம்தானம்  தவம்எனும்விரை
செயல்களை நீ த்யாகமாகச் செய்யணும்
என்றுமுனிவர் கூறுவர் இதனைமனதில் ஆரணும்
மனிதர்களில் சிறந்தவா வீரப்புலி ஆனவா
சாத்திரத்தில் மூவகைத் துறவுஉண்டு அறிந்திடு
யாகம்தானம் தவத்தினை துறத்தல் துறவுஅன்றடா
இவைகள்மகாத் மாவையும் தூய்மையாக்கும் செம்மையாய்
 
6-10
பலன்படாமல் கடமையாய் இவைகள்தன்னைப் புரியணும்
மனம்கெடாமல் இதனைநீ என்முடிவாய் அறியணும் 
நியமமான கடமையை துறத்தல்என்றும் ஆகாது
மயக்கமாக அதைத்துறந்தால் சத்வமாக ஆகாது
இவைதுறத்தல் கீழ்ப்படுத்தும் தமசமாகும் கேடாகும் 
தொல்லைஎன்று கடமையை பயத்தைக்கொண்டு அதனையே
துறக்கும்குணம் ரஜசமாம் இவைகள்என்றும் துறவெனும்
உயர்நிலைக்கு மனிதனை உயர்த்திடாது அருச்சுனா
செயல்புரியும் கடமையைக் கருதிப்பலனில் பொருதிடா
திருந்துதன் மனத்தினில் பற்றிலாது கடமையை
செய்திருத்தல் மட்டுமே சுத்தமான சத்வமே
சத்வகுணத்தில் நிலைத்தவர் அமங்கலத்தில் அகப்படார்
அதனிலசூ யையும்படார் மங்கலம் எனப்படும்
செயல்பலன் தன்னையும் பற்றிடாத பாங்கினார்
இவண்இவர் இருத்தலால் இவர்மனம் தனில்ஒரு
ஐயம்என்ப தில்லையே இவர்கள்மனது  வெள்ளையே  
 
11
உடல்எடுத்த மானிடன் செயல்துறத்தல் எங்கனம்
அதைத்துறக்க முற்படின் அவைதுரத்தும் அக்கணம்
எனினும்செயலின் பலனையே துறப்பதென்ப தோர்வழி
இருக்குதிங்கு ஓர்பழி சேர்த்திடாது என்மொழி
12
பலன்துறக்கா மானிடன் தனைத் துரத்தும்விளைவுகள்
விரும்பிடாத விளைவுகள் *விரும்பத்தக்க நுழைவுகள்
மற்றுமிவ்வி ரண்டுமே கலந்ததான கலவைகள்
தொடர்ந்திருக்கு மேயானால் துறவுநிலை செயல்களில்
இந்தவிளைவு இல்லையே இன்பதுன்பம் தொல்லையே

*விரும்பத்தக்க நுழைவுகள்=விரும்பகூடிய விளைவுகள் , அனால் பின்னர் துன்பத்தில் படுத்தும் நுழைவாயில்கள்
13-14
அனைத்துச் செயலின் முழுமையைக் கொடுக்கும்-மூலம்
ஐந்துமாய் சாங்கியத்தில்இருக்குது அவைகள்தன்னை அறிந்திடு
இடம்-புலன்கள் செய்பவன் முயற்சிமற்றும் ஆண்டவன்
என்பதவை புரிந்துகொள் சிந்தனையில் கொண்டுநில் 
15
உடல்மனது சொல்லினால் செய்யும்செயல்கள் யாவுமே
ஐந்துகார ணங்களால் வருவஎன்று அறிந்திடு
16
இதைமறந்து செயல்களைப் புரிந்ததுநான் என்பவன்
பேதைஎன்று அறிந்திடு உண்மைதன்னை அறியவே
முடிந்திடாத ஒருவனாய் அவனைநீயும் கருதிடு
17
எவனொருவன் பொய்படும் அகங்காரம் எனப்படும்
தனையறிதல் தடுத்திடும் கீழ்மையிலா ஒருவனோ
எவன்அறிவு சிக்குறா திருந்துஒளி வீசுதோ
அம்மனிதன் பூவிலே கொலைசெயினும் பெரியனே
அவைகளின் தளைதனில் அடங்கிடாத ஒருவனே   
 
18
அறிவுமற்றும் அறிபவன் அறிவுதன்னின் இலட்சியம்
இவைகள்செயலைத் தூண்டிடும் மூன்றுவகைக் காரணம்
புலன்கள்செயல் செய்பவன் இன்னமூன்றும் செயல்களின்
அடித்தளமாய் அறிந்திடு ப்ருதாபுத்ர பார்த்தனே
19
ஜடஇயல்பின் முக்குணம் தனக்குஏற்ப செயல்களும்
அறிவுசெயல் செய்பவன் மூன்றும்மூன்று விதங்களாய்
மாறித்தோன்றும் இதனைநான் விவரிப்பேன்நீ கேட்டிடு
20
எந்தஅறிவு வேற்றுமை தனிலும்ஒருமை காணுதோ
அந்தஅறிவு சத்துவம் என்றவிந்த தத்துவம்
தன்னைமனதில் கொண்டிடு உண்மைஅறிவைக் கொண்டிரு  
21
உடலில்வாழும் உயிரினை பிரிந்துப்பலதாய்க் காண்பது
ரஜசம்என்றே ஆகுது சத்வம்இல்லை அறிந்திடு
22
உண்மைதன்னின் அறிவிலா மனதுகொண்ட சத்திலா
நினைப்பினாலே அதனையே அனைத்துமாக எண்ணியே
செயல்படும் பயன்படாத் தன்மைததமசம் ஆகுது
23
விருப்புவெறுப்பு இன்றியே பற்றுசற்று மின்றியே
கடமைசெய்து விளைபலன் துறந்துஆற்றும் செயல்களே
சத்வகுணச் செயல்களை ஆகிநன்மை சேர்க்குது
24
தனதுஆசை தன்னைப்பூர்த்தி  செய்யுகின்ற சிறியபுத்தி
மனதுகொண்ட தானின்-உணர்வில் பெரியமுயற்சி ஆகும்செயலில்
சத்வம்எங்கு அர்ச்சுனா  ராஜசம்அதே பல்குணா
25
நாளைநடக்கும் விளைவையோ தளைப்படுத்து வதனையோ
கருதிடாமல் மயக்கமாய் துஷ்டஅறி யாமையால்
பிறர்க்குத்தீமை விளைப்பதாய் அசாத்யமாக செய்வதாய்
அமைந்தசெயல்கள் தமசமே தமசம்மிகவும் அதமமே
26
அனைத்து ஜடப்பற்றுகள் பொய்யின்கங் காரங்கள்
விடுப்புபெற்றுற் சாகமும் நிச்யமான திடமையும்
உடையவனாய் வெற்றியை மற்றும்துவளும் தோல்வியைக்
கண்டிடாமல் செயல்படும் ஒருவன்சாது சத்வனாம்  
27
உழைப்பின்பலனில் பற்றுடன் அதைச்சுகிக்கும் துடிப்புடன்
தூய்மையின்றி கேடழுக் காறுபேரா சையுடன்
இன்பதுன்ப விளைவினால் நிலைகுலைந் திடும்அவன்
ரஜோகுணத்தன் அர்ச்சுனா அவன்பெரும் சமர்த்தனா ?
28
சாத்திரத்தின் விதிமுறை தனைத்துறந்து அதன்படி
நடந்திடாத அசடனாய் உடன்படாத முரடனாய்
இழிந்தபிடி வாதனாய் ஏய்க்கும்ஏசும் சமர்த்தனாய்
கடுகடுத்த முகத்தினன் ஆயிருக்கும் சோம்பேறி
காலம்தாழ்த்தும் அறிவிலி தமோகுணத்தின் பிரதிநிதி
29
முக்குணத்தின் வழிப்படி மூன்றறிவும் உறுதியும்
அமைவதென்ப தெப்படி என்றுசொல்வேன் கேளுநீ         
30
செய்வதென்ப தென்னது செயத்தகாத தென்னது
பயப்படும் அதுஎது பயப்படத் தகாதஒன்று
என்னஎன்ன என்னது பிணைப்பது எதுவிடுப்பு
அளிப்பதென்ப தென்னது என்றறிய வைப்பது
விவேகம் என்றேஆகுது அவ்விவேக மானது
உத்தமத்தில் இருப்பது சத்துவத்தில் நிலைத்தது
31
அறநெறியின் பட்டது புறநெறியின் பட்டது
ஆற்றவேண்டும் செயலது ஆற்றவொண்ணா தென்னது
எனப்பகுத் தறிந்திடுமோர் திறன்இலாத நிலைஅது
ரஜோகுணம் ஆகுது சத்வத்திற்குக் கீழது
32
புலையறத்தை அறமென அறத்தைப்புலை அறமென
மயக்கம்அறி யாமைஇருள் இவைகள்தரும்  விளைவினால்
முடிவுகட்டி சரியிலாத வழியில்முயற்சி செய்வது
தாமசத்தில் இருக்குது மாயமவரை இறுக்குது
33
உடைபடாத வொன்றுமாய் யோகம்தன்னின்  பயிற்சிஒன்றால்
திடம்கெடாத வண்ணம்என்றும்  காத்திருக்கும் நன்றுமாய்
இவண்மனம் புலன்களும் அடக்குகின்ற திறமுமாய்
எவண்உள எனப்புக சத்வம்ஆகும் உதயமாய்        
34
அறம்பொருள் செயல்பலன் சிறப்பினில் விருப்பினை
புலன்நுகர் பலன்தரும் செயல்களில் விழைவினை
நலன்எனப் படும்விதம் மனத்துடை அயர்வினை
பலர்கொள அவர்ரஜோ குணத்துளர் எனநினை
35
கனவுபயம் கவலையும் கடுகடுப்பு மயக்கமும்
இதைக் கடக்கும்திறன் இன்மையும் தாமசமாய்ஆகுது
 
Bhajan,Seva,Dhyanam 18:36-37
சிறையில்பட்ட ஆத்துமா விரைவில்விடுத லைபெற
பஜனைத்யானம் சேவையாம் மூன்றுசுகமும் தேவையாம்
இதனைப்பற்றி இருப்பதால் துயரம்அனைத்தும் விடியுமாம்
முதலில் விஷம்போ லாயினும் முடிவில்அமுத மாயிடும்
ஆன்மஉணர்வு என்கிற விழிப்பளிக்கும் சுகம்தரும்
நிலைமைசத்வம் என்பதாம் அதனில்-சத்யம் இருக்குதாம்
38
புலன்தொடர்பில் வரும்சுகம் முதலில்அமுதம் ஆகுது
பழகபழகப் புரியுது விஷத்தின்விஷய மாய்அது
ரஜோகுணத்தி னாலது இப்படியாம் ஆவது
39
ஆன்மஉணர்வைக் கண்டிடா திருந்துமுழுதும் மயக்கமாய்
இருக்கும்தூக்கம் சோம்பலும் மயக்கம்தன்னில் வரும்சுகம்  
சொல்லஎன்ன இருக்குது தமசமென்ற இருளது
40
நிலவுலகம் மற்றும்மேல் உயர்உலகம் தன்னிலோ
மனிதர்மற்றும் தேவர்கள் இடையில்உள்ள குணங்களோ
சத்வரஜஸ தமசமென்ற மூன்றுக்குள்தான்  இருக்குது
இவற்றின்பிடியில் இருந்துவிடு பட்டவர்கள் வேரிலர்
41
இயற்கைதந்த குணநலன் தனக்குஇயைந்த தன்செயல்
தன்மைக்கேற்ப அந்தணர் ஆள்வோர்வணிகர் உழைப்பவர்
என்றுபகுத்த வரையறைப் படியவரும் இருக்கிறார்
42
அமைதிதவம் அடக்கமும் தூய்மைபொறுமை நேர்மையும்
விவேகமறிவு ஆதிக்கம் என்றதன்மை யின்படி
செயல்படணும் அந்தணர் என்பதுதான் நெறிமுறை
43
தீரம்வலிமை உறுதிவளமை போரில்வீரம் மற்றும்ஈகை
தலைமைதாங்கும் அந்தக்கடமை அரசர்க்குரிய நெறிமுறை
44
பயிர்வளர்த்தல் கால்நடை தனைவளர்த்தல் வாணிபம்
இவைபுரிதல் வணிகரின் வகுத்தளித்த கடமையாம்
உழைப்புதரும் நாலவர் பிறர்நலனைக் கருதியே
அதைத்தருதல் நெறிமுறை என்றுஆகும் வரைமுறை
45
தன்கடமைத் தன்மையை செய்திருத்தல் ஒருவனைப்
பக்குவமாய் ஆக்குது நிச்சயமாய் ஆகுது
அவன்செயலை அவனவன் எப்படித்தான் செய்வது
எனஉரைப்பேன் பாண்டவா கேட்டிடுவாய் அருச்சுனா
46
அனைத்துயிரின் மூலமும் எங்கும்நிறை பிரமும்
ஆனஇறைவன் ஒருவனைப் போற்றிடும்வழி  பாட்டினால்
தனதுகடமை ஆற்றினால் பக்குவத்தை எய்தலாம்
47
பிறிதொருவன் கடமையை திறம்படநீ செய்தலின் 
பிழைபடினும் உன்கடன் தனைப்புரிதல் உசிதமாம்
இயற்கைசார்ந்த கடமைகள் பாபமில்லை பார்த்தனே
அதனைச்செய்தல் என்பது ஷேமம்கொண்டு சேர்க்குமே
48
நெருப்புசூழ் புகையென செயலில்சூழ் பிழைவரும்
எனினும்இயற்கை நெறிப்படி விதித்ததொழிலே உருப்படி
49
துறவுதன்னின் பலன்களை புலனடக்கம் பற்றின்மை
ஜடசுகத்தின் துறவினால் அடைந்திதுல் ஆகுது
துறவுதன்னின் உயர்நிலை இப்படித்தான் இருக்குது
50
சுருக்கிக்கூறும் என்னிடம் பரமபிரம்ம பக்குவ
நிலையைஅடையும் வழியினை கற்றுக்கொள்வாய் பல்குணா
51-53
அறிவுகொண்டு தூய்மைகண்டு உறுதிகொண்டு அடக்கம்கண்டு
புலன்நுகர்வை விலக்கிக்கொண்டு விருப்பினின்று விடுப்புகண்டு
தனியிடத்தில் வாழ்கிறான் உணவுசிறிது உண்கிறான்
உடலும்நாவும் கட்டிவைத்து உயர்ந்ததியானம் ஆழ்கிறான்
பற்றுவிட்டு பொய்மையான கர்வம்வலிமை பெருமைவிட்டு
காமம்கோபம் ஜடப்பொருளை ஏற்கும்தன்மை தனையும்விட்டு
இருக்கும்மஹான் ஆனவன் ஆன்மஉணர்வின் உயர்நிலை
தனக்குஉயர்ந்து செல்கிறான் தானிலாதான் ஆகிறான்
54
இந்நிலையே உயர்நிலை பரமன்கூடும் இறைநிலை
இந்நிலையில் துயரிலை கவலைஇலை விருப்பிலை
எந்நிலையில் ஆயினும்பிற உயிரில்கொள்வான் சமநிலை
இந்தநிலை தூய்மையான பக்தித்தொண்டின் உயர்நிலை 
55
பக்திகொண்ட சேவையே கடவுள்காட்டும் பாதையே
முக்திவாசல் கதவினை காட்டும் அன்புசேவையே
56
இவ்விதமாய் ஆனவன் என்நிழலில் இருப்பவன்
பல்செயலைப் புரியினும் தீதிலாமல் சிறப்பவன்
என்கருணை அருளினால் நித்தியத்தின் தலத்தினை  
அவனும்வந்து அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்
Karma Yoga: 18-57
செயல்புரி செயல்புரி பயந்திடாமே செயல்புரி
செயல்புரி செயல்புரி பயன்தேடாமே செயல்புரி
செயல்புரி செயல்புரி எனைப்பணிந்து செயல்புரி
செயல்புரி செயல்புரி எனதுகாப்பில் செயல்புரி
செயல்புரி செயல்புரி பக்திதொண்டில் செயல்புரி
செயல்புரி செயல்புரி பிறகுநீயு..மேஹரி
58
என்னுணர்வில் மெய்யனாய் இருக்கநீயு மருச்சுனா
எனதுகருணை அருளினால் கட்டுவிண்டு மீளுவாய்
உனதுஉணர்வில் பொய்யனாய் இருக்கநீயு மருச்சுனா
இழந்துஉன்னை வாடுவாய் இழிந்துதானே போகுவாய்
59
எனதுஆணை மீறினால் செயல்துறந்த கேடினால்
தவறிநீயும் வாடுவாய் பதறிப்பதறி மயங்குவாய்
உனதுஇயற்கைக் கடமையாம் போரிடுதல் என்பதை
அறிந்துநீயும் நிற்கணும் எதிர்த்தபேரை வெல்லணும்
60
குந்தித்தாயின் மைந்தனே மயக்கம்கொண்ட மன்னனே
மதிமயங்கி நிற்கிறாய் எனதுஆணை மறுக்கிறாய்
எனினும்உனது இயற்படி நடந்திடாமல் மீறிநீ
செல்வதென்ப தெப்படி செயல்படுவாய்யென் எண்ணப்படி
61
ஆதிபூர்ண ஆண்டவன் அனைத்துயிரின் காவலன்
அனைத்துயிர் இயக்கத்தை அவரல்லவா செய்கிறார்
62
முழுமையாக அருச்சுனா சரணடைநீ அவரையே
அவர்கருணை ஒன்றினால் தெய்வஅமைதி கொள்ளுவாய்
பரமநித்யத் தலமெனும் பரமபதமும் எய்துவாய்
63
அனைத்துஞானம் யாவினும் ரஹசியமாம் இதனைநான்    
உனக்குவிளக்கி இருக்கிறேன் சிந்தித்திதை செயல்படு
உன்விருப்பம் எதுவென சித்தித்ததை செயல்படு
64
நண்பன்எனக்கு நீயடா ஞானம்உனக்குத் தானடா
நமக்குள்என்ன ரஹஸியமோ என்றுஎண்ணித் தானடா
உனக்குத்தந்தேன் நானடா உனதுநன்மை கேளடா
65
எப்பொழுதும் முப்பொழுதும் எனைநினைத்து பக்திசெய்
எனதுபக்த னாகிஉன் வணக்கம்தனை கணமும்சொல்
எனதுமனது நினதுஎன்று நண்பாஉறுதி சொல்கிறேன் 
66
மதம்தனைக் கடந்திடு சரண்புகு உடன்புகு
பவம்தனை அகற்றுவேன் பயம்தனை கடந்திடு
67
தவம்விடுத்த மானிடர் பக்தியற்ற ஓர்பதர்
பவம்விலக்கு மன்புச்சேவை புரிந்திடாத மானவர்
அழுக்கினாறு ஓடிப்புரை யோடிப்போன மானிடர்
தனக்கிதை விளக்குதல் என்பதாகா தாகாதே
Palashruthi: 18:68-71
பக்தரிடம் பரமமாம் இவ்விரஹ சியம்தனை
விளக்கும் மனிதன் தனக்குமே அவனின்பக்தி
உறுதியை உத்ரவாதம்செய்கிறேன் அவன்முடிவின் இறுதியில்
எனைஅடைவான் நிச்சயம் அவன்கடப்பான் எமபயம்

69
அவனைவிடப் ப்ரியசுதன் எனக்குவேறு எவருளர்?
70
இப்புனிதஉரை யாடலைக் கற்பவன்தன தறிவினால்
எனைப்பணி வழிபாட்டினை செய்யுகிறான்  என்றுநான்
அறிவிவிக்கவே செய்கிறேன் தெரிவிக்கவே செய்கிறேன்   
71
பொல்லழுக்கா றிலாமலும் நல்நம்பிக்கை விடாமலும்
எவனொருவன் இதனையே கேட்டுமகிழ் கொள்வனோ
அவன்பவபய விளைவினைக் கடந்துநல்லோர் உலகினை
அடைந்துபயன் பெறுகிறான் விரைந்துநலன் பெறுகிறான்
72
கவனமான மனத்துடன் அருச்சுனாகேட் டாயாநீ
உனதுமயக்கம் அறியாமை அனைத்தும்நீங்கித் தெளிவினை
அடைந்தனையா கௌந்தேயா எழுந்திருப்பாய் என்நண்பா 
73
எனதுஅன்பு கிருட்டினா நிலைபிறழா ஒருத்தனாய்
உனதுஅருட் கருணையால் மீண்டும்நினைவு பெற்றுளேன்
இப்பொழுது நான்பெரும் உறுதிகொண்ட மானிடன்
எனதுஐயம் யாவையும் களைந்ததான நெஞ்சினன் 
உனதுஆணை யின்படி செயல்புரியத் தயார்நிலை 
உள்ளஉந்தன் அருச்சுனன் வில்லின்வீர விஜயனாம்
74
இங்கனம் மஹாத்துமா இருவர்உரையைக் கேட்டுநான்
ரோமக்கூச்சல் கொள்கிறேன் விநோதமாக நினைக்கிறேன்
75
வியாசமுனி கருணையால் யோகங்களின் இறைவனாம்
கிருஷ்ணர் மற்றும்அர்சுசுனன் உடன்நடந்த ரஹசிய
உரையைக்-கேட்கும் பாக்கியம் கொண்டு-நானும் மகிழ்கிறேன்
76
கிருஷ்ணஅர்ஜுனர் இருவரின் இடையில்நடந்த இவ்வுரை
யாடல்தன்னை மீண்டும்மீண்டும் எண்ணிப்பார்த்து மன்னனே
கணமும்நான்ம கிழ்கிறேன் உணர்ச்சியில்தி ளைக்கிறேன் 
 
77
இறைவன்கிருஷ்ணன் உருவத்தை அதிவினோத உருவத்தை
நினைத்துநானும் பார்க்கிறேன் வியப்புமிகக் கொள்கிறேன்
மீண்டும்மீண்டும் மனதில்நான் இன்பம்தன்னைக் காண்கிறேன்
78
யோகிகளின் இறைவன்கிருஷ்ணன் எங்குஇருக் கின்றாரோ
உன்னதவில் வீரன்பார்த்தன் எங்கெலாம் உளானோஅங்கு
செல்வம்வெற்றி வலிமையும் ஞாயம்கூடி இருக்குமே
நிச்சயம்இது நிச்சயம் என்பதென்அபிப் ராயமாம்
என்றுகூறி சஞ்சயன் கீதைதன்னை முடிக்கிறான் 
 
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

 

No comments:

Post a Comment