Sunday, April 19, 2015

அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்




  

ஜட இயற்கையின் முக்குணங்கள்
1,2
பகவான்-க்ருஷ்ணர்  கூறினார் ஞானங்களில் சிறந்தது
உன்னதமாய் இருப்பது என்றவிஷயம் தன்னைநான்
உனக்குச்சொல்வேன் பார்த்தனே இதனைஅறிந்த முனிவர்கள்
பக்குவத்தை அடைந்தனர் உயர்ந்தநிலை பெற்றனர்
இதனில்நிலை பெறுவதால் எனதுதெய்வ இயற்கையை
அடைதல்-முடியும் அறிந்திடு இங்கணமாய் நிலைத்திடல்
பிறப்புமற்றும் இறப்புமே இல்லைஎன்றே உணர்ந்திடு
3
ஜடத்தின்சத்து மொத்தமும் ப்ரம்மம்என்றே அழைப்பது
அதுவேபிறப்பின் மூலமாய் ஆகுதென்று அறிந்திடு
ப்ரபஞ்சம்-படைக்கும் வகையில்-நான் அதனை-என்னில் கர்ப்பமாய்க்
கொண்டுஆக்கல் செய்கிறேன் கண்டுகொள்நீ அருச்சுனா
4
இந்தஜட இயற்கையில் அனைத்துஉயிர் இனங்களும்
பிறக்கலாகும் அறிந்திடு நானேவித்து உணர்ந்திடு
 
5
ஆசையான தொற்றுநோய் சத்வரஜச தமஸமாம்
ஜடஇயற்கை முக்குணத் தொடர்பில்-உயிரை அடையுது
அதுவரையில் சுதந்திரம்  கொண்டபிறவி யானது
குணத்தின்கட்டுப் பாட்டினுள் வந்துதளையில் சிக்குது
6
பாவமற்ற பார்த்தனே சத்வகுணம் தூயது
ஆதலினால் ஒளிதரும் தன்மையதாய் உள்ளது
இருண்டபாப விளைவுகள் தன்னிலிருந்து விடுதலை
அளிக்கும்சக்தி உடையது இந்தகுணத்தில் நிலைத்தவர்
ஞானம்வளர்த்தர் ஆயினும் இன்பப்பலனைக் கருத்தினில்
கொண்டமட்டும் கட்டினில் பட்டிருக்க லாகுவர்  
7
ரஜோகுணம் என்பது எல்லையற்ற ஆவல்கள்
பாலின்பட்ட குணமது இதனில்பட்ட மானிடன்
விருப்பங்களின் ஆவலால் ஜடப்புலனின் அடிமையாய்
புலன்பலன் தனைநினைத்து செயல்புரிந்து உழல்கிறான்
8
தமோகுணம் ஆனது உயிரின்மயக்க நிலைக்குமே
காரணமாய் ஆகுது இருண்டநிலைமை தானது
இதனில்பட்ட ஜீவனோ சொம்பல்கொண்டு இருக்குது
உறக்கம்தன்னில் இருக்கும்அதுஓர் பித்தம்கொண்டே கிடக்குது 
9
சத்வம்இன்பம் விழைதலும் ராஜசம்  பலனில்நாட்டமும்
தாமஸம்-பித்த உறக்கமும் கொண்டிருக்க லாகுது
10
சிலசமயம் ரஜஸமோ சத்வகுணத்தை வெல்லுது
சிலசமயம் சத்வமோ ஓங்கிரஜஸை வெல்லுது
சிலசமயம் தமஸமோ மற்றிரண்டை வெல்லுது
11-13
சத்வகுணத்தில் ஆனந்தம் துய்க்கஉடலின் கதவுகள்
யாவும்ஞானம் தன்னினால் ஒளிர்ந்திருக்க வேண்டுமாம்
ராஜசம்மிஞ்சத் தோன்றுது பற்றுஆசை ஏக்கமாம்
கடினஉழைப்பில் நாட்டமும் பலனைநோக்கி எழுவதாம்
தாமஸம்ஓங்கத் தோன்றுது பித்தம்மயக்கம் இருளுமாம்
14-15
சத்வகுணத்தில் மரிப்பவன் தூய்மையான உயரிய
உலகம்தன்னை அடைகிறான் இன்பம்தன்னைத் துய்க்கிறான்
ரஜஸில்-மரணம் எய்தினால் *ரஜஸரிடையே பிறக்கிறான்
தமஸகுணத்தில் மரிப்பவன் மிருகமாகப் பிறக்கிறான்   
*ரஜோ குணம் உடைய பலன் கருதி செயல் புரிபவரிடையே
14-16
சத்வம்தூய்மை யாக்குமாம் ரஜஸின்செயல்கள் துக்கமாம்
தமஸோஅறி யாமையில் சென்றுநம்மைச் செலுத்துமாம்
14-17
சத்வகுணம் உண்மைஞானம் விருத்திசெய்ய உதவுமாம்
இன்னும்வேண்டும் என்றபே ராசைரஜஸில் விளையுமாம்
கடைநிலையின் பட்டதாம் தமோகுணம் கெட்டதாம்
அதனில்அறி வின்மையும் மயக்கம்-பித்தம் தோன்றுமாம்
14-18
சத்வகுண வான்கள்-வானின் உயர்உலகை அடைவராம்
ரஜஸின்பால் பட்டவரோ புவியில்உழலும் மனிதராம்
தமஸில்மயங்கிக் கிடப்பவர் தன்னைமறந்து வாழ்பவர்
கீழுலகாம் நரகினைச் சென்றுவாழும் தரத்தவர்

14-19
இந்தமூன்று இயற்கையின் குணத்தைமீறி செயல்களும்
இல்லைஎன்னும் உண்மையும் இறைவனான பரமனோ
இதனைக்கடந்த ஒருவனே என்றஉண்மை தன்னையும்
உணரும்போது அருச்சுனா எந்தன்ஆன்ம தத்துவம்
தன்னைநீயும் உணருவாய் *தூய்மையான உணர்வுமாய்       
*Pure consciousness (Supra Conciousness)
14-20
உடலைஅடைந்த ஒருவன்இந்த முக்குணத்தைக் கடந்திடில்
பிறப்புஇறப்பு மூப்பெனும் துன்பப்பிடியைக் கடந்துநல்
சிறப்புவாய்ந்த அமுதமாம் முக்திதன்னின் சுவையினை
சுவைக்கலாகல் ஆகுது *புலப்படாத நிலையது
*ஜீவன் முக்தரான சித்தரின் நிலை சாதாரண அறிவுக்குப் புலப்படாது
14-21
இதனைக்கேட்ட அருச்சுனன் கேள்வியொன்றை எழுப்பினான்
குணத்தின்உயர்ந்த கோமகன் தன்னைஅறிவ தெப்படி
அந்தசீலன் நடத்தையும் இருப்பதென்ப தெவ்விதம்
எங்கனமோ இயற்கையை அவன்கடந்து நிற்பது ?
14-22-25
மனம்புகுந்த மாயவன் மதம்கடந்த மாதவன்
உலகில்-உண்மை வடிவினில் தோன்றுகின்ற அன்பினன்
பேசலுற்ற லாயினன் ஐயம்களையு மாசானாய்
ப்ர காசமான-ஏற்றமும் பற்றுமயக்கம் இவைகளும்
தோன்றும்போது வெறுப்பவை மறையஏக்கம் தன்னையோ 
அடைந்திடாத ஒருவனும் இயற்கைதன்னின் விளைவினைக்
கடந்துகவனம் அற்றவன் போன்றுஉள்ள ஒருவனும்
உறுதிகொண்ட ஒருவனும் குணங்கள்செயல்கள் புரிபவை
என்றுகொண்ட ஒருவனும் இன்பதுன்பம் இரண்டையும்
கல்லும் பொன்னும் மண்ணையும் சமதையாகக் கண்டுமே
அறிவுசார்ந்த ஒருவனாய் புகழ்ச்சிஇகழ்ச்சி இரண்டையும்
ஒன்றுமாகக் கொண்டுமே மானஅவ மானத்தால்
மாற்றமற்ற மனிதனாய் நண்பர்பகைவர் தன்னையே
ஒன்றுமாய் நடத்தியே நன்றுநாள் கடத்தியே
பலனைநோக்கி இருந்திடா திருக்கும்மாநி டன்தனை
இயற்கைகுணம் வென்றவன் அதனைக்கடந்து உயர்ந்தவன்
என்றுஉணரு பார்த்தனே  நன்றுஉணரு நண்பனே  
 
14-26
குறைபடாத பக்தியின் தொண்டில்நின்ற ஒருவனாய்
கறைபடாத உயர்வினால் நிலைத்துநின்ற ஒருவனாய்
வாழும்மனிதன் விரைவினில் இயற்கை-குணத்தின் பிடியினை
மாயத்தொடர்பைக் கடக்கிறான் பிரம்மநிலையை அடைகிறான்
14-27
இறுதியான முக்தியின் பரமசுகத்தின் மூலம்நான்
மரணம்-மற்றோர் அழிவுமே அற்றதான நித்திய
அருவப்ரம்மத் தன்மையின் அடிப்படையின் அடிப்படை
ஆனஇறைவன் எனப்படும் பரமமான புருஷன்நான்

 

No comments:

Post a Comment