Friday, October 31, 2014

கண்ணனே சரண் - தனியன்கள்



உலகில்-தோன்றும் எதுவும்-என்னை உதறவேநீ சொல்கிறாய்
புலனில்-தோன்றும் ஆசையாவும் பற்றிடாதே என்கிறாய்
களத்தில்-போரில் மனதில்-அமைதி கொண்டு-நீயும் நிற்கிறாய்
உளத்தில்-உன்னை கொள்ள-எதுவும் முடியும்-என்றும் சொல்கிறாய்
பிறப்பில்-உயர்ந்த தெய்வத்-தோன்றல் பார்த்தன்கூட கலங்கினான்
புரிவதாக இல்லைநீயும் கூறியது என்கிறான்
குறைவதான அறிவிலுன்னை எப்படிநான் அறிவது
உறைவதாக மனதிலுன்னை எப்படிநான் அழைப்பது
பேயாய்-மனது அடங்கிடாமல் அலைந்திடவே செய்யுது
நாயாய்-மீண்டும் வாலைக்குழைத்து மேடுநோக்கி செல்லுது
நோயாய்-யாண்டும் செய்த-கருமம் பற்றி-என்னைத் தொடருது
வாயால்-நானும் கதறிடவே சோர்வில்-மனதும் ஓயுது
சபையிலன்று அழைத்த-குரலில் இரக்கம்கொண்ட கண்ணனே
கஜனின்-குரலில் துக்கம்-கேட்டு இறங்கி-வந்த மன்னனே
விரைவிலிரங்கி கருணை-காட்டு உறங்கிவாழும் என்னிடம்
புரிவதாக வழியைக்காட்டிச் சேர்த்துக்கொள்நீ உன்னிடம்..!

*மேடு = குப்பை மேடு என்பதாகும் புலன் வழி பற்று 

__________________
கண்ணன்உலகின் மன்னவன் மாந்தருக்குக் கண்ணவன்
தெரிந்திடாத குறையிருந்தும் பார்த்திடாத தாயவன்
புரிந்திடாத பூசையிலும் மகிழ்ந்திருக்கும் தூயவன்
புரிந்து-நிற்கும் குற்றங்களை மறந்திருக்கும் சேயவன்
__________________

அகத்தினில் உரைக்கும் காரம்
கணத்தினில் விரைந்தே போக்கும் 
இனிப்புமாம் கண்ணன் பாதம் 
பனிக்குமாம் நெஞ்சில் ஓதம் 
விலகுமாம் உந்தன் சேதம் 
விளங்குமாம் சித்தன் போதம் 

 *அகத்தினில் உரைக்கும் காரம் = அகங்காரம் 
__________________

ஒருமை கொள்ள இருமைவிட்டு
*மூன்று வேளை பூஜைவிட்டு
நான்கு வேதக் கருவரிந்து
ஐந்து பூத உலகிருந்து
*ஆறுமாக நீர் பெருக்கி
எழுபிறப்பின் வினை அறுக்க
*எண்டிசையின் வெளித் துறந்து
ஒன்பது வாய் உடல் மறந்து
வித்திலா விதம் படுத்த
*பத்துமான கீத மன்னன்
சத்தியத்தின் அன்பு பாதம்
பணிந்திருநீ பாழ் மனமே


*மூன்று வேளை பூஜைவிட்டு =
தூல உலகின் பலன் கருதி,மூன்று வேளை மட்டும் பூஜை என்றில்லாமல் அனவ்ரதமும் இறை நினைவில் இருப்பது.

*ஆறுமாக நீர் பெருக்கி = பக்தியில் விழி நீர் சொரிந்து
*எண்டிசையின் வெளித் துறந்து = உள் நோக்கி இருந்து
*பத்துமான = தசாவதாரன்

 __________________

ஒரு போர் முனையில் கண்ணன் அதை உரைத்தான்
( மெட்டு = ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பில்-உரிமைக் குரல் )
____________________________________



ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
(2)
நம்போல் மனிதருக்கும் யோகம் புரிந்துயரும் 
நல்ல வழி-அழகாய் அந்த கீதை-தரும்     
ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
 (MUSIC)
சோக உரு வாகி சொந்த நிலை-மாறி பார்த்தன் தடுமாறவே
ஸ்லோகம் எழு-நூறில் கண்ணன் தரும்-கீதை பிறவி மருந்தாகுமே
உண்டு-நாம் காணவே கண்டு-நாம் தேறவே
கண்ணன் சொன்ன-கீதை என்றும்-பாதை காட்டுமே
ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
 (MUSIC)
  உடலைச்-சதமென்று உலகை-நிஜமென்று மனது நினைக்கின்றது
செயலை எனதென்று *பலனின் நிலை-கண்டு சிரித்து-அழுகின்றது
உன்-திறம் உன்-வசம் என்பது ஏதடா
என்றே சொல்லும் கீதை ஒன்றின் மேலே ஏதடா
ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
 (MUSIC)
இன்பம் பலனென்று செயலில் வரும்போது செயலை எனதென்கிறாய்
துன்பம் வரும்போது இறைவன் செயலென்று அவனை நீ-நோகிறாய்
(2)
கண்ணனே நித்தியம் சொன்ன-சொல் சத்தியம்
** அறியா நோயும்-தன்னால் போக அதுதான் வைத்தியம் (2)
ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
 நம்போல் மனிதருக்கும் யோகம் புரிந்துயரும் 
நல்ல வழி-அழகாய் அந்த கீதை-தரும்     
ஒரு போர்-முனையில் கண்ணன் அதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்

* இன்பம் பலனாகக் கிட்ட மகிழ்ந்து களிப்பதும் துன்பப் பலனில் அழுவதும் சாதாரண மனதின் இயல்பாக இருக்கிறது 
** அறியாமை நோய்
____________________



No comments:

Post a Comment