Thursday, October 30, 2014

அத்தியாயம் 9- ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்







மிக ரஹஸ்யமான அறிவு

9:1-10
என்னிடத்தில் அருச்சுனா பொறாமைஇல்லை உன்னிடம்
ஆதலினால் கண்ணன்நான் உனக்குஇதனைச் சொல்கிறேன்
உன்னதமாம் அறிவிது பரமமான ரகசியம்
துன்ப மாய வாழ்வினின்று மீளஉதவும் அதிசயம்

இந்தஉயர் ஞானமே ஞானத்திலே தலையுமாம்
எளிதில்யாரும் அறிந்திடாத பரமபரம ரஹஸ்யமாம்
தூய்மையினும் தூய்மையாம் அருமையிலும் அருமையாம்
ஆன்மஉணர்வை இன்பஉணர்வை அளிக்குமாதி தர்மமாம்

பக்திகொண்டு அன்புத்தொண்டு செய்யுகின்ற தன்மைவிட்டு
விலகிநிற்கும் மாந்தர்என்றும் என்னைக்கண்டு கொள்ளல்என்று
தான்தனது தனக்குஎன்று இருக்குமந்த மாந்தர்சென்று
சென்றுவந்து வந்துசென்று மாயநிஜத்தில் உழல்கிறார்

உலகம்முழுதும் நானடா அதுவும்எதுவும் நானடா
ஜீவன்யாவும் என்னிடம் பரமன் நானோ தன்னிடம்
படைத்தயாவும் உயிரினம் ஆழ்வதில்லை என்னிடம்
படைத்துக்காத்து அழிக்கிறேன் ஆனால்ஒதுங்கி நிற்கிறேன்
காற்றுவலிமை மிக்கது சுற்றிஎங்கும் வீசுது
சற்றும்கூட இடம்விடாது உலகம்எங்கும் நிறையுது
அண்டம்முழுதும் உள்ளபிண்டம் உயிரும்மற்றும் ஜடங்கள்யாவும்
நேற்றுஇன்று நாளைஎன்று என்றும்என்னில் நிறையுது

கல்பமுடிவில் ஜடங்கள் யாவும் என்னிடமே கரைவன
நல்லஉறக்கம் கொண்டுமீண்டும் என்னிடமே பிறப்பன

ப்ரபஞ்சம்முழுதும் என்னுது எந்தன்நினைவில் மன்னுது
கொஞ்சம்கூட தடைப்படாமல் மறைந்துபிறந்து மறையுது
இந்தபிறப்பு இறப்புஎல்லாம் அண்டம்பிறந்து மறைவதெல்லாம்
எந்தனாலே நிகழுது எந்தன்எண்ணம் தானது

உலகைப்படைக்கும் இறைவன்நானும் அதனைரசித்து மகிழ்கிறேன்
என்றும்அதனைப் பிரிந்துதனியே விட்டுவிலகி நிற்கிறேன்

என்றும்அதனைக் கொண்டுநிறுத்தி கண்டுநடத்தி இருக்கிறேன்
மீண்டும்மீண்டும் அண்டம்தனையே உண்டுபடுத்தி நிறைகிறேன்

9:11-20
மனிதஉருவில் தோன்றும்என்னை மூடர்கேலி செய்கிறார்
எனதுமகிமை ஆனதுமுழுமை அறிதல்இன்றி சிரிக்கிறார்

இந்தமனிதர் சொந்தஅறிவு விட்டுமயங்கி உழல்கிறார்
சிந்தையதனில் வந்ததான நாத்திகம்பால் செல்கிறார்
இந்தமனிதர் கொண்டமயக்கம் தன்னில்செயலைப் புரிகிறார்
எந்தசெயலும் எந்தன்எனது என்பதினால் தோற்கிறார்
இந்தகுழப்பம் இல்லாதவர்கள் அன்புபழகும் பக்தரே
எந்தன்காப்பில் மாந்தர்தனக்கு சேவைசெய்யும் புத்தரே
எந்நிலையிலும் பரமன்என்று என்னைஅறியும் முக்தரே
நாமம்உதட்டில் சேவைகரத்தில் கொண்டஎவரும் சித்தரே

இந்தமாந்தர் எந்தன்புகழைப் பாடிப்பணியும் பக்தரே
வந்தவேலை இந்தவேலை என்றஞான சித்தரே

சொந்தஅறிவு தன்னின்விரிவு என்றமாந்த ரானவர்
ஆண்டவனை தனக்குவமை அற்றவிஸ்வ ரூபமாய்
கொண்டசிறந்த வலிமையினால் வேறுஎதோ ஒருவனாய்
கொண்டுநெஞ்சில் போற்றுவர் சென்றுபணிந்து ஏத்துவர்

16
ஆனால்என்னை அருச்சுனா யாரென் றுரைப்பேன்தனஞ்செயா
மருந்துசடங்கு யாகபூஜை மந்திரமும் நானடா
யாகம்தன்னில் தோன்றும்நெருப்பும் அதனில்சொரியும் வெண்ணைநெய்யும்
கொண்டநிவே தனமும்நான் எண்ணிடவே ரல்லநான்

அகிலம்தன்னின் தந்தைநான் அதனைபடைத்த தாயும்நான்
ஆதியான நாதன் நான் ஓமின்பிரணவ நாதம்நான்
ரிக்குயஜூர் சாமமாக ஸ்புரித்ததான வேதம்நான்

இலட்சியத்தைக் காக்கும்நான் இறைவனான சாட்சியம்
வசிக்குமிடம் அடைக்கலமும் படைப்பும்அழிவும் யாவும்நான்
அண்டம்பிறக்க நின்றுநிலைக்க சென்றுமறையக் கொண்டுமுடிக்க
என்றுமிருக்கும் சத்யம்நான் தொன்றுதோன்றும் விதையும்நான்

குழம்பிடும் தனஞ்செயா சூடும்மழையும் பஞ்சமும்
என்னியல்பால் இயங்குது என்னிடம்தான் இருக்குது
நித்யம்மரணம் இருப்பவை விந்தைமாய தோற்றமும்
எல்லாம்என்னில் இருப்பன என்னிடமே தோன்றின

ஸ்வர்க்கபோகம் நாடிஅறிய வேதப்பாடம் நன்குபயின்று
யாகயக்ஞம் ஓடிமுயன்று சோமபானம் அருந்திஇருக்கும்
தேவர்களும் மாந்தர்களும் மறைமுகமாய் என்னையே
வழிபடுதல் செய்கிறார் அதனைஅவரும் அறிகிலார்

9:21-30
இவ்விதமாய் சொர்க்கம்நாடி இன்பங்களை சுகித்துஆடி
மீண்டும்இந்த உலகம்தேடி வந்தமாந்தர் கோடிகோடி
ஒதும்வேத மந்த்ரதந்த்ரம் செய்யும்பூஜை யாகயந்த்ரம்
ஆனகொள்கை மூலம்சபல சுகமேகொண்டு மீண்டும்பிறப்பர்

ஆனால்எந்தன் தெய்வஉருவின் மீதுத்யானம் செய்துமனதில்
பக்திபூண்டு அன்புத்தொண்டு செய்யுவோர்க்கு யாவும்தந்து
நித்தியத்தில் சேரக்கண்டு கொண்டயாவும் காத்துநின்று
சத்தியத்தின் உருவம்கொண்டு இருப்பேன்அவரின் மனதில்நின்று

யாகம்தன்னில் மூடும்புகையை விலக்கும் தீயில்
சொரியும்அவியும் உருகும்நெய்யும் பருகவென்று
தேவர்களுக்கு அளிக்கும்யாவும் என்னை அடையும்
மாந்தர்இதனை அறிகிலாதார் அறிவில்முழுமை பெறுகலாதார்

யாகநோக்க மாகவிளங்கும் நாதனென்று என்னைக்கண்டு
கொண்டுஎந்தன் தெய்வக்கோலம் தன்னைநெஞ்சில் மதித்திடாமல்
செய்யும்யாக பூஜைக்கெல்லாம் தன்முயற்சி தன்வளர்ச்சி
என்றுவாழும் மாந்தர்அழிவர் வந்துமீண்டும் மண்ணில்உழல்வர்

Pooja: 9-25
தேவபூஜை செய்பவர் தேவரிடை பிறப்பவர்
பேய்கள்பூதம் பித்ருபூஜை உபாசனை செய்பவர்
அவர்களிடை வாழ்பவர் அவர்களாக மாறுவார்
அன்புநெஞ்சில் என்னைக்கொள்ள என்னிடமே வாழுவார்

அன்புகொண்ட பக்திபூத்த பஞ்சுமான நெஞ்சுடன்
படைத்தஎதையும் ஏற்கிறேன் படைத்தநானும் மகிழ்கிறேன்
அந்தஒருவன் தந்தஇலையோ பூவோபழமோ சுத்தநீரோ
கொண்டுநானும் களிக்கிறேன் உயர்வுவழியை அளிக்கிறேன்

உண்பதல்ல படைப்பதல்ல கொடுக்கும்யாவும் மட்டுமல்ல
செய்யும் தவங்கள் அனைத்தையும் எனக்குநீசெய் அர்ப்பணம்

இப்படியாய்ச் செய்யும்செயலின் விளைவுமற்றும் அதனினால்
பாதிக்கநீ பட்டிடாமல் முக்திபெற்றென் னையடைவாய்

யாரிடமும்பொ றாமையோ பட்சபாத நிலைமையோ
கொண்டிடாமல் இருக்கிறேன் சரிசமமாய்க் கொள்கிறேன்
எனினும்பக்தித் தொண்டினில் என்னைப்பணியும் ஒருத்தனோ
என்னுடைய நண்பனாம் என்னில்இருக்கும் ஒருவனாம்

மோசமான முறையில்ஒருவன் செயல்தனைப் புரிவதாய்த்
தோற்றம்தந்தி ருப்பினும் அந்தசெயல்நல் நெஞ்சுடன்
செய்யும்சேவை பக்தியாய் இருக்கஆகும் புனிதமாய்
ஏனெனில்நான் காண்பது நல்லநெஞ்சம் ஒன்றையே

31
சீக்கிரமாய் அவனுமே நல்லவனாய் ஆகிறான்
செயல்முறையில் சிறக்கிறான் அயர்வுராமல் அவனும்அன்புத்
தொண்டினாலே சிறக்கிறான் அமைதிகண்டு அமைகிறான்
எனதுபக்தன் அழிவதில்லை என்றஉண்மை தன்னையே
உலகம்முழுதும் பறைந்துரைப்பாய் பயத்தின்தயக்கம் இன்றியே

என்னை அடைக்கலம் கொண்டவன் இழிந்தஓர்
பிறவியே ஆயினும் செல்லுவான் பரகதி

துன்பம்யாவும் தந்தஉலகில் சென்றுமாயும் இந்தஉலகில்
எனதுமாண்பு அன்புத்தொண்டில் மனதைவைத்து உலகில்இருக்கும்
அந்தணரும் பக்திமாரும் புனிதமான மன்னர்யாரும்
பரந்தஇந்த பூவிலே சிறந்ததான பேர்களே

சிந்தையாவும் என்னைக்கொண்டு வந்தனையாம் என்னைசெய்து
உந்தன்நெஞ்சில் வழிபடு என்னில்வந்து சேர்ந்திடு

No comments:

Post a Comment