Wednesday, October 29, 2014

அத்தியாயம் 5 - த்யான கர்ம சன்யாஸ யோகம்



 


கர்மயோகம் - கிருஷ்ண உணர்வில் செயல்
 
5:1-10
இதனைக்கேட்ட அருச்சுனன் விளக்கம்கேட்டு வேண்டினான்
செயலைமுதலில் துறக்கவும் பிறகுபக்தி கொண்டுமே
அதனைப்புரிதல் வேண்டுமே  என்றுகண்ணா  சொல்கிறாய்
இந்தஇரண்டில் சிறந்தது என்னவென்று விளக்கிடு
 
இந்தஇரண்டும் அருச்சுனா முக்திநல்கும் பாதையே
ஆனால்பக்தி சேவையே சிறந்ததாக அறிந்திடு
செயலின்விளைவில் விருப்புவெறுப்பு அற்றமனிதன் துறவியே
இருமைவென்று ஒருமை காண பந்தபாசம் அறுத்தவன் 
 
பக்திசேவை இரண்டிலும் எதுவெனினும் முழுமையாய்
முயற்சிகொண்டு நடப்பவன் இரண்டின்பலனை அடையலாம்
என்றுசான்றோர் புகலுவர் அறிந்திடுநீ பார்த்தனே
சேவைபாதை செயல்களும் துறவுப்பாதை வழிகளும்
ஒன்றுஎன்று உணர்பவன் நன்றுநன்கு காண்பவன்
இறையின்அன்பு தொண்டினில் புரியும்அன்பு சேவையில்
ஈடுபாடு இல்லையேல் செயல்துறக்கும் துறவினில்
இனிமைஎன்றும் இல்லையே தொல்லைவிலக்கும் இல்லையே
தவத்தில்இருக்கும் முனிவரும் பக்தியோகப் பாதையில்
சேவைதன்னை செய்துதான் பரமன்பதத்தை அடைகிறார்
 
பக்தியோடு செயல்களில் ஈடுபடும் தூயவன்
மனம்புலன்  அடக்கியே  அதன்வழி செலாமலே
தினம்நடத்தும் வாழ்விலே அன்புசேவை செய்துமே
செயல்புரிதல் ஆயினும் அதனில்பற்று கொண்டிலன்
பக்திகொண்ட தூயவன்  செயல்புரிந்து இருப்பினும்
மனதும்புலனும் கடந்ததுமே அன்புஉள்ளம் கொண்டுமே
செய்யும்செயல்கள் யாவுமே சேவையாக ஆகுமே
அதனின்விளைவு பலனுமாய் அவனில் சேர்வதில்லையே
 
தெய்வஉணர்வில் திளைத்தவன் புலனைத்துறந்த தூயவன்
தன்னின்கேட்டல் பார்த்தலும் தொடுதல்நுகர்தல் உண்ணலும்
நடப்பும்உறக்கம் ஸ்வாசமும் தானாகவே நிகழ்பவை
அவற்றினின்று தன்னையும் வேறேனவே காண்கிறான்
பற்றுவிட்டு கடமைகள்  செய்துபலனைப்  பரமனின்
பதகமலம் தன்னிலே அர்ப்பணமாய்த்  தருபவன்
நீர்நனைக்காத் தாமரை  இலையைப்போல இருப்பவன்
வினையைத்தொடரும் விளைவிடம் உறவுதுறந்து இருப்பவன்

5:11-12
பற்றுவிட்டு உடல்மனம் அறிவுமற்றும் புலனுடன்
யோகிசெயல்கள் யாவுமே தூய்மைநோக்கம் கொண்டுமே
பக்திகொண்ட தூயவன் அதனில்உறுதி பூண்டவன்
தூயஅமைதி அடைகிறான் பலனைஎனக்குத் தருகிறான்
பக்திஉணர்வு அற்றவன் தெய்வசிந்தை விட்டவன்
முயன்றுசெயல்கள் புரிகிறான் அதனின்பலனில் சிக்கவே

5:13-15
உடலில்உறையும் *ஆத்துமம்  இயல்பைக்கட்டி மனதினால்
செயல்கள்யாவும் துறந்திடில் வாசலொன்ப துடையமா
நகரில்செயல்கள் செய்திடா  காரணமாய் இருந்திடா
நிலையில்நன்கு  வாழ்கிறான் இன்பம்ஒன்றே காண்கிறான்
*ஜீவாத்மா
*உடல்நகரின் நாயகன் செயலை விளப்பதில்லையே
செயல்கள் தன்னில் எவரையும் தூண்டுவதும் இல்லையே
செயலின்பலன்கள்  தன்னையும்   தோற்றம் செய்வதில்லையே
இவைகள் யாவும் இயற்கையாம் மாயை தன்னில் நடிப்புமே
*ஆத்மா
பாபம்மற்றும் புண்ணியம் தன்னைப்பரம ஆத்துமம்
ஏற்புசெய்வதில்லையே அதனைஅடைவ தில்லையே
எனினும்உண்மை ஞானத்தை மயக்குமறி யாமையால்
ஜீவன்மயக்கம் கொள்ளுது மாயையிலே உழலுது

5:16
ஞானத்தீயும் எழுந்திட அக்ஞானந்தான் அழியுமே
ஞானதீப ஒளியிலே ஜீவன்ஒளிரும் போதிலே
பகலவனின் ஒளியிலே யாவும்விளங்கல் போலவே
ஞானத்தீயின் ஒளியிலே யாவும்விளக்கம் ஆகுமே

அறிவுமனம் நம்பிக்கை  ஆகியஇம் மூன்றையும்
பரத்தின்வசம் அளித்தவன் பதத்தில்சரண் அடைந்தவன்
கணத்தில்ஞானம் அடைகிறான் களங்கம்நீங்கப் பெறுகிறான்
தினத்தில்செய்யும் சாதனை மூலம்முக்தி செல்லுறான்
 
சரணநோக்கில் பக்தியில் செயல்புரியும் சாதகன்
விவரமறிந்த ஞானவான் அடக்கமுள்ள சாதுவாம்
அவனும்கொண்ட நோக்கிலே பசுவும்நாயும் யானையும்
நாயைத்தின்னும் ஒருவனும் கற்றறிந்த அந்தணன்
யாவும்ஒன்று என்றுமே பாவம்புண்யம் ரெண்டுமே
எழுந்தஞான உணர்வினால்  அவனைத் தொடுவதில்லையே
 
பன்மைவிட்ட ஒருமையில் பேதம்விட்ட சமதையில்
மனதைகட்டும் திறமையால் நிலைத்த அந்தசாதகன்
இகத்தில் வாட்டும்பிறவியும் பயத்தைஊட்டும் இறப்புமே
தொட்டிடாத ஒருவனாம் அதனைவென்ற வீரனாம்
மட்டிலாத திறமுடை ப்ரம்மஞானம் பெற்றதால்
அந்தசாது கோதிலா ப்ரம்மம்போன்ற ஒருவனாம் 

5:20
விருப்பம்தன்னை அடைவதால் மனதில்மகிழ்ச்சி கொள்வதும்
அஹ்தீடேரா நிலையினால் துயரம்கொண்டு துடிப்பதும்
அற்றநிலை கொண்டவன் இறையின்ஞானம் தெரிந்தவன்
போற்றலாகும் உன்னத நிலையில்நிற்கும் தூயவன்
 
உள்ளிருக்கும் ஆத்துமன் புலனின்இன்பம் தன்னிலோ
ஜடப்பொருளின் அழகிலோ கவர்ச்சிகொள்வ தில்லையே
உடலில்உறையும் சாட்சியாய் இருக்குமந்த  சத்துவன்
தன்னுள்நிலைத்து இருப்பவன் தன்னில்இன்பம் கொள்பவன்
ஜடப்புலன்கள் துய்ப்பதும் ஜடப்பொருளின் தொடர்பதும்
தளைப்படுத்தும் இன்பமே முடிவில்இருக்கும் துன்பமே
முதலும்முடிவும் உள்ளதாய் உள்ளவிந்த இன்பமோ
நிலைப்படாது என்பதால் இதனைஞானி துறக்கிறான்
 
எடுத்தஇந்தப் பிறப்பிலே  படுத்தும்உடலைத் துறக்கவே
தொடுத்தப்பாசக் கணையிலே உயிர்பிரியும் முன்னரே
படுத்தும்புலன்கள் தன்னொடு  ஆசைகோபம் இரண்டையும்
கட்டில்வைத்த சாதகன் மகிழ்ச்சிகொண்ட யோகியாம்

5-23
தன்னில் நிலைத்திட்ட தனக்குள் மகிழ்ந்திட்ட
மண்ணில் செய்திட்ட செயலில் பலன்விட்ட
உள்ளில் புறப்பட்ட ஒளியில் ஒளிர்ந்திட்ட
பரத்தில் ஒன்றிட்ட இகத்தில் சிறந்திட்ட
மானிடன் யோகியாம் மானுடம் துறந்தபின்
பரமனின் பதம்சென்று முக்தியைப் பெறுகின்றான்

Service : 5-24
இருமையும் ஐயமும் சிறப்புறக் கடந்திட்டு
ஒருமையின் சிரத்தையால் உள்சென்று நிலைத்திட்டு
உயிர்களின் நலத்திற்கு சேவையைப் புரிந்திட்டு
அயர்வுரா திருப்பவன் பாபத்தின் பிடிவிட்டு
துயர்தரும் தளைவென்று  பரமெனும் அகம்சென்று
உயர்வுறு பரமனின் பதம்தன்னில் கரைகின்றான்

Goal of life : 5-25-26
புலனின்இச்சை விடுத்தவன் கோபம்தன்னைத் துறந்தவன்
கணமும்தன்னில் நிலைத்தவன் தன்னொழுக்கம் கொண்டவன்
மனமும்உடலும் ஒன்றிய சாதனையில் சிரத்தையும்
கொண்டசாது சிறந்தவன் விரைவில்பரத்தை அடைபவன்

Dhyanam: 5-27,28
அனைத்துப்புற விஷயமும் வெளியில்நிறுத்தி புருவத்தின்
மத்தியினில் கண்களை அவற்றின்பார்வை தன்னையும்
நிறுத்திநாசி உள்ளினுள் ஸ்வாசம்தன்னை  நிறுத்தியே
மனம்புலன்கள் அறிவினை கட்டில்வைத்து சாதகன்
ஆசைபயம் கோபமாம் தளைகளின்று விடுதலை
பெற்றுஅந்த நிலையினில் நிரந்தரமாய் இருந்திடில்
சற்றும்ஐயம் இன்றியே பற்றறுந்த நிலையினால்
நிச்சயமாய்  விடுதலை பெற்றுமுக்தி அடைகிறான்

5-29
யாகயக்ஞம் தவங்களின் இறுதியான லட்சியம்
ஒன்பதின்மர் கிரகமும் மற்றுமுள்ள தேவதை
என்பதான தெய்வங்கள் தன்னின்பரம ஈசனாய்
அனைத்துயிரின் நண்பனாய் என்னைஅறிந்த ஞானியர்
உலகமாயத் துயரங்கள் யாவினின்றும் விடுதலை
பெற்றுஅமைதி கொள்கிறார் முற்றுபெற்று வாழ்கிறார்
 
 
 

No comments:

Post a Comment