Wednesday, October 29, 2014

அத்தியாயம் 4 - கர்ம சன்யாஸ யோகம்






உன்னத அறிவு
 
4:1-10
அழிவிலாத யோகவிஞ் ஞானம்தன்னை சூரிய
தேவவிவஸ் வானுக்கு ஞானவுப தேசமாய்
நானளித்த பின்அவன்  மனிதகுலத் தந்தையாம்
மனுவினுக்குத் தந்தனன் பிறகுமனு வானவன்
அதனைஅரசன்  இஷ்வாகு தனக்குமுப தேசித்தான்
சங்கிலியின் தொடரென தொடந்துவிந்த  யோகஞானம்
காலம் போன போக்கிலே தொடர் அறுந்து மறைந்தது
பரமனுடன் உறவுற உதவுமிந்த யோகஞானம்
உனக்குஎன்னால்  கிட்டுது புரியும்படி விளங்கவே
 
இதனைக்கேட்ட அருச்சுனன் வியப்புமிகக் கொண்டனன்
பேசலுற்ற  லாயினன் பின்வருதல் போலவே
தானும்கொண்ட பிறப்பிலே உனக்குசூர்யன் மூத்தவன்
எங்கனம்நான் புரிவது நீமுதலில் சொன்னது
 
மண்ணில்பிறப்பு என்பது உனக்கும்பலது எனக்கும்பலது
எனக்குஅது தெரிந்ததுஉன் அறிவுக்கு மப்பாலது
எனக்குபிறப்பு என்பது இல்லாமல்தான் ஆகுது
புலனறிவின் மானிடர் தனக்குஇறைவன் ஆயினும்
உன்னதத்தின் பிறப்புமாய் யுகம்யுகமாய்த் தோன்றுவேன்
உன்மத்தங்கள் மலிந்திட அறமும்தழைந்து குறைந்திட
உண்மையுமாய் நானுமே உலகத்திலே தோன்றுவேன்
பக்தர்களைக்காத்திட கொடியவரைஅழித்திட  அவதரிப்பு செய்கிறேன்
எனதுதோற்றம் செயல்கள்இவற்றின் உன்னதத்தை உணர்பவன்
தெய்வத்தன்மை அறிபவன் உடலைநீக்கி சென்றபின்
பூவுலகில் திரும்பிடான் மாயப்பிறப்பு கொண்டிடான்
சத்தியமாம் நித்திய என்னுலகை அடைகிறான்
பற்றுபயம் கோபமாம் தளைகள்விட்டு நீங்கியே
என்னில்முழுதும் லயித்தவர் என்னைச்சரண் புகுந்தவர்
என்னைப்பற்றிக்  கொண்டவர் என்னைப்பற்றி அறிந்ததால்
மெய்யறிவு கொண்டவர் தூய்மைபெற்று உய்ந்தவர்.

 4:11-15
தூய்மைபெற்ற மாந்தர்கள் என்னில்சரண் அடைதலின்
தன்மைதன்னிற் கேற்பவே பலனைநானும் அளிக்கிறேன்
அந்தமாந்தர்  யாவரும் தன்னில்செயலைப் புரியினும்
எந்தன்வழியைக் கண்டுமே அதனையேபின் பற்றுவர் 
 
பலனைத்தரும் செயல்களில் பற்றுகொண்டு மாந்தர்கள்
தேவர்தன்னைத் தொழுகிறார் பூஜைகளைச் செய்கிறார்
இகத்தில்இந்த செயலுக்கு   உடனுக்குடன் பலன்களும்
கிடைக்கலாகும் என்பது உண்மைஎன்றே ஆகுது 
இயற்கைகுணங்கள் மூன்றதன் தன்மைசெயலைக் கொண்டுமே
மனிதவர்க்கப் பிரிவுகள் நான்குமாகச் செய்தது
என்னாலான தாயினும் அதற்கப்பாலில்  நானென
செயற்க்கப்பாலில் நானென  அறிந்திடுவாய் அருச்சுனா
 
செயலெதுவும் என்னையே பாதிப்பதும் இல்லையே
செயலின் பலனை விழைவதும் என்னிடத்தில் இல்லையே
இந்தஉண்மை அறிந்தவன் என்னின்சத்யம் உணர்ந்தவன்
செயலின்விளைவை விழைந்திலன் அதனின்பிடியில் சிக்கிடான்
 
முக்திகொண்ட முன்னோர்கள் இந்தஉணர்வு கொண்டனர்
வீடுபேறு கண்டனர் கேடுபோக்கி உய்ந்தனர்
ஆதலினால் நீயுமே மூதாதையர் போலவே
தெய்வஉணர்வு கொண்டிரு கடமைகளைப் புரிந்திடு

4:16-20
அறிவிற்சிறந்த சான்றோரும் செயலுமற்ற நிலைஎது
என்னும்நிலையில் தெளிவினை பெற்றிடாமல் குழம்புவர்
எந்தசெயலை அறிவதால் பாவமீட்பு கிடைக்குமோ
அந்தசெயலைப் புகலுவேன் உனக்குநானும் விளக்குவேன்
செயலின்ஆற்றல் பெரியது அதனின்நுணுக்கம் கடியது
எனவேசெயலும் யாதென செய்யலாகா செயலென
இருப்பதுவும் யாதென செயல்துறத்தல் யாதென
அறிந்துமனதில் கொள்ளணும் தெளிவைநெஞ்சில் கொள்ளணும்
செயலின்ஆற்றல் நுண்ணிய தன்மைஉணர்தல் என்பது
கடினம்கடினம் கடினமே ஆதலினால் மானிடன்
செயலுமாவ தென்னது செய்யலாகா தென்னது
செயலிலாத  தன்மையும் தெளியவேண்டும் நன்கென

செயலில்செயல் இன்மையும் செயலின்மையில் செயலையும்
காணுபவன் ஒருவனே அறிஞனாக ஆகிறான்
செயலைப்புரிந்து இருப்பினும் பலனில் ஒதுங்கித் தனிக்கிறான்
அறிஞனான அவனுமே உன்னதத்தை அடைகிறான்
 
புலனின்நுகர்வு தள்ளியே செயல்புரியும் மானிடன்
அறிவுசான்ற ஒருவனே அறிஞன்எனப் படுபவன்
ஞானத்தீயின் சுடர்தனில் விளைவுஎரியச் செய்பவன்
செயல்புரியும் ஞானியாம் அறிஞர்போற்றும் அறிஞனாம்
 
செயலின்விளைவுப் பற்றினை முழுதும்துறந்து  திருப்தியை
கொண்டு முழுமைச்சுதந்திரம் தன்னைக்கொண்டு வாழ்பவன்
செயல்புரிந்து இருப்பினும் கர்மம்கொண்ட யோகியே
செயலிலவன் முனைப்புமே இல்லை பலனை நோக்கியே
 
4:21-24
இந்தஉணர்வு கொண்டவன் மனமும்அறிவும் ஆள்பவன்
உரிமைகொண்டு ஆடிடும் தன்மைதன்னைத் துறந்தவன்
குறைந்தபட்ச தேவைக்கு  மட்டும் செயலைப் புரிபவன்
சிறந்தவந்த மானிடன் தீயபலனைக் கடந்தவன்
 
தேடிவரும் லாபத்தில் மிகுந்ததிருப்தி கொள்பவன்
காமக்ரோதம் வென்றவன் அழுக்கின்ஆறு கடந்தவன்
வெற்றிதோல்வி இரண்டுமே ஒன்றுமாகக் கொண்டுமே
செயலைபுரியும் மானிடன் செயலின் விளைவைக் கடந்தவன்

ஜடத்தின்இயல்பு குணங்களில் பற்றுதுறந்து உன்னத
ஞானம்தன்னில் நிலைத்தவன் செயல்புரிந்து இருப்பினும்
பலனின்பற்றைக் கடந்தவன் ஞானத்தீயின் கொழுந்தவன்
அவனின்செயல் முழுதுமாய் உன்னதத்தில் இருக்குமாம்
 
க்ருஷ்ண உணர்வில் லயித்தவன் ஆன்மஉலகை அடைகிறான்
நிச்சயமிது  நிச்சயம் சத்யமான நிதர்சனம்
அவனின்செயல்கள் யாவுமே ஆன்மஉணர்வின் சமர்ப்பணம்
செயல்கள்தன்னின் நோக்கமும் ஆன்மஇயல்பைக் கொண்டதே
 
4:25-30
யோகம்கொண்ட யோகியர் செய்யும்கர்மம் பலப்பல
நெருப்பில்யாகம் தன்னையே  தேவர்நோக்கி செய்கிறார்
அடக்கிவைத்த மனத்தின்நெருப்பில் புலன்உணர்வு தன்னையே
யோகியரில் ஒருசிலர் அர்ப்பணமாய் அளிக்கிறார்
 
வேறுமற்று சிலருமோ தவத்தில்உடமைப் பொருள்களைத்
துறந்து-த்யாகம் செய்கிறார் ஞானஒளிக்கு முயல்கிறார்
கடுமைகொண்ட விரதமும் கடினமான நியமமும்
கொண்ட *அட்டயோகத்தைப் பயின்றுமுயற்சி கொள்கிறார்
யோகியரில் ஒருசிலர்  வாழ்வினிலே தவமுமாய்
வேதம்கற்று ஞானம்பெற வேறுசிலர் முயல்கிறார்
 
பேச்சடக்கிப் பின்னர்தன்னின் மூச்சடக்கி உள்ளிருக்கும்
தன்னின்லயிப்பில் இருப்பவர் யோகியரில் ஒருசிலர்
மற்றுமுள்ள ஒருசிலர் உணவில்சுருக்கம் கொண்டுமே
ஸ்வா சம்தன்னை அர்ப்பணம் செய்துயாகம் புரிகிறார்

யாகம்தன்னின் பொருள்தனை அறிந்துகொண்டு இப்படி
செயல்புரிந்து வாழ்பவர் விளைவின் பிடியினின்றுமே
மீண்டுதூய்மை பெறுகிறார் யாகவிளைவு அமுதினை
கொண்டுநன்கு பருகிட  நித்யநிலை பெறுகிறார்

4:31-42
குருவின் வம்சத்தோன்றலே வில்லில்விஜய வீரனே
யாகமின்றி உலகிலே மகிழ்ந்தவாழ்வு இல்லையே
இந்தயாகம் யாவுமே வேதம்ஒப்பு தல்தனைப்
பெற்றுவேறு வேறுமாய் செயல்களின்று பிறந்தவை

செயல்களின்றி உலகிலே தோற்றம் யாதுமில்லையே
பலனைத்துறக்கும் விதத்திலே இருக்குமிகுந்த நன்மையே
இதனைஇவ்வி தம்தனில் அறிந்துதேறு அருச்சுனா
எமனைவெல்லும் விடுதலை தன்னைக்காணு தனஞ்செயா
 
யக்ஞங்களில்  சிறந்தது ஞானயக்ஞம் என்பது
பொருளின்யாகம் தன்னிலும் ஞானயாகம் சிறந்தது
செயல்கள்யாவின் யாகமும் தொடக்கம் வேறுமாயினும்
முடிவதாகக் கொள்வது ஞானம் ஒன்று தானடா
 
யக்ஞங்களில்  சிறந்தது ஞானயக்ஞம் என்பது
பொருளின் யாகம் தன்னிலும் ஞான யாகம் சிறந்தது
செயல்கள்யாகத் தொடக்கங்கள் வேறுவேறு ஆயினும்
முடிவதாகக் கொள்வது ஞானம் என்று ஆகுமே
 
ஆன்மகுருவை அடைந்திடு உண்மைஅறிய முற்படு
அவர்க்குசெய்யும் தொண்டிலே நற்செயலைப் புரிந்திடு
அடக்கமாக அவரிடம் கேட்டு ஆய்வு செய்திடு
உண்மைவடிவ  உத்தமர் தாள்பணிந்து தேர்ந்திடு
உண்மைதன்னை அறிந்ததும் ஒருமைஉணர்வு காணுவாய்
பலதுமான பொருள்களும் உலகில்உள்ள உயிரனம்
யாவும்எனது நானுமே யாவும்எனக்கு எனக்குளே
என்னுடைமை யாவுமே என்னும்உண்மை உணருவாய்
 
பாவிகளின் பாவியாய் உலகில் நீயும் தோன்றினும்
உன்னதமாம்  ஞானத்தோணி தன்னில்உந்தன் உணர்வினை
நிறுத்தும்நிலை பெற்றிடின் துன்பமான மாயையின்
கடல்கடக்கும்  திறன்வரும் உடல்பிறவா நிலைவரும்
 
கொழுந்துவிட்டு எறிந்திடும் தீயில்விறகு நீறுமாம்
எழுந்துவிளங்கும் ஞானத்தின் சுடரும்செயலின் விளைவினை
சாம்பலாகச் செய்திடும் நோன்பெலாமும் முடிவுறும்
இந்தநிலை கண்டிட முயன்றிடுவாய் அருச்சுனா
 
இந்தஉலகில் உன்னத ஞானம்போல சிறந்ததும்
தூய்மைகொண்ட வேறேதும் இல்லைஎன்று அறிந்திடு
யோகம்முற்றிப் பழுத்ததும் ஞானம்என்றே ஆகுது
இந்தஞானம் அடைந்தவன் தன்னில்ஆன்மம் காண்கிறான்
 
ஆன்மபலத்தில்  நம்பிக்கை கொண்டிருக்கும் மானிடன்
உன்னதமாம் ஞானத்தில் ஆழ்ந்துபுலனை அடக்கியே
விரைவில்நன்மை பெறுகிறான் உன்னதத்தை அடைகிறான்
என்றுமவன் ஆன்மத்தின் பேரமைதி காண்கிறான்
 
நம்பிக்கையும் நல்லறிவும் அற்றுவேதம் தன்னையே
ஐயத்தோடு  நோக்கிடும் பேர்க்குஇறையின் உணர்வது
என்றும் வருவதில்லையே அவர்க்குஇம்மை மறுமையில்
இன்பம் என்பதில்லையே அவரேஅவர்க்குத் தொல்லையே

செயலின்பலனைத் துறந்துமே ஞானத்தீயில் ஐயத்தை
எரித்துத்தன்னில் உறுதியாய் நிலைத்துநிற்கும் ஒருவனை
செயல்கள்தன்னின்  விளைவுகள் துரத்துவது இல்லையே
புயல்எனவும் வரும்துயரம் அவனைச் சேர்வதில்லையே
 
ஆகையினால் அருச்சுனா உந்தனறி யாமையால்
எழுந்தஐயம் யாவையும் அறிவுஎன்ற ஆயுதம்
தன்னைக்கொண்டு அழித்திடு தவிடுபொடி செய்திடு
யோகக்கவசம் பூண்டிடு  போர்புரியப் புறப்படு

 

No comments:

Post a Comment