Wednesday, October 29, 2014

அத்தியாயம் 3 - கர்ம யோகம்







3:1
கீதைதன்னின் உட்பொருள் தன்னைக்கேட்ட அருச்சுனன்        
பாதைதன்னை வேண்டியே பேசலுற்ற லாயினன்-
பலன்விரும்பும் செயல்களின் அறிவுநன்று என்கிறாய்
கோரமானப் போர்த்தொழில் தன்னில்பின்ஏன் ஆழ்த்துறாய் ?
3:2
வழிகள்இரண்டு  சொல்கிறாய் பழியைவிலக்கச் சொல்கிறாய்
புரிவதாக இல்லைஅவைகள் ஒன்றுபோலத் தெரிவதால்
உரைத்ததான உன்னுரை தன்னில்மனம் மயங்குது
அறிந்திடநான் நன்மையை  கிருட்டினாநீ சொல்லிடு

3:3
சொல்லிடுவேன் அருச்சுனா என்றுசொன்னார் கிருட்டினர்
ஆண்டவனை அறிந்திட முயலும்மனிதர் இருவகை
கொண்டதான ஆசையால் அறிந்திடவே முயல்கிறார்
தொண்டுசெய்து பக்தியால் அடையசிலர் நினைக்கிறார்
3:4-5
செயல்கள்தன்னைத் துறப்பதால் மட்டும்விளைவு மறையுது
துறவுதன்னைக் கொள்வதால் பக்குவமும் வருகுது
என்றநினைப்பு தவறுமாம் புரியவேண்டும் கருமமாம்
பிறந்தயாரும் ஒருகணம் இயங்கிடாத தெங்கனம்?

3:6-10
புலன்களைப் புலன்களின் உறுப்பினை நிறுத்தியே
கவர்ந்திடும்  வகைதனில் விளங்கிடும் பொருள்களில்
மனம்படும் வகைதனில்  செலுத்தியே இருப்பவன்
வேடம்கொண்ட  போலியே மூடமான ஜாதியே

செயலாற்றா தன்மையினும் செயல்புரிந் திருப்பது
சிறந்ததென்று  அறிந்திடு கடமைசெய்து வாழ்ந்திடு
செயலுமின்றி ஓர்கணம் இருந்திடாது மானிடம்
உடலிலுயிர் உறைவது செயலிலாது எங்கனம்?

செயல்புரிந்து இறைக்குநீ அர்ப்பணமாய்த்  தந்திடு
முயன்றுநீயும் செய்கிற மற்றசெயல்கள்  யாவுமே
உடலில்உன்னைப் பிணைக்குது பிறப்பிறப்பில் சேர்க்குது
கடமைசெய்து வாழ்ந்திடு பற்றிலாமல் அமைந்திரு

குலங்களையும் தேவரும்  படைப்புசெய்து  ஆண்டவன்
யக்ஞம்தன்னைக்  கூடவே படைத்துப்பணித்துக் கூறினன்
யஞ்யங்களைச் செய்யுங்கள் சுகத்தில்மகிழ்ந்து வாழுங்கள்
ஞாலம்தன்னில் வேண்டிய யாவும்அடைந்து வாழுங்கள்

3:11-20
யாகங்களில் தேவர்களை  மகிழும்படிச் செய்கிறேன்
மகிழ்ந்ததேவர் அருள்புரிந்து திகழும்படிச் செய்கிறேன்
மகிழ்ந்தமனதில் உங்களுக்குள் மகிழச்செய்து   மகிழுங்கள்
அழுதிடாமல் யாவருமே நலன்கள்பெற்று வாழுங்கள்

யாகங்களால் த்ருப்திகொண்டு அருள்புரியும் தேவர்க்கு
போகம்தனில் வாழும்மக்கள் படைத்திடாமல் இருந்திடில்
திருடும்தொழில் புரிவதான பாவம்கொண்டு வீழுவர்
வருடும்நல்ல பாதம்கொண்ட *பரமன்அருள் நீங்குவர்
*பரமன்அருள் நீங்குவர்  = அருள் பெறாமல் நீங்குவர்

யாகம்தன்னில் படையலாய் முதலிலளிக்கும் உணவினை
த்யாகம்கொண்ட   உணர்வுடன் உண்பதனால் பக்தரின்
பாவங்களும் கழிந்திடும் பவமும்நீங்கி விளங்கிடும்
புலனின்இன்ப உணர்வினில் உணவைஉண்ணும் யாவரும்
உலகில்நன்கு வாழ்ந்திடார் பாவத்தையே உண்கிறார்
மழைவரப் பயிர்வரும் பயிர்வர உயர்வுறத்
தழைத்திடும்  உயிர்களும் செய்யுகின்ற யாகமும்
விதித்திருக்கும்  கடமையாம் அழைத்துவேண்டும்  தேவரை
பிழைத்திடும் வகைதரும் மழைதனைப் பொழிந்திட
வாழ்முறைச் செயல்களாம் யாகயக்ஞயக்  கருமங்கள்
திகழ்மறைச் சிறந்ததாம் இறைதனில் பிறந்ததாம்
இகம்பரம் இடைவிடா நிறைந்திடும் பரம்பொருள்
சிறப்புறும் விதம்தனில் நிறைந்ததந்த யாகமாம்

வேதம்தன்னில் சொல்லிய யாகயக்ஞயக் கடமைகள்
செய்திடா திருந்துமே புலன்வசம் படர்ந்துமே
அவைதரும் மகிழ்ச்சியே இன்பமென் றிருப்பவன்
பாவவாழ்க்கை வாழ்கிறான் பலனிலாமல் சாகிறான்
தன்னில் மகிழ்ந்தவன் தன்னொளி அடைந்தவன்
தன்னில் அமிழ்ந்துபே ரானந்தம் அடைபவன்
*தன்னில் லாததில் என்றுணர் பூரணன்
தன்னில் செய்யவோர் கடமையி லாதவன்
*தன்னில் லாததில்=தன்னில் (தனக்குள்ளே உள்ள ஆன்மாவில்)  இல்லாதது (வெளியிலும்) இல்லாததாகும், யாவும் தன்னில் உள்ளது என்பது பொருள்.


தன்னை உணர்ந்தவன் தனக்குமே கடமைகள்
தானுமே யாவுள ? அடைவதாய் இருக்கிற
நோக்கமே வேறிலை மற்றொரு ஜீவனை
சார்ந்திடும் நிலைமையும் அவருக்கு மேயிலை
ஆயினும் கருமங்கள் செய்திடா திருந்துமே
ஓய்ந்திடும் நிலைமையும் உலகினில் முறையிலை
செயல்படு செயல்படு அயர்ந்திடாதிருந்து  நீ
பலன்விடு பலன்விடு அதைத்துறந் திருந்திடு
இதைதினம்  கணம்தொறும் மறந்திடாதிருந்திடு
பரன்பதம் அளித்திடும் முறைஇதை அறிந்திடு
ஜனகமன்னர் போன்றவர் கருமயோகம் கொண்டனர்
பக்குவத்தைப் பெற்றனர் நற்கதிபெற்றோங்கினர்
உலகில்வாழும் மற்றவர் கடைபிடிக்க நல்லஓர்
எடுத்துக் காட்டுமாகவே  செயல்புரிநீ அருச்சுனா

3:21-25
நிலையில்உயர்ந்த மாந்தர்கள் கடைப்பிடிக்கும் நெறிமுறை
கண்டுமற்ற உலகுளோர் மனதில்சிரத்தை கொண்டவர்
அடியுமொற்றி செல்கிறார் படிப்பினையாய்க் கொள்கிறார்
மூவுலகம் தன்னில்நான் செய்வதொன்று மேயிலை
தேவையேது மேயிலை அடையவேது மேஇலை
எனினும்கருமம் செய்கிறேன் என் தருமமாகக் கொள்கிறேன்
என் செயல்நிற்க மண் உயிர்நிற்கும்
என் செயல்நிற்க இந்த உலகழியும்
என் செயல்நிற்க தீய ஜனம்பெருகும்
என் செயல்நிற்க உயிரின் அமைதிபோகும்  
ஆகையினால் அருச்சுனா செயல்புரிவாய் பாண்டவா
அறியாமையால் பலன்கருதும்  மக்கள்செயலைப் போலவே
மற்றவரை வழிநடத்தும் சிறந்ததாக அமையுமிந்த 
நோக்கம்கொண்டு செய்திடு பாவமில்லை அறிந்திடு

3:26-30
பலனில்கொண்ட பற்றுடன் பணிபுரியும் மாந்தர்க்கு
அறிஞராக இருப்பவர் குழப்பம்தரல் தவறுமாம்
செயலிலின்று அவர்களை விலகுமாறு ஊக்கத்தை
தருதல்தவறு அன்றியே பக்தியுணர்வில்  அவர்களும்
செயல்படுதல் ஆக்கணும் பற்றைப்போக்கப் பழக்கணும்

மாயைதந்த முக்குணம் தந்தவந்த பாதிப்பால்
மயக்கம்கொண்ட ஜீவனும் இயற்கைதன்னின் செயலுக்குத்
தன்னைக்கர்த்தா என்றுமே எண்ணம்தவறாய்க் கொள்ளுது
பக்திகொண்ட செயலிலும் பலனில்செய்யும் செயலிலும்
உள்ளவேறு பாட்டினை அறிந்தசுத்த சத்துவன்
புலனில்பற்றை வைத்திடான் அதனில்நுகர்ச்சி கொண்டிடான்
ஜடஇயற்கை மாயையால் மயக்கம்கொண்ட அறிவிலி
ஸ்தூலமான செயல்களைப் பற்றுகொண்டு புரிகிறார்
அறிவில்ஞானம் கொண்டிடா அவர்கள்செயல்கள் தாழ்மையே
எனினும் அறிவில்சிறந்தவர்  அதனைத்தடுத்தல் தீமையே 
எனவேவீர அருச்சுனா ஊக்கம்கொண்டு போர்புரி
பலனைஎனக்கு அர்ப்பணி என்னைவைய்யுன் நினைவினில்

3:31-35
இந்தசத்ய அறிவுரை தன்னைமனதில்   அழுக்கிலா
வண்ணமாக முழுதுமாய் நம்பிக்கையும் பக்தியும்
கொண்டுபற்றி கடமையை செய்யும்எவனும் செய்கிற
செயலின்விளைவு பற்றிடா வண்ணம்விடுப்பு பெறுகிறான்
எனினும்நெஞ்சம் கொண்டகீழ்ப் பொறாமைதன்னின் விளைவினால்
இதனைமதிக்கத் தவறியே கடமைவிட்ட மானிடன்
அறிவுஇழந்து போகிறான் ஈனமதிய னாகிறான்
இருள்நிறைந்து போகிறான் மாயவலையில் தவிக்கிறான்
அறிவுசான்ற ஞானியும் தன்னியற்கை கொள்கிறான்
அதனின்படி நடக்கிறான் ஏனிதென்றே   கேட்டிடு
மாயைதன்னின் சேட்டையே மருட்சிஅதனின் கோட்டையே
இயற்கை இயல்புப் பிடியிலே இயல்பைத் துரத்தல் கடினமே
புலனின்சேட்டை இருந்திடும் *உடலின்வரை தொடர்ந்திடும்
கடலின்தொடர் அலையென மீண்டும்மீண்டும் அடித்திடும்
புலனின்விஷய தொடர்பினில் விழைவுமற்றும்  வெறுப்புகள்
இருந்திடத்தான் செய்திடும் புலனின்ஆவல் தொடர்ந்திடும்
அதனைவெற்றி கொள்ளணும் அடக்கிஉடலை ஆளணும்

தன்கடமை உணர்ந்திடு அதனைசெய்யப் பழகிடு
பிறரின்கடமை செய்தலின் தனதுகடமை நல்லது
தனது கடமை செய்தலே உய்யநல் உபாயமாம் 
பிறரின் கடமை செய்யவே சேரும்-பேர..பாயமாம்

*உடல் இருக்கும் வரை
3:36-41
*விருட்டினியின் கிருட்டினா விருப்பமிலா  நிலையிலும்
பலாத்கார பட்டபோல் பாவச்செயலை மானிடன்
செய்வதெந்த தூண்டலால் என்றுகேட்ட பார்த்தனை
நோக்கிக்கண்ணன் கூறினான் காரணமும் யாதென
*விருட்டினி குலம்
ரஜஸின்குணங்கள் தன்னிலே விளைந்துபின்னர்  தன்னிலே
கோபமாகத் தோன்றிடும் காமம்ஒன்று தானடா
பாவம்கொண்ட தீதடா இந்தஉலகம் தன்னிலே
யாவுமழிக்கும் காரணம் அதுவேபொல்வி ரோதியாம்
நெருப்பைமறைக்கும் புகையென கருமறைக்கும் பையென
*ஆடிமறைக்கும் தூசென  காமம்பல நிலைகளில்
ஜீவனை மறைக்குது சோதனை கொடுக்குது
எங்குஅமைதி கொள்ளுது தூயஉணர்வைக் கொல்லுது
நெருப்பு போன் றெரிப்பது கொடும்விரோதி யாகுது
புலன்கள்தன்னில் வாழுது  புத்திமனத்தை கெடுக்குது
*ஆடி=கண்ணாடி
ஆகையினால் அருச்சுனா புலனை ஒழுங்கில் வைத்திரு
அதனால்பாவச் சின்னமாம் காமம்தன்னை முளைக்குமுன்
அடக்கிநீயும் வைத்திரு ஞானம்வளரும் பார்த்திரு
காமம்எதிரி அறிந்திடு ஞானம்அழிக்கும் உணர்ந்திடு
 கர்மம்செய்யும் இந்த்ரியம் ஜடத்தினும் உயர்ந்தது
உள்ளிருக்கும் மனமதோ புலனினும் சிறந்தது
அறிவுஎன்று சொல்வது மனத்தினும் உயர்ந்தது
அதனினும் சிறந்தது ஆன்மம்ஒன்று தானது
இந்தஉண்மை உணரணும் தன்னைத்தானும் அறியணும்

கீழ்இயல்பை ஆண்டிட மேல்இயல்பு கொள்ளணும்
கடினஎதிரி காமத்தை வெல்லஆன்ம பலத்தினை
மாயவாழ்வில் மானிடன் துணையுமாகக் கொள்ளணும்
_____________

No comments:

Post a Comment