Wednesday, October 29, 2014

அத்தியாயம் 2 - சாங்க்ய யோகம்






2:1
சஞ்சயனும் கூறினான் பின்வருதல் போலவே

கண்ணில்ததும்பும் நீருடன் அமர்ந்துவிட்ட பார்த்தனின் 
நெஞ்சில்கொண்ட பரிவையும் மனதிலவன் கவலையும்
பார்த்துச்சிரித்த கிருட்டினர் என்னும்மது சூதனர் 
பேசலுற்ற லாயினார் பின்வருதல் போலவே 

2:2
சமர்புரியும் வீரனே எனதருமை பார்த்தனே 
உன்மனதில் இப்படி கலக்கம்வந்த தெப்படி 
முன்னில்செல்ல தினப்படி ஆகாதிவை உருப்படி 
விண்ணில்செல்ல தடுத்திடும் அவமானந்தான் கொடுத்திடும்

2:3
ப்ருதாபுத்ரா குடாகேசா தளர்சிக்கிடம் கொடாதேடா
கருத்தின்வீரம் விடாமலே பலவீனம்தான் கொளாமலே
எதிரிகளைத் தவிக்கச்செய்வாய் கொண்டவீரம் விடாமலே 
உதறிக்களை அவிக்குமந்த கவலைநெஞ்சில் எழாமலே

2:4
இதனைக்கேட்ட அருச்சுனன் அவனைவணங்கிச் சொல்லினன்
மதுவைக்கொன்ற சூதனா மனதைமயக்கும் கிருட்டினா
வந்தனைநான் செய்திடும் ஆசிரியர் துரோணரும் 
சந்ததியை விலக்கிய வீட்டுமராம் பாட்டனும் 
எந்தன்முன்னே நின்றிட பாதம்பணிதல் விட்டுநான் 
வன்சமரா கொள்வது அம்புகொண்டா கொல்வது 

2:5
எதிர்க்கவறிய பெரியவர் வணக்கம்கொள் பிதாமகர்
எதிரில்நிற்கும் த்ரோணரோ மதிப்பிற்குரிய அந்தணர் 
சிறியன்நானா சிரியரை புரியும்போரில் எதிர்ப்பதை 
அறியேன்கணமும் நினைவிலும் நினையேன்தூங்கும் கனவிலும் 
அழித்திவரை வாழ்தலின் புரிந்துபிச்சை கொள்தலும்
நல்லதே ஜனார்த்தனா இழுக்குமல்ல கிருட்டிணா
அழித்துநான் அடைந்திடும் இன்பம்யாவும் கூடவே 
வழிந்துஓடும் குருதியின் கறைபடிந்த துன்பமே 

2:6-9
புரியும்போரில் சிறந்தது எதுவெனநான் அறிகிலேன்
அவரையழித்து  வெல்வதா அவரிடம்நாம் தோற்பதா ?
யாரைக்கொன்று வாழ்ந்திடேனோ அவரேசமர்க்கு நிற்கிறார்
பேரைக்கொண்டு என்செய்வேனோ திகைக்கிறேன்நான் அறிந்திடேன்
என்கடமை என்பதெது ? என்மடமை யாஇது ?
என்பதாக மனதினில் குழப்பம்மிகவும் தோன்றுது
மனதிலாகும் குழப்பத்தினால் பலவீனம்நான்  கொள்கிறேன்
நன்மைஎது தீமைஎது என்பதைநான் உணர்கிலேன்
மேன்மைமிகு குருவரா புகலடைந்தேன் சீடன்நான்
தன்மைகொண்டு அறிவுரைநீ ஜனார்த்தனா வழங்கிடு

கொண்ட துன்பம்  என்புலனை விரட்டித்தானே அடிக்குது
மீண்டுவர வழிஎதுவும் புலப்படாமல் இருக்குது
மேலுலகத் தேவரைப்போல் எதிர்க்கஒரு பகைஇலாது
ஆளும்அரசும் போக்கிடாது தாக்குமிந்தத்  துயரம்தன்னை
எதிரிகளைத் தவிப்பில்ஆழ்த்தும் அருச்சுனனும் கூறினன்
விதிர்விதிர்த்து பேச்சுமற்று தேரின்தட்டில் அமர்ந்தனன்
நடப்பதுவும் இதுவேஎன்று திருதனுக்கு அறியவே
ஞானக்கண்ணில் கண்டுமதை சஞ்சயனும் கூறினன்

 2:11-20
புன்சிரிப்பில் கண்ணனும் மென்மையாகக் கூறினான்
அறிந்தவன்போல் பேசினாய் அறியாமைதான் காட்டினாய்
பயனிலாதக் கவலையாலே பயத்தில்நீயும் ஆழ்கிறாய்
அறிஞன்மாண்ட அமரருக்கோ வாழ்ந்திருக்கும் மாந்தருக்கோ
வருந்திநிற்ப தில்லையே வாடிச்சாவ தில்லையே

நீயோநானோ மற்றிலும் உள்ளவிந்த மன்னரும்
இலாதகாலம் இல்லையே இலாமல்போவ தில்லையே
குழந்தைபின்னர் இளமையும் பின்னர்கொண்ட முதுமையும்
அழியும்உடலில் கொள்ளுது அதனில்உறையும் ஆத்துமா
அழிந்தபிறகு வேறுடல் அதுவும்எடுத்துப் பிறக்குது
மாற்றம்கண்டா திகைக்குது? வருத்தம்கொண்டா அழுகுது ?

இந்தவின்ப துன்பம்யாவும்   நித்யமில்லை குந்திமகனே
வந்துமறையும் பருவகாலம் கோடைகுளிரும் போலதினமே
உந்தன்புலனால்  எழுந்ததாகும்  சொந்தமில்லை தெரிந்துஉணரேன்
வந்தவையும் மறைந்துபோகும் பொறுத்துநீயும் எழுந்துநிமிரேன்
மாந்தர்தன்னில் சிறந்தவா குந்திதாய்க்குப்  பிறந்தவா
இன்பதுன்பம் இரண்டிலும் சொந்தவியல்பு மாறிடா
அந்தநிலை கொண்டவன் சஞ்சலத்திற் கிடம்கொடா
சித்தம்கொண்ட ஒருத்தனே விடுதலைக் குகந்தவன்

உண்மைதன்னை உணர்ந்தவர் மேன்மைகொண்ட ஞானியர்
திண்மைகொண்டு நிலைப்பது முடிவுஎன்ப தற்றது
நிலையுமற்றி ருப்பது நீடிப்பென்ப தற்றது
என்றுஆய்ந்து கண்டனர் ஓய்ந்திடாத முயற்சியால்

அழிவிலாத ஆத்துமா  கொல்லவில்லை எவருமாம்
அணுவுருவே ஆனவிது  ஞானம்வரத்  தெரியுமாம்
அபானப்ராண வ்யானசமான உதானத்திலே மிதக்குமாம்
நிதானமான சாட்சியாக  இதயத்திலே  உறையுமாம்

அழிவுஎன்று சொல்வது ஆத்துமத்துக் கேதது?
அழுகிச்செத்து மடிவது உடலுக்கென்றே ஆனது
தொழுதிடவே உடலில்வாழும் ஜீவன்அழிவு அற்றது
அளவிடமுடி  யாதது   கண்படத் தெரியாதது
பரதகுலத் தென்றலே கையிலெடு வில்லுமே
சமர்புரிநீ வீரனே கவலைவிடு பார்த்தனே

கொல்லுகின்ற தாத்துமா கொல்லச்சாகும் என்பதாய்
எண்ணுகின்ற தானவன் எண்ணம்தெளிந்தி ராதவன்
திண்ணியதாய் அறிவினில் சிறந்துஞானம் கொண்டவர்
எண்ணுவதே இல்லையே ஜீவன்அழிவு கொள்வதாய்
பிறப்பும்இறப்பும் அற்றது ஆன்மம்என்றும்  உள்ளது
பிறந்துஇருந்து  இறப்பதோ இறந்துமீண்டும் பிறப்பதோ
இருந்திடாதச் சிறப்பது ஆதியாக உறைவது
இறந்துஉடல் அழிவதனால் மறைந்திடாது இருப்பது

2:21-40
இந்தஉண்மை அறிந்தவன் சித்தில்ஞானம் பிறந்தவன்
பிறந்திடாது இறந்திடாது ஆன்மம்என்று உணர்ந்தவன்
வேறுமொரு ஆத்துமத்தை கொன்றுதீர்ப்ப தெப்படி
கூரிடும்கொலை காரனென்றுநாமும் கொள்வ தாசரி ?
பழையஆடை களைந்துபுதிய ஆடைஅணிதல்  போலவே
இறந்தஉடலைத் துறந்துஆன்மம் பிறந்தஉடலில் சேருது
 இறந்துமடிதல் அதற்குஇல்லை பிறந்துதோன்றும்  புதிதுமில்லை
நிறைந்துஎங்கும் இருப்பது நின்றுஎன்றும் நிலைப்பது 

ஆயுதங்கள் கொண்டுஅதனை அடித்துத்துண்டு செய்வதோ
தீயிலிட்டு எரியச்செய்து சாம்பலாக்கிப் பொடிப்பதோ
பாயும்நீரை அதனில்பாய்ச்சி  நனைத்து ஈரம்செய்வதோ
வாயுவான காற்றடித்து உலருமாறு செய்வதோ
இயன்றிடாது மடிந்திடாது ஆன்மம்என்றும் நிலைப்பது
அசைந்திடாது மாறிடாது எங்கும்அது நிறைந்தது

நுண்ணியதாய் உள்ளது நோக்கிடக்-கிட்..டாதது
கண்ணிலே படாதது சிந்தனைக் கப்பாலது
எண்ணிடவே இயன்றிடாத நுண்மைகொண்ட சிறப்பது 
எண்ணிஇதைத்   தெளிந்திடு உடலில்பற்றை உதறிடு

 ஆத்துமமே பிறக்குது ஆத்துமமே இறக்குது
என்றுமேநீ எண்ணிடில் கவலைக்கிடம் ஏததில்  ?
பிறந்ததுவும் இறக்குது பிறப்புக்கென்றே  இறக்குது
கடமைவிடுத்துக்  கவலையும் கொள்ள என்னஇருக்குது?

ஆத்துமத்தை ஓர்சிலர் அதிசயமே என்கிறார்
பிறிதுமுள்ள ஒருசிலரோ  வருணனையும் செய்கிறார்
அற்புதமே என்றுஅதை  அறிந்திடவே கேட்கிறார்
எனினுமந்த ஆத்துமத்தை அறியாமலே இருக்கிறார்

உடலில் ஆத்மன் உறைகிறான்
ஜீவன் எனப் படுகிறான்
சத்திய மாய் ஒளிர்கிறான்
நித்திய மாய் இருக்கிறான்

பிறப்புடைய ஆத்துமமே
சிறப்புடைய தானது
மனதினிலே வருந்திடவே
இதனில் என்ன  இருக்குது 
சத்திரியன் நீயடா  நீதிகாக்கவே யடா
கத்திக்கொண்டு போரடா  செத்துடுமா றேயடா
செய்வதுமே தானடா  விதித்தகடமை தானடா
தயக்கம் கொள்வதேனடா தரையில் அமர்ந்ததேனடா

வலிய வரும் போரடா
  சுவர்க்கம் அளிக்கும் பாரடா
மனதில் இதனை எண்ணடா
மனதில் மகிழ்ச்சி கொள்ளடா 
அரச குலத்தில் யாருமே
இதையே எண்ணு வாரடா

போரைத்தள்ளி வாழவரும் கோழைஎன்ற பேரடா
தூற்றிடவே இருந்திடலின் இறத்தலுமே மேலடா
போரிடலில் சாதலினால் வானுலகப் பேறடா?
போரினிலே வெற்றிகொள்ள அரசனென்ற பேரடா

இன்பதுன்பம் லாபநஷ்டம் வெற்றிதோல்வி யாவும்தள்ளி
வன்சமர்நீ கொள்வது நன்மையுமே தானது
துன்பமே தராதது என்றும் நன்மை தானது
சாங்கியத்தின் ஆய்விலே அறியுமாறு கூறினேன்

ஓங்கியதோர் பலன்கருதா கருமயோகம்   பற்றியே
பாங்கெனவே சொல்லிடுவேன் கேட்டிடுவாய்ப் பார்த்தனே
 குறையுமில்லை இழப்புமில்லை கருமயோக வழியிலே
தேக்கமில்லை பயமுமில்லை சிரமமில்லை இதனிலே

2:41-42
 கரும யோகம் கொள்பவர் நோக்கில்உறுதி உள்ளவர்
சிறந்ததான  லட்சியம் ஒன்றுமட்டும் உள்ளவர்
சிரத்தையாக  அதன்வழி என்றும்முயன்று செல்பவர்
குருவின்வம்ச செல்வனே பகைமுடிக்கும் வீரனே
உறுதியற்ற மாந்தரோ அறிவில்மயக்கம் கொள்பவர்
மரத்தின்நூறு கிளைகள்போல் அறிவில்கிளைகள் உள்ளவர்

சிற்றறிவின் மாந்தர்கள் வேதங்களின் கவின்மிகு
சொற்றொடர்கள் தன்னிலே மயங்கிமனம் கிறங்குவார்
இந்தநல்ல வாக்யங்கள் நற்பிறவி அடைதலும்
உயர்ந்தகிரகம் சென்றிடும் வழிமுறைகள் தன்னோடு

பதவியதி காரமும் கொள்வதற்குக் காமிய
பூஜைகளைக் கொள்ளுவார் மனம்தனிலே மகிழுவார்
தேஜசோடு தானுமந்த இறைவனடி சேரவே
இதைவிடவே சிறந்ததொரு வழியிலையே என்னுவார்

2:43
புலன்நுகர்வு செல்வவிழைவு இவைகள்கொண்ட மாந்தர்கள்
பலன்கருதி செய்யுகின்ற  யாகயோக  பூசைகள்
இவைகள்ஒன்றே அறிந்தவர் அவற்றைநன்றே என்பவர்
பலன்கருதா இறையின்தொண்டின் மகிமைதன்னை அறிந்திலர்
பலன்கருதி செய்யுகின்ற  யாகயோக  பூசைகள்
சிலர்மனங்கள் மகிழவைக்கும் வளர்த்துவிடும் ஆசைகள்
பலன்கருதா உயிர்கள்சேவை அளித்திருக்கும் மனதில்களிப்பை
புலனில்படா நிலைஅளிக்கும்  புலப்படுத்தும்  இறையின்மேன்மை

2:44-50
வேதம்பொதுவில் சொல்வது மூன்றுவகை குணமது
அதையும்கடந்து சென்றிடு அதற்குமேநீ மேல்படு
அடைதல்காத்தல் போன்றதான கவலையின்று விடுபடு
இரட்டைதன்னை தொலைத்திடு  *ஒற்றை தன்னில் நிலைபெறு
*ஒற்றை = ஆன்ம தத்வம் , அத்வைதம்

மறையைத்தினமும் ஓதிட  அறிந்திருப்பர்   ஒருசிலர்
புரிந்திருக்கப் பூசைகள் போதும் என்பர் மிகப் பலர்
மறையும் கொண்ட மறைபொருள் தன்னைஇவர்கள் அறிந்திலர்
மறைகள்தன்னின் பின்னிலே மறைந்திருக்கும் விரைபொருள்
தன்னையறியத் தோன்றுமே மறையின் உண்மைநோக்கமே
இதனைஅறிந்த சிலருமே புரிந்துகொள்வார்  உண்மையே
கடமைசெய்ய மட்டுமே உனக்குஉரிமை உள்ளதே
பலனைஎண்ணக் கிட்டுமே பிறந்திறக்கும் சிறுமையே
செயல்கள்செய்யும் உன்னையே விளைவின்பொறுப்பு என்றுமே
மயங்கும்மனதில் செயலிலே துறவுகொண்டு கலங்கிடேல்

யோகம்தன்னில்  உறுதிகொள் மோகம்தன்னைப் பொருதிகொல்
வேகம்கொண்டு செயல்புரிந்து வெற்றிதோல்வி மீதிருக்கும்
பாதிப்பினைக் கடந்துநில் போதம்தரும் பாதைசெல்
இதுதான்யோகம் என்பது இறையின்தாகம் ஆகுது

தினத்தில்புரியும் சேவையே இறைவனுக்குப் பூசையே
பலன்துறந்த மனதிலே கருமம்தன்னைப் புரிதலே
பயன்கொடுக்கும் பூசையாம் அருள்கொடுக்கும் ஆசையாய்
செயல்தனைப் புரிந்துமே பலன்தனைத் துறந்திடு

பலன்விழைந்து ஆசைகள் அடையச்செய்யும் பூசைகள்
பயன்படாது பார்த்தனே கொடுத்திடாது ஞானமே
பயன்கருதிச் செய்பவர் யாரும்மண்ணில் கஞ்சரே
பயம்கிளப்பும்  பார்த்தனே இதைமனம் அறிந்திடு  

பக்திசேவை செய்பவன் முக்திதன்னை அடைபவன்
இந்தவாழ்வு தன்னிலே செயல்விளைவு கடப்பவன்
சொந்தமாகச் செயல்படாத்  துறவில்கடமை செய்திடு
உத்தமாம் கருமயோகம் தன்னில்நீயும் பொருந்திடு 

2:51-60
பக்திமார்க்கம் தன்னில்சென்று  புனிதசேவை தன்னில்நின்று
வித்திலாத வண்ணம்செயலின் பலன்கள்யாவும் துறந்துவென்று
பிறப்பிலாத வண்ணம்மேன்மை  சான்றோர்களும் அடைவர்என்று
அறிந்துகொள்ளு பார்த்தாநன்கு  விளைந்திருக்கும் விளைவுநன்று  

அறிவின் மயக்கம் இருண்ட காடு
 புரிந்தி டாது அடிக்கும் கேடு
தெரிந்து நீயும் கடந்து ஓடு
சமன் கிடைக்கும் நீயே பாரு

வேதம்சொல்லும் கருமங்கள்  மனம்கவரும் மலர்களாம்
தினம்புரியும் செயல்களாம் அதில்கிடைக்கும் பலன்களாம்
மனம்மயங்கி டாதவை கணத்தினில் விலக்கிடு
தினம்உனில் இருந்திடு தெய்வமாக உயர்ந்திடு
*உனில் = ஆன்மத்தில்

மனம்மயக்கும் கண்ணனே வினாவும்ஒன்று கேட்கிறேன்
சினப்படாமல் நீயுமே விடைகொடுத் தருள்புரி
உன்னதத்தி லிவ்விதம்   இருந்திருக்கும் சித்தனை
கண்டுகொள்வ தாகவே உள்ளதென்ன அறிகுறி 

தினம்எழும் நினைவினால் புலன்தரும் கவர்ச்சியால்
 மனம்மயங் கிடாமலே பற்றிலா திருந்துமே
பலன்துறந் திருப்பவன் ஆன்மம்தன் னிருப்பவன்
உலகத்தேவை அற்றவன் மனதில்நிறைவு உற்றவன்

மூவகைத் துன்பம் தனில்துவ ளாதவன்
எவ்வகை இன்பத் திலும்மகிழ்ந்  தாடாதவன்
பற்றுபயம் கோபமெனும் தளைதனில் படாதவன்
முற்றும்துறந் திட்டமுனி  என்பதாகத் திகழ்பவன்

நன்மைதனில் களிப்பும்தீமை தன்னில்மனக் கவலையும்
கொண்டிடாத ஒருவனாய்ப் பற்றிலாத சித்தனாய்
இருப்பவனே முனிவனாம் என்றும்தன்னில் இருப்பனாம்
அறிவினிலே பூரணத்தை அடைந்தசிறந்த ஞானியாம்

புலன்கள்கொண்ட ஈர்ப்பினால் மயங்கிச்சென்றி டாமலே
கணமும்சஞ் சலம்தனில் பட்டிடாத திடத்திலே
உலகில்வாழும்  ஆமைதன் உறுப்பைஉள் ளிழுத்தலாய்
புலனிலிருந்து விடுபட முயற்சிகொண்டு வென்றவன்
நிலைத்துஅறிவில் இருப்பவன் சத்தியத்தில் உறைபவன்

புலன்நுகர் வினில்படா மலான்மமிங் கிருப்பினும் 
பொருள்சுவை நினைவுநெஞ்சி ருந்திருக்கு மாதலால்
உயர்சுவை நுகர்ந்திடா மனம்படும் அதன்வசம்
பெயர்ந்திடாது ஆன்மமும் அதில்நிலைத் திருந்திடும்   
பகுத்தறிவின் துணையுடன் புலன்அடக்கக் கூர்மையாய்
மிகுந்ததான முயற்சியில் செயல்புரிவோர் மனத்தையும்
புலனடித்துச் சென்றிடும் காட்டுவெள்ளம் போலுமே
புலப்படாத விதத்திலே மிகுந்ததான பலத்திலே

2:61-67
புலன்அடக்கி உணர்வினை செலவிடாமல் என்னிடம்
நிலைநிறுத்தும் ஒருவனே நிலைப்படுத்தும் அறிவினன்

புலன்படும் பொருள்தனை நினைப்பவன் பிடிப்பினை
வளர்க்கிறான் அதன்பலன் விளை வதாய்க்
காமமும் மனத்தினில் சினம்தரும் அழுக்கையும்
அடைகிறான்  முடிந்திடாத் தளைதனில் கிடக்கிறான்

சினத்தினால்  மயக்கமும் பின்நினை விழத்தலும்
பின்னர்அறிவு தன்னையே இழக்கும்நிலை தோன்றுமே
மண்ணில்வந்து பிறந்திடும்  மாயத்திலே தள்ளுமே
கண்தனில் படாமலே  நல்லபாதை மறையுமே

விடுதலையின்  விழைவுடன் கடமைகளைச் செய்பவன்
முக்திநிலை சேர்த்திடும் நியமங்களைச் செய்பவன்
புலனடக்கம் பெறுகிறான் கடவுள்அருள் பெருகிறான்
உலகிலுள்ளஎதிலும்துறவு நிலையை விரைவில் அடைகிறான்  
தெய்வஉணர்வில் நிலைப்பவன் உலகத் துன்பம் வென்றவன்
துய்த்திடவே சித்தத்திலே ஆனந்தத்தைக் கொண்டவன்
தெய்வஉணர்வு அற்றவன் கட்டுக்குள் இலாதவன்
அமைதியிலா மனதினாலே  துன்பத்திலே உழல்பவன்

2:68-69
புயலில்சிக்கும் படகெனவே புலன்கள்மனதை இழுப்பவை
பொருளில்தோன்றும் கவர்ச்சிவிலக்கி புலனைஅடக்கி இருப்பவன்
அறிவில்நிலைத்து அருளில்திளைத்து இறைவனிடத்தில் நிலைப்பவன்
இரவில்விழிப்பைப் பகலில்இரவைக் காணும்நிலையை அடைந்தவன்

2:70-72
ஆசைகளின் அலைகள்மோத அசைந்திடாத ஒருவனே
நதிகள்சேரும் கடலின்நடுவு   போன்றிருக்க முடிந்தவன்
புலன்கள் ஆசைத் துறந்தவன் விருப்புவெறுப்பு விட்டவன்
எனதுஎன்னால் என்பதான அகத்தின்உணர்வு அற்றவன்
மனதுதன்னில் பொய்மையான தன்னுணர்வு அற்றவன்
என்பதாக இருக்கும்அவனே அமைதிதன்னை அடைபவன்
குழப்பம்தன்னை அழித்தவன்  ஆன்மீகத்தில் நிலைத்தவன்
ஆன்மஉணர்வில் நிலைப்பவன் இன்பத்திலே திளைப்பவன்
மண்ணில்வாழும் காலத்திலும் விண்ணில்மனதை வைத்தவன்
கண்ணைமூடும் காலத்திலே பரமபதத்தை அடைபவன்
 

No comments:

Post a Comment