Saturday, September 24, 2011

அத்தியாயம் 1 - அர்ஜுன விஷாத யோகம்





குருக்ஷேத்ரப்  போர்க்களத்தில் படைகளை கவனித்தல்

1:1
புண்ணியத்தி னோரிடம் குருவம்சத்தினோர் பேரிடம்
திண்ணியத்தி லேஉறும் அவர்கள்கொண்ட தோளுரம்
புண்ணியத்தின் பாண்டவர் பாவம்செய்யும் கௌரவர்
எண்ணமங்கு கொண்டனர் போர்புரிய நின்றனர்
என்னவங்கு நடக்குது சஞ்சயாநீ விளம்பிடு
என்றுபணித்துச் சொல்லினன் மன்னன்திருத ராட்டிரன்


1:2
மன்னவனை வணங்கினன் சஞ்சயனும் சொல்லினன்
பாண்டவரின் பெரும்படை அணிவகுத்து நின்றன
பார்வையிட்ட துரியனும் த்ரோணரையே அணுகினன்
பின்வருதல் போலவே பேசலுற்ற லாயினன்


1:3
துருபதனின் மைந்தனே அவனுமுங்கள் சீடனே
பாண்டவரின் படைதனை அணிவகுத்து நின்றனன்
காணுங்களாச் சார்யரே சிறந்த அவர்கள்சேனையை
கேளுங்களின்னும்-என  துரியன்மேலும் சொல்லினன்


1:4
பாண்டவரின் சேனையில் பலத்தில்-பலரும் உள்ளனர்
பீமனுக்கும் பார்த்தனுக்கும் வில்லில்-சமத்தை கொண்டவர்
கொண்ட-வீரர் பலருடன் இருக்குமந்த துருபதன்
விராடன்-யுயு தானனன் போன்றவர்-ம..காரதர்


1:5,6
த்ருஷ்டகேது சேகிதானன் காசிராஜன் குந்திபோஜன்
புருஜித்துடன் ஷைப்யனும் சிறந்த போரின்நாயகர்
உத்தமௌஜன் பார்த்தபுத்ரன் திரௌபதி குமாரரும்
தேர்ந்தரத வீரர்கள் எதிர்த்துநிற்கும் தீரர்கள்


1:7
அந்தணரில் சிறந்தவ வந்திதனைக் கேளுங்கள்
அந்த சேனைக்கெதிரென குருவின்வம்சம் வந்திட்ட
எந்தன்சேனை நடத்திடும் தகுதிகொண்ட பலருளர்
அந்தவிவரம் கூறுவேன் அறிந்துமனதில் கொள்ளுவீர்


1:8
எந்தநாளும் கொண்டபோரில் வெற்றிகாணும் தாங்களும்
பீஷ்ம-கர்ணன் கிருப-விகர்ணன் அஸ்வத்தாமன் யாவரும்
பூரிசிரவஸ் என்றசோம தத்தனின்கு மாரனும்
சோர்விலாமல் போர்புரிந்து வெற்றிகொள்ளும் வீரராம்


1:9
எந்தன்பொருட்டு உயிரும்தரவும் சித்தமான வீரர்கள்
எந்தபோரும் புரிபவர் போரின்கலையில் தேர்ந்தவர்
வேண்டுமென்ற ஆயுதங்கள் கொண்டு இங்குவந்தவர்
காணுமிடம் யாவும்நிற்கும் கணக்கினில்எண் ணற்றவர்


1:10,11
பாட்டன்பீஷ்மன் காக்கும்படை கணக்கிலடங் காதது
பீமன்காக்கும் பாண்டவர்படை அளவிலடங்க லாகுது
படையின்அணியின் முக்கியபோர் முனையிலிருந்து யாவரும்
பாட்டனையே நோக்குவீர் காத்துப்போரில் வெல்லுவீர்


1:12,13
குருவின்வம்சம் வந்தவர் முதியவீரர் வீட்டுமர்
உரக்கச்சங்கை ஊதினார் சிங்கம்போல கர்ச்சித்தார்
துரியன்இதனைக் கேட்டனன் களிப்புமிகவும் கொண்டனன்
பிறகெழுந்த மற்றஒலிகள் கிளர்ச்சிஎழுப்பி நின்றன


1:14
பூட்டிநின்ற ர
தத்திலே புரவியாவும் வெண்மையாம்
காட்டுகின்ற திறத்திலே குடாகேசன் கண்ணனும்
பாண்டவர் தரப்பிலே பார்த்தவர் மலைத்திட
பூண்டிருந்த சங்கிலே ஒலிஎழுப்பி நின்றனர்


1:15-19
கண்ணன்பாஞ்ச ஜன்யமும் அருச்சுனனின் வேதமும்
ஓநாய் கொண்ட வயிறு போல கொண்ட பீமன் பௌண்ட்ரமும்
கண்டவர்கள் கேட்டிட கேட்டுத்திரும்பிக் கண்டிட
சங்கம்கொண்டு முழங்கினர் அங்கம்சிலிர்க்கச் செய்தனர்

குந்தியவள் புதல்வனாம் மன்னனாம் யுதிட்டிரன்
அனந்தவிஜய சங்கினை எடுத்துஅவனும் ஊதினான்
நகுலனின்ஸு கோசமும் சகாதேவன் புஷ்பகம்

வில்லில்வீரன் காசிராஜன் பெரியவீரர் திட்டத்துய்மன்
துருபதனோ டவனின்பேரர் த்ரௌபதி குமாரரோடு
சிகண்டியோ டிருந்தவந்த சாத்யகிவி ராடமன்னர்
சுபத்திரைகு மாரனும் உற்சாகம்தான் கொண்டனர்
எடுத்துச்சங்கை ஊதினர் மிகுந்தஒலி எழுப்பினர்

எழுந்தசங்கின் ஒலியது வானம்தொட்டுக் கேட்டது
பழுதடைந்த கெளரவரின் மனதில்விழுந்த இடியது
செயலிழந்து நிற்குமந்த நாகமாகச் செய்தது
வயமிழந்த அவர்கள்நெஞ்சம் வெடித்துச் சிதறலானது


1:20-25
அனுமன்கொடியைக் கொண்டவன் தேரிலமர்ந்த அர்ச்சுனன்
திருதன்மக்கள் நோக்கிஎய்ய அம்புகொண்டு வில்லைஏந்தி
இருடிகேசன் என்னும்பெயரின் வாசுதேவன் கண்ணனை
பார்த்தன்பார்த்து நின்றனன் சாரதியை வேண்டினன்

அழிவும்முடிவும் அற்றவ ! எழிலும்அறிவும் உற்றவ !
புரியும்போரில் ஆவல்கொண்டு அணிவகுத்து நிற்பவர்
எவரெவர் என்றுநானும் நன்குகாண லாவதாய்
இருதரப்பி டைநீசென்று தேர்நிறுத்து ஏதுவாய்

திருதன்பெற்ற துரியனே கெடுமதியின் மடையனே
போரில்பொருத விருப்பம்கொண்டு அவனின்மனது மகிழவென்று
உதவிடவே வந்துநின்று இருப்பவர்கள் யாவரென்று
தெரிந்திடவே ஆவல்கொண்டேன் நானும்பார்க்க வழிசெய்யின்று

சஞ்சயனும் கூறினான் பரதகுலத்தின் மன்னவா.!
தனஞ்ஜெயனின் விருப்பம்கேட்டு ரிடீகேசன் தேரில்சென்று
சேனைநடுவில் நிறுத்திச்சொன்னான் துரோணர்பீஷ்மர் முன்னால்நின்று
காண்பாய்பார்த்தா அம்சமாய்..! குருவினிவர் வம்சமே..!


1:26-31
நடுவில்நின்ற அர்ச்சுனன் எதிரில்சுற்றி நோக்கினான்
கூடிநின்ற உறவினர் ஒன்றுவிட்ட தந்தைமார்
ஆடியிருந்த பேரன்மார் ஓடிஓய்ந்த பாட்டனார்
தேடிவந்த மாமனார் கூடியிருந்த நண்பர்மார்

நன்மைவிரும்பி கள்பலர் என்பதாகக் கண்டனன்
மனதில்கலக்கம் கொண்டனன் பரிவால்பின்போல் கூறினன்
அன்புக்குரிய கிருட்டினா போருக்குரிய உணர்வுடன்
கூடிஇருக்கும் உறவினைக் கண்டுஉடலும் நடுங்குதே
எந்தன்வாயும் உலருதே கவலைமனதைப் பிடுங்குதே
மயிரின்கூச்சல் தோன்றுதே சருமம்பற்றி எரியுதே
கையில்பற்றும் காண்டீபமும் கைவிட்டுத்தான் நழுவுதே

நிற்கவிங்கே முடியாது இனியும்என்னால் ஆகாது
என்னைநானே மறக்கிறேன் துர்ச்ச குனம்காண்கிறேன்

சொந்தபந்தம் கொன்றிடும் போரில்நன்மை காண்பது
என்னவென்று நினைத்திடின் ஒன்றுமில்லா தாகுது
கொல்வதாலே கிடைக்கும்வெற்றி அரசஇன்பம் யாவுமே
கொள்வதாகச் சொல்லவில்லை எந்தன்நெஞ்ச மெண்ணமே


1:32-35
மதிப்பில்மிக்க ஆசான்தந்தை பாசமிக்க பிள்ளைபேரன்
பாட்டன்மாமன் மைத்துனர் மற்றும்பல உறவினர்
என்முன்நிற்க மூவுலகும் ஆளும்பேறும் கொண்டிடேன்
ஈடாய்ச்செய்யும் போரில்நானும் என்றுமேதான் சென்றிடேன்


1:36
திருமகள் மணாளநீ சொல்லுபுரி யும்படி
பெறுதற்கறிய உறவினரைப் போரில் கொல்வதெப்படி ?
மகிழ்ச்சிகொள்வ தாசரி ? நினைப்புகொல்லும் தினப்படி
வீழ்ச்சிசெய்து மாய்க்கும்தொழிலில் லாபம்கொள்வ தெப்படி ?


1:37
பே ராசைஉந்த நாமுமே திருதன்பெற்ற பிள்ளையை
நி ராசைகொண்ட மனதுடன் கொல்வதில்லை நியாயமே
சொல்லுநீ ஜனார்த்தன வெல்லுகின்ற போரிலே
கொல்லுவதே வெற்றியா ? கொள்ளுவதே சுகமதா ?


1:38
நண்பர்கூட நிற்கின்றார் கலகம்செய்யப் பார்க்கின்றார்
நாசம்குலத்தில் செய்வதில் பாவம்காண மறுக்கின்றார்
பாசமற்று எதிரிலே கௌரவராய் நிற்கின்றார்
கூசிடாமல் நாமுமேன் தெரிந்து பாவம் புரியணும் ?


1:39
குலமழிய நித்திய வறமழியும் நிச்சயம்
கிலமடைந்து மிகுந்தவர் அறமொழிந்து நிற்பவர்
குலத்தினறம் காப்பவர் குடும்பத்திலே முதியவர்
உயிராய்இவரைக் கொள்ளணும் இப்படியாக் கொல்லணும் ?


அய்யகோ.. அய்யகோ.. 

1:40
குலம்கெடக் குடும்ப வறம்கெடக் குடும்பப்
பெண்கெடும் பெண்மை கெடும்குலம் தனிலே
உரம்கெடும் நிலத்தில் கெடும்விளை பயிர்போல்
விளைசந் ததியால் பயன்இலை பாரில்
விருட் டினி குல உயிரே..!


1:41
கெடும்குலம் தனிலே வரும்ஜனம் அதனால்
விழும்குலம் அதுவும் கொடும்நர கினிலே
அறம்குறை குலத்தில் பரம்உ றை உயிர்க்கு
அளித்துநீர் உணவும் கருதிடல் இலையே

*பரம்உரை உயிர் = பித்ருக்கள்

1:42,43
குடும்பப் பண்பதனை அழிப்பவர் செயலால்
படும்குலம் அறமும் கெடும்நற் செயலும்
கெடுப்பவர்நரகே உறைவதுநிஜமே உரைப்பது அறமே
புலம்படைத் தவனே மக்களைக்காப் பவனே


1:44,45
ஐயகோவிந்தை அரசிலேஆசை புரிவதோபாபம் வருவதோசாபம்
பையனாம்துரியன் தனைஎதிர்போரைக் கொள்தலின்மேல் பின்
பையவேஎன்மெய் கொய்யவே சாவில் உய்தலேமேல்காண்
தெய்வமேகொள்நல் பத்தனின்சித்தம் அறிகுறி யாமே


1:44,45
சொன்னான்விஜயன் எடுபட
செய்தான்வில்லும் எறிந்திட
மனம்தான் கவலையில் நிறைபட
அமர்ந்தான் தேரினில் தரைபட
சொன்னான் திருதன்மனம்பட
கண்ணால்சஞ்சயன் கண்டிட

 



No comments:

Post a Comment