Friday, September 23, 2011

கண்ணன்


கண்ணன்




அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர் 

அவனுக்கு எவனுண்டு நேர் ?
சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார் 

பிறப்புற்ற சிறையானதே 
அந்தச் சிறைகூட அவனாலே சிறப்பானதே

அவனுக்கு கண்ணென்று பேர் 
அது மலர்கொண்ட தேனுண்ணும் வண்டுக்குநேர்

அவனுக்கு மலரென்று பேர் 
அந்த மலர்வீசும் மணம்என்றும் மனம்தன்னிலே 

அவனுக்கு மணமென்று பேர் 
அந்த மணமெங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே 

அவன் அன்பில் கட்டுண்டதேன் ?
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாததேன் 

அவனுக்குக் குளிரென்று பேர்
அந்தக் குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே 

அவன்கொண்ட கவர்ச்சியைப் பார்
அதில் மனம்கொண்ட கிளர்ச்சிக்கு என்னென்றுபேர் ?

அவன் வண்ணம் கருப்பானதே 
பின்பு அதனாலே கருப்பிங்கு மதிப்பானதே

அவனெச்சில் வெண்ணைக்குமேல்
கடல் கடைந்திட்ட அமுதொன்றும் சுவையில்லையே

சிரிப்பென்னைப் பித்தாக்குதே
அந்த சிரிப்பேதான் அதைப்போக்கும் மருந்தாகுதே

விழிச்சுடர்வானத்து தீ
அந்தத் தீச்சுட்டு நெஞ்செல்லாம் குளிர்கின்றதேன்? 

குழலங்கு இசைகூட்டுதே
இன்ப இசைதந்த குழல்அந்த உதட்டுக்குமேல் 

அமிழ்தந்த உதட்டின் உள்ளே
அன்று அவன்தந்த முத்தத்தில் உதித்திட்டதே 

அவன் குறும்பு பொல்லாததே 
அது இல்லாத நாள்நேரம் செல்லாததே

அவன் சொல்லும் பொய்போன்றதே 
அந்தப் பொய்கேட்க மெய்ஓடி நிற்கின்றதே

அவனுக்கு மெய்யென்று பேர் 
என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே 

அவனுக்கு மதுவென்று பேர் 
அந்த மதுவுண்ண மனமிங்கு தெளிகின்றதே

அவன் இருக்கப் பக்கத்திலே
பின் ஏதுண்டு செய்வேலை சொர்க்கத்திலே 

அவன் காணக் கொண்டாட்டமே 
என்றும் அவனின்றி மனதுக்குத் திண்டாட்டமே 

அவனேதான் தூக்கத்திலே 
அவன் இல்லாது மனம்பொங்கும் துக்கத்திலே

யாரங்கு பார்தன்னிலே 
அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே

மலையும்தான் பெரிதானதே 
அவன் தளிர்கொண்ட விரல்மீது குடையானதே 

அவன் போல நட்புக்குமோர் 
அணிசெய்யும் அணியாகத் திகழ்கின்ற தார் ?

அவனுக்கு நீரென்று பேர்
அந்த நீர்பட்டுக் கல்லிங்கு கரைகின்றதே 

அவனுக்கு நிலமென்று பேர் 
அவன்மண்ணுக்கு வந்திட்ட நிலவேதான் பார் 

அவன் வேகம் காற்றானதே 
அதன் மோகத்தில் மனம்பறக்கும் காற்றாடியே 

சிறுவாயில் மண்ணானதே
அது வாய்க்குள்ளே தாய்காண உலகானதே 

சிறிதான அவன்காயமே
அன்று அவன்தொட்டு நின்றிட்ட தாகாயமே 

அவன்செய்த மாயங்களே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே

அவனாட்டக் கால்வண்ணமே
கொண்ட ஓட்டத்தில் சென்றானே காளிங்கனே 

அவனாட்டம் தீராதது
அது கேட்டிட்ட உள்ளங்கள் நேராகுது 

அவன் நெஞ்சம் பஞ்சானது 
அது அன்பற்ற நெஞ்சத்தில் துஞ்சாதது 

அவன்கெஞ்சும் பிஞ்சானது
அன்புத் தாயன்று கொண்டிட்ட நெஞ்சாலது

அவன்கொண்ட கூர்வாளது
போரில் வென்றிட்ட தவன்கொண்ட பேர்தானது 

அவன்நல்ல குணங்கள் தன்னை
நாமெண்ண யுகம்போகும் முடிக்கும் முன்னே

அவன் கமலப் பாதங்களே 
நம் மனம்எண்ணப் போமந்தப் பாவங்களே 

அவன்காணப் பிறந்திட்டச் சேய்
ஆதி சேஷன்தான் கடல்மீது அவன்கொண்ட பாய்

அவன் நாமம் கூறுங்களே
அந்த கல்லென்ற மனம்கரைந்து தேறுங்களே 

அவன்சொன்ன பாதைக்கு பேர் 
நீதேடாதே கிட்டாது கீதைக்கு நேர் 

அதில்சொன்ன வார்த்தை களே 
என்றும் பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல்

யாதும்பே ராகின்ற தே 
'அது' 'அது'வாக யுகம்பட்டு நிற்கின்றதே

-----------------------------------------------------------------------------------

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. கண்ணனின் மறு பெயர் ஸ்ரீதரன்..
    தரமான கவிதைக்கு மறு பெயர் ஸ்ரீதரன்..
    வரம் தருவாய் மாலோலா
    மலர்ந்த முகமும்..
    மாசற்ற நட்பும்..
    சுதாமனும்,கோவிந்தனும் போல..நம் ஸ்நேஹம் ..
    வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே..

    ReplyDelete
  3. நன்றி கண்ணன்...நம் நட்பு இன்று போல் என்றும் தொடர ஆண்டவன் அருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete