Saturday, September 24, 2011

பாரதத்தின் பாத்திரங்கள்


பாரதத்தின் பாத்திரங்கள்


இன்றிதில் அமைந்திருக்கும் பாரதப் பாத்திரங்கள் 
ஒன்றதான் ஒன்றன்பின்னாய்த் தெரிந்திடப் பின்வருவர் 
என்றைக்கோ முடிந்திருந்த சண்டையின் இடையில்இந்தச்
சம்பவம் நடந்ததனால் மறந்திடக் கூடுமென்று 
திரும்பவும் இங்கேயதனை தருகின்றேன் கண்டிடுவீர் ..!


கண்ணன்

ஆயிரம் ஐந்தின்கொண்ட வருடத்தின்முன்னே இங்கு
ஆயர்தம் கொழுந்தில்கண்ட புருடத்தைச் சொல்வதற்கு 
ஆயிரம் யுகங்கள்தோறும் ஆயிரம் நாபடைத்த 
ஆயிரம் ஆதிசேஷன் பிறந்தினும் பாயிரத்தின்
ஆயிரம் பங்கில்ஒன்று சொல்லிட லாகாதன்றோ
சேயுறும் அறிவேகொண்ட குறுமதி மானிடன்நான்
வாயுறுவண்ணம் இங்கு எப்படிச் சொல்வேனென்று
அயர்வுறு மயக்கம்கொண்டு தயங்கியே நிற்கின்றேனே 



அர்ச்சுனன்

பாண்டவரில் அருச்சுனன் மூன்றாவதாய்ப் பிறந்தவன்
வில்லுக்கொரு விசயனென்று சொல்லுவதாய்ச் சிறந்தவன்
வெல்லுமொரு எதிரில்லாது வீரத்திலே திளைத்தவன்
கோர்த்து நாணைச் சேர்ப்பதிலே இடதுவலது அற்றவன் 


இரண்டிலுமே செலுத்துவான் மாறிமாறிக் கொளுத்துவான் 
பார்த்திருக்கும் நேரத்திலே நாணைப் பூட்டிக் கொல்லுவான்
கோர்த்திருக்கும் வில்லைக்கொண்டு பயத்தைப் போரில் மூட்டுவான்
உலகிலன்று வீரத்துக்கே தலைவனாக நின்றவன்

பல்குணத்தில் பிறந்தஇவனும் நல்குணத்தின் நாயகன்
வில்லின்கொண்ட ஆர்வத்தாலே தூக்கத்தையே வென்றவன் 
நல்லவுள்ளம்  கொண்டவரின் நண்பனாக இருப்பவன் 
 நல்மனத்தின் கண்ணனையே சாரதியாய்ப் பெற்றவன்


பார்த்திருக்கப் போரில்சுற்றம் கொல்லமனம் அற்றவன் 
சேர்த்திருக்கும் தேரிலின்று கீழிறங்கி உற்றவன்
சார்ந்திருந்த கண்ணனாலே தேற்றமனம் பெற்றவன்
வரிப்பதாக நாமும்கொள்ள கீதை சொல்லப்-பெற்றவன்

கர்ணன்

பாண்டவரில் ராதேயன் குந்திக்குத்தான் தலைமகன் 
எனினும்கடைசி வரையிலுமே பிறப்பறியா இழிமகன்
கேடாயெண்ணம் கொண்டதுரியன் நண்பனாகப் பெற்றவன்
கூடாநட்பு கொண்டதாலே இருளில்சென்று சேர்ந்தவன் 

தானத்திலே வானவன் மானத்திலே மானவன்
உயிரைக்காக்கும் கவசத்தையும் தானமாகக் கொடுத்தவன் 
வீரத்திலே ராதேயன் விஜயனுக்கு சமனவன்
எனினுமந்த துரோணருக்கு அவனுமில்லை மாணவன்

கேடில்லாத சூரியனின் அருளில் பிறந்த கோனவன் 
பேடில்லாத அவனுமொரு வீரத்தாயின் திருமகன் 
குடையும்வண்டு தொடையிலுற்றும் பொறுமைகாத்தக் கோமகன் 
அடைந்துசாபம் அதற்குறவும் மனதில் அமைதிகாத்தவன் 

மாசில்லாத நட்பதுவே வாழ்விலவன் கொண்டது 
வீசும்காற்றின் மழையெனவே தானமவன் தந்தது 
கூசுமொரு நாவிலாத உலகில் அவனும்கொண்டது 
வேசிமகன் எனும்பெயரே கடைசிவரையில் தானது

வறுமைவாழ்வில் தோன்றும்போது வெட்கம்கெட்ட உலகது
வலியச்சென்று அவனிடமே தானமாகக் கொண்டது 
வலியையொன்றே பதிலெனவே அதுவும் தந்துசென்றது 
கலியின்கொடுமை யாவது விதியின்வலிமை தானது

வீரர்பிறகு தோன்றினர் வில்லில்விசயர் ஆயினர் 
போரில்நூறு வீரரைக் கொன்றுவீழ்த்திச் சாய்த்தனர் 
நேரில்வந்து கேட்பவர் வெறுங்கைகொண்டு சென்றிலர்
என்றுகூறிப் போற்றிடவே கர்ணன்போல யாருளர் ?

ஈடில்லாத கொடையவன் இறந்தும்நெஞ்சில் வாழ்கிறான்
தாயைக்கொண்ட போதிலும..னாதையாக  வாழ்ந்தனன்
தாயும்கொண்ட மடிக்கு-யிர் உள்ளவரை ஏங்கினன்  
கேடில்லாத தர்மத்தாயின் பிள்ளையென்றே ஏகினன்..!

திரௌபதி

துருபதனின் மகளவள் பாண்டுராஜன் மருமகள்
பார்புகழும் பாண்டவரின் மனைவியந்தத் திருமகள்
கூரிழந்த கௌரவரால் சபையிலிழுக்கப் பட்டனள்
பார்சிரிக்கும் வண்ணமந்த  கெளரவரும் நடந்தனர்


கூறுகின்ற நாவும்கூச துரியன்பேசிச் சிரித்தனன்
கூருகெட்ட துச்சாதனன் சேலைபற்றி இழுத்தனன்
சீர்மிகுந்த பரதமண்ணில் பெண்மைசிறுமை செய்தனன்
புலியைப்போல துச்சனந்த  மானைச்சபையில் துரத்தினன்


முயலைவேடன் பிடிப்பதுபோல் கேசம்பற்றி வெருட்டினன்
ஊற்விழியாள் பாண்டவரை மாறிமாறி அழைத்தனள்
சூதின்வழி சென்றதனால் தருமன்தலை கவிழ்ந்தனன்
மாதைப்பற்றி இழுத்துதுச்சன் கேசமவிழ்த்துச் சிரித்தனன்


கோதிலாத திரௌபதியின் சேலைபற்றி அவிழ்த்தனன்

பீஷ்மர்துரோணர் இருவரையும்கேவி உதவி கேட்டனள்
தேறும்வழி கேட்டுச்சபையில் கதறிக்கதறி அழுதனள்
கூறுமொழி ஒன்றிலாதோர் சபையில்தலை கவிழ்த்தனர்


பாவிசெயலைத் தடுக்கவங்கு ஆளில்லாமல் சோர்ந்தனள்
வேறுவழி இல்லைஎன்று கடவுளையே நினைத்தனள்
தாரைவழியும் கண்ணைமூடி கோவிந்தன் பேர்கூறினள்
சரணமென்று கைகள்கூப்பி அவனைமனதில் நினைத்தனள்


காலைப்பிடித்த முதலைகொன்று கஜனைக்காத்த மாலவன்
நூலில்படிக்க எழுதிடாத வேதத்துக்கே நாயகன்
காதில்விழுந்த திரௌபதியின் அபயக்குரல் கேட்டனன்
பாலில்விளங்கும் கண்ணனுமே விரலைஉடனே அசைத்தனன்


நூலில்பட்டு ஆடையங்கு சேலையாக வந்தது
வயலில்பட்டு ஓடுமந்த ஓடையாக வளர்ந்தது
விலக்கில்பட்ட திரௌபதியின் மானம்காத்து நின்றது
 உலகம்பின்பு கண்டிடாத அற்புதமாய் அமைந்தது


செயலில்சோர் வடைந்ததுச்சன் தரையில்சாய்ந்து விழுந்தனன்
சபையிலிருந்த அனைவருமே எழுந்துநின்று தொழுதனர்
இறைவன்கருணை அற்புதத்தை எண்ணிஎண்ணி வியந்தனர்
கொடியதுரியன் மடியும்நாளும் தூரமில்லை என்றனர்


உண்மையங்கு வென்றது பெண்மைமானம் பிழைத்தது
பேதைவிழித்து எழுந்தனள் கோவிந்தனைத் தொழுதனள்
எழுந்தகோபம் அடங்குமுன்னே சபதம்செய்யத் துணிந்தனள்
செயலிழந்த சபையினரும் அமைதிகொண்டு நோக்கினர்


எழுந்தாங்கு பாஞ்சாலி பிழம்பாய்நின்று கூறினாள்
அவிழ்ந்தகூந்தல் அவிழ்ந்ததே தழலாய்நெஞ்சம் எரியுதே
அழிந்ததுச்சன் பிளந்தநெஞ்சில் வழியும்குருதி பூசியே
அவிழ்ந்தகூந்தல் கட்டுவேன் எரியும்நெஞ்சை ஆற்றுவேன்

சத்தியமிது சத்தியம் நெஞ்சில்நிற்கும் நித்தியம்
சாதின்பெண்மை மிரண்டது சபதம்செய்து நின்றது
சூதின்பட்ட கௌரவர் நெஞ்சில்கிலியைத் தந்தது
நாதியற்ற மாந்தருக்கு தெய்வம் துணைநின்றது

போர்முடிக்கக் காரணமாய் இந்தசபதம் அமைந்தது
சூலில்கொண்ட தாய்பிறக்கும் பெண்குலத்தை இழிப்பது
வாலில்பட்ட தீயிலுற்ற இலங்கைபோ லெரிக்குமென்று
நாளைவந்த மாந்தருக்கோர் படிப்பினையாய் நின்றது


தொடுத்தபோரும் நின்றது எடுத்தசபதம் முடிந்தது
பகைவிடுத்து வாழ்க்கைநடத்த எல்லோர்க்குமா முடியுது?
மறைந்ததுரியன் நண்பனாம் துரோணர்பெற்ற புதல்வனாம்
திறம்படைத்த அவனின்பெயர் அஸ்வத்தாமன் என்பதாம்


கொதித்தசினமும் மிஞ்சிட வஞ்சம்தீர்க்கும் நெஞ்சினன்
வதைத்துக்கொன்று பாண்டவர் வம்சமழிக்க எண்ணினன்
கத்திஎடுத்து விரைந்தனன் கொடுமைஇழைக்கக் கிளம்பினன்
படுத்துறங்கும் பாண்டவரின் மைந்தரையே கண்டனன்

பிடித்தவஞ்ச உணர்ச்சியினால் படித்தவற்றை மறந்தனன்
துடிக்கத்துடிக்கக் கொன்றனன் படுத்திருந்த பாலரை
முடித்தசெயலின் மகிழ்ச்சியில் சினமும்தணியப் பெற்றனன்
விடுத்துஅந்த இடத்தையே விரைந்துஓடிச் சென்றனன்

நடந்தகொடுமை தெரிந்தது தாயின்மனது அழுதது
புரிந்ததுயார் என்பது தெரிந்திடவே செய்தது
கொதித்துவிஜயன் எழுந்தனன் காண்டீபத்தை எடுத்தனன்
பிடித்திழுத்து வந்தனன் தாயின்முன்னே நிறுத்தினன்

பார்த்தன்அவனை திரௌபதிமுன் கொன்றிடவே நினைத்தனன்
பார்த்த-தாயோ மன்னித்தவனை விட்டிடவே சொல்லினள்
கொன்றவனின் தாயின்கண்ணீர் நெஞ்சில்நிறுத்திப் பார்த்தவள்
சென்றவனைக் கத்தியின்றி அன்பினாலே கொன்றனள்


கேட்டிலுறு பாதகம்தான் அஸ்வத்தாமன் செஞ்சது
பாகிலுறு இனிப்பதுவாம் பாஞ்சாலியின் நெஞ்சது 
நாட்டினிரு கண்களென்று பெண்களையே சொன்னது
த்ரௌபதிபோல் தயைமிகுந்த தாயாலன்றோ வந்தது..!

திருத ராட்டிரன்


துரியன்தன்னைப் பெற்றவன் பாண்டுவுக்குப் பெரியவன் 
கண்ணில்பார்வை அற்றவன் பாசம்நிறையப் பெற்றவன் 
விண்ணில்உய்யும் கண்ணன்வந்தும் போரைநிறுத்த மறுத்தவன் 
அரியணையில் அமர்ந்திருந்தும் அறிவில்லாத தரித்திரன் 

சஞ்சயன்

மன்னன்திருத ராட்டிரன் ஒளியில்லாத நேத்திரன் 
மன்னனுக்கு சஞ்சயன்தான் நம்பிக்கையின் பாத்திரன்
தேருக்கவன் சாரதி மன்னனுக்கு ஓர்கதி
கோரிக்கொண் னன்னதி தூரநோக்கும் பேரதி 
சயத்தைஅங்கு யாசகம் வழங்கியவர் வ்யாசராம்
போரைநேரில் கண்டதாய் மன்னனுக்குச் சொல்லவாம்

பீஷ்மர்

குருகுலத்தின் மூத்தவர் பீஷ்மரே பிதாமகர் 
சிறியஇளமை வயதிலே பெரியவிரதம் கொண்டவர்
பருவஉணர்ச்சி கொன்றவர் விரைவில்புலனை வென்றவர்
உரியகடமை புரிவதிலே யாருமில்லை இவர்க்கிணை

தருமம்அனைத்தும் தெரிந்தவர் தருமனுக்கே உரைத்தவர் 
பெருமைமிகுந்த கங்கையின் அருமையான மகனிவர்
இருக்கும்வரையில் துரியன்சிறுமை போக்கமிகவும் முயன்றவர்
இறக்கும்நிலையில் காலனையே காக்கவைக்க இயன்றவர்

துரோணர்

துரோணமென்னும் பதமது பாத்திரத்தைக் குறிப்பது
உலகிலவரும்பிறந்தது தாயும்கொண்டகருவிலன்று பாத்திரத்தில்தானது 
வலுவில்சிறந்த அவரின்பெயரின் காரணமா யிருக்குது
அவருக்கிணை இல்லைபோரின் சாத்திரத்தில்தானது

அந்தணராய் வளர்ந்தவர் அஸ்திரத்தில் சிறந்தவர்
சென்றுவங்கு கெளரவரின் குலகுருவாய் இருந்தவர் 
கொன்றுபகை முடிக்கும்விஜயன் சீடனாகப் பெற்றவர் 
பெற்றுஎடுத்த மகனுக்கிணை யாகஅவனை நினைப்பவர்

போரின்கலைகள் அறிந்தவர் தேரில்போரும் புரிபவர் 
தேறும்கலையின் சீடனாக வேடனொருவன் வந்தனன் 
கூரினம்பு எய்யும்திறனில் பார்த்தனுக்கு நிகரவன்
நேரில்வந்து கற்றிடாமல் முயற்சியால்ப..யின்றவன்

திறமும்காட்டி குருவின்முன்னே சிரம்பணிந்து நின்றனன் 
குருவின்பாத காணிக்கையாய் கொடுக்கவேண்டு மென்றனன்
விரலைக்காட்டி வேண்டுமது என்றுகுருவும் கேட்டனன்
விரலைவெட்டி கணத்தில்கொடுத்து குருவின்நெஞ்சம் தொட்டனன்

சிறுவன்எனினும் பெரியசெயலை புரிந்துபெருமை கொண்டவன் 
அறிவதான குருவின்பக்தி இலக்கணமாய் நிற்பவன் 
புரிந்தவரிய செயலின்மூலம் குருவின்நெஞ்சில் நிறைந்தவன் 
விரைவில்மனதில் அழிந்திடாத ஏகலைவன்அவன் பெயர்

அபிமன்யு

பார்த்தன்மனைவி சுபத்திரை வயிற்றில்பிறந்த தாமரை
பரதவம்சம் விளங்கவென்று மண்ணில்வந்த ஒர்நிறை
கண்ணனேமா..மன்முறை இவனின்தந்தை யோபிறை
மறைந்திருந்த பாண்டவர் இருந்தநாட்டின் மாப்பிளை

கருவில்-போரைக் கற்றவன் விரைவில்-சிறப்பை பெற்றவன்
பெறலில்அறிய வீரசொர்க்கம் இளமையிலே உற்றவன்
வீரச்செயலில் இணையில்லாத சாகசங்கள் புரிந்தவன்
பரதப்போரில் முக்கால்குருணிப் படையைத்தனியே அழித்தவன்

துணிந்துசென்று பத்மவ்யூக அமைப்பையுடைத்துச் சென்றவன்
தனித்துநின்று இவனைவெல்ல எவனும்திறமை அற்றவன்
சூழ்ந்திருந்து கொடுமையாக அறுவரிவனைக் கொன்றனர்
பணிந்துநின்று பயந்திடாத ஒருவனாகச் செத்தவன்

தருமன்

பாண்டவரில் மூத்தவன் தருமதேவன் வரமிவன்
வேண்டிஅறத்தைக் கற்றிடவே எந்நேரமும் முயல்பவன்
கொண்டவறத்தின் மாட்சியாலே யாரும்போற்ற வாழ்ந்தவன்
பாண்டவரின் நேர்மைக்கெல்லாம் மூலமாக நின்றவன்


மன்னனாகும் தகுதி கொண்டும் தம்பிக்கதைத் தந்தவன் 
பின்னால்வரும் யாருக்குமே நம்பிக்கையைத் தந்தவன்
சூதில்மாதைத் தோற்றவன் சூதில்லாதத் தூயவன்
போதுமென்ற நெஞ்சம்கொண்ட குந்தித்தாயின் தலைமகன்

துரியோதனன்

திருதன்நூறு பிள்ளைகளில் துரியன்முதலில் பிறந்தவன்
கதையின்சமரில் சிறந்தவன் மனதில்மமதை கொண்டவன்
பிறந்தநூறில் துச்ச்சனுடைய அன்பைமிகவும் பெற்றவன்
அறிவிலில்லை பாண்டவரின் நூறிலொரு பங்கிவன்


இருந்திடினும் இவனுக்கிருக்கு ஒரேஒரு நற்குணம்
அருமைநண்பன் கர்ணனிடம் இவனும்கொண்ட நட்பதாம்
பெருமையாக கொண்டுஅவனை வாழ்க்கையிலே நம்பினான்
அருமைமனைவி மடியில்-கர்ணன் கையைக்கண்டு மன்னித்தான்


விருப்பதான சூதில்-கர்ணன் தன்னைமறந்து செய்திட்டான்
பொறுப்பதான செயலுமில்லை என்றுஅதனை எண்ணித்தான்
றுத்ததான முகத்துடனே நடுங்கித்தலை குனிந்திட்டான்
அறுப்பதான வாளும்நன்று என்றுஎண்ணி வெட்கித்தான்


சிரிப்பதான முகமும்கொண்டு துரியனன்று சொன்னதோ
தெறித்தமுத்தை கீழிருந்து எடுக்கவோநான் கோர்க்கவோ
புரிந்திடாத எண்ணத்திலேன் பயமும்நீயும் கொள்வதோ ?
தங்கைமடியும் தாயின்மடியே திகைத்துநீயும் நிற்பதோ ?


கர்ணன்சிலிர்த்து நின்றனன் மன்னன்துரியன் தழுவினன்
மரணம்வரையில் உனதுநன்மை ஒன்றேஎந்தன் நினைவிலே
நண்பன்கரைந்து சொல்லினன் நட்புக்கடிமை ஆயினன்
பின்புதாயின் அணைப்பினையும் இதனாலன்றோ மறுத்தனன்

சகுனி

திருதன்மைத்து..னன்இவன் துரியன்மாம னானவன்
மருகனருகி லிருந்துஎன்றும் ஆலோசனை சொல்பவன்
சிரித்துப்பழகும் முகத்தின்பின்னே சோகம்மறைத்து இருந்தவன்
அரித்துவிழுங்கும் கொடுமைகொண்டு வஞ்சம்தீர்க்க வாழ்ந்தவன்

பெரியபா ரதத்திலே நிற்கும்மனதில் போரதே
குருவின்வம்சம் முழுதுமே அழித்துச்சென்ற தும்அதே
போருக்குற்றக் காரணம் இருந்ததிரண்டு பேரிடம்
ஒருவன்சகுனி யென்பது முழுதும் படிக்கத்தெரிந்திடும்

சகுனிதங்கை காந்தாரி சாதகத்தில் கோளாறே 
இருக்கும்இளமை வயதிலே பிறக்கும்விதவைக் கோலமே 
தெரிந்துகரந்து சென்றனர் அறிவில்தெளிந்த சோதிடர் 
அறிந்துஇதனை கொண்டதும் மனதில்கவலை கொண்டனர்

வழியேதேனும் சொல்லதிரும்பச் சோதிடரை நாடினர்
மிருகமொன்றை மணந்திட பிறகுஅதனைக் கொன்றிட
வருமேவிதவைக் கோலமே விலகுமந்த தோஷமே 
சிறந்தபரி காரமாய் சோதிடரும் கூறினர்

பிறந்தஇந்த வழியினாலே மனதில்மகிழ்ச்சி கொண்டனர் 
சிறந்தொரு ஆட்டைக்கண்டு மணமும்முடிக்கச் செய்தனர் 
பிறகுஆட்டைக் கொன்றனர் மகளும்விதவை ஆயினள் 
பறந்துதோஷம் சென்றதாலே மணமகனைத் தேடினர்

திருதன்தன்னை மணமகனாய்த் தெரிந்தெடுத்துக் கொண்டனர் 
பிறந்தமகளைப் பேரரசின் ராணியாக்கிப் பார்த்தனர்
வருவதாக இருந்ததுன்பம் போக்கியங்கே சிரித்தனர் 
பிறகுமது வருகிறது என்பதவர் அறிந்திலர் 

சிறிதுகாலம் சென்றது உண்மைதெரிய வந்தது
குருடானென்ற காரணத்தால் விதவைமணம் முடித்தனர்
திருடன்கொண்ட செயலைப்போலே மறைத்துமதை செய்தனர் 
புருடனான என்னையென்னப் புல்லெனவா நினைத்தனர் ?


சினந்துநின்றான் திருதனே விரந்துமிட்டான் ஆணையே 
பிடித்திடுவீர் அவர்களை அடைத்திடுவீர் சிறையிலே 
குடும்பம்முழுதும் சிறையிலிட்டு பாடமவர்க்குப் புகட்டுவீர்
நடுங்கிச் சென்றவீரரும் சிறையிலவரை அடைத்தனர்

சிறையிலிருந்த குடும்பம்முழுதும் கொடுமைப்பட்டு அழுதனர்
குறைந்தமதியில் மன்னனவரைச் சிறுகக்கொல்லச் சொல்லினன்
ஒருவர்தின்னும் சோறளித்துப் பகிர்ந்துஉண்ணச் சொல்லினன்
ஒருவர்பின்னர் ஒருவராகச் சாகும்வழி செய்தனன்

அறிவுத்திறனில் சிறந்தசகுனி அதனைத்தின்று பிழைத்தனன்
மற்றவர்கள் உணவில்லாமல் பசியால்மடிந்து போயினர்
பெற்றவனின் தொடைஎலும்பால் பகடைசெய்து கொண்டனன்
உற்றநேரம் பயன்படுத்த எண்ணியதனைக் கொண்டனன்


காலம்செல்ல மன்னன்மனதில் சினமும்குறையப் பெற்றனன்
காலில்ஊனம் கொண்டசகுனி கோலம்கண்டு விடுத்தனன் 
செயலில்நன்றி காட்டிடவே சகுனியங்கே தங்கினன்
புயலின்பின்பு அமைதிபோல சமயம்நோக்கி இருந்தனன்

குலம்முழுதும் அழிக்கும்வழி யென்னவென்று நினைத்தனன்
அறத்திலொழுகும் பாண்டவரை துரியன்கெடுக்கச் செய்தனன்
திறம்படவேச் சொல்லியவரைச் சூதுமாடச் செய்தனன் 
மறந்துமெவரும நினைந்திடாத பாதகத்தில் தூண்டினன்

திருதன்வம்சப் பூண்டுமழித்த போருக்கிவன் காரணம் 
சூதில்வெல்ல தந்தைதந்த பகடையுமோர் காரணம்
பொருதிநின்று தானழிந்து சென்றதவன் விண்ணகம் 
விரைந்துவெற்றி செய்திசொன்ன தந்தைகொண்ட உறைவிடம்



No comments:

Post a Comment